என்னமோ நடக்குது – விமர்சனம்

Yennamo Nadakkuthu_00010 எதிர்பார்ப்பு…. தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் பேசப்படும் ஒரு வார்த்தை. சில படங்களை எதிர்பார்த்து போய் பார்த்து ஏமாந்து விடுவோம். சில படங்களை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் பார்த்து அதிகம் ரசிப்போம். இந்த ‘என்னமோ நடக்குது’ இதில் இரண்டாம் வகை. ‘என்னமோ நடக்குது’ என்ற தலைப்பே என்பதே ஏதோ ஒரு விறு விறுப்பான த்ரில்லர் படமாக இருக்கும் என்று மட்டுமே படம் பார்க்கச் செல்லும் முன் நம்மால் ஊகிக்க முடிந்த ஒரு விஷயமாக இருக்கும். மற்றபடி திரையரங்கிற்குள் நுழைந்து படத்தைப் பார்க்க ஆரம்பித்ததும், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது எந்த விதத்திலும் சொல்ல முடியாத ஒன்றாகவே அமைந்திருக்கிறது. அறிமுக இயக்குனர் ராஜபாண்டி முதல் படத்திலேயே அவரைப் பற்றி பேச வைத்து விட்டார். சுவாரசியமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, நடிகர்களுக்காக கதாபாத்திரங்களா, கதாபாத்திரங்களுக்காக நடிகர்களா என யோசிக்க வைக்கும் அளவிற்கு சரியான தேர்வு, தேவையற்ற காட்சிகள் இப்படி எதுவும் இல்லாமல் தெளிவான ஒரு படத்தைக் கொடுத்து நடப்பதை ‘என்னமோ’….என காட்டாமல் நன்றாகக் காட்டியிருக்கிறார். போஸ்டர் ஒட்டும் கான்டிராக்ட் வேலையைச் செய்பவர் விஜய் வசந்த். இவருக்கும் நர்ஸாக இருக்கும் மஹிமாவுக்கும் காதல். கனடாவிற்குச் சென்று மேல் படிப்பு படிக்க நினைக்கும் மஹிமாவுக்காக அவரது அப்பா வட்டிக்குக் கடனாக வாங்கி கட்டிய 5 லட்ச ரூபாய் பணம், ஏஜண்டால் ஏமாற்றப்படுகிறது. கடன் கொடுத்தவர் பணத்தைக் கேட்டு மிரட்டல் விடுக்கிறார். காதலிக்காக விஜய் வசந்த் பணத்தை புரட்டுவதற்காக, வில்லன் ரகுமானுக்காக சில பணப் பரிமாற்ற வேலைகளைச் செய்கிறார். அப்போது 10 கோடி ரூபாய் பணத்தை விஜய் வசந்திடமிருந்து யாரோ கொள்ளை அடித்து விட, விஜய் வசந்தை ரகுமான் மிரட்டுகிறார். காதலியைக் காப்பாற்றிக் கொள்ளவும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ளவும் விஜய் வசந்த் என்ன செய்கிறார் என்பதே படத்தின் மீதி கதை. விஜய் வசந்த், இதற்கு முன் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், இந்த படத்தின் கதையும், கதாபாத்திரமும் அவருக்காகவே உருவாக்கப்பட்டது போல தன்னை படத்துடன் ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். பெரிய ஹீரோக்கள் பண்ண வேண்டிய ஒரு ஹீரோயிசமான கதையில் விஜய் வசந்தைப் பொருத்திப் பார்த்த இயக்குனரை அதிகம் பாராட்ட வேண்டும். இயக்குனரின் நம்பிக்கையை துளி கூட வீணாக்காமல் அந்த கதாபாத்திரத்திற்காக நியாயமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் வசந்த். ‘சாட்டை’ படத்தில் ஹீரோயினாக நடித்தவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். நடிப்பு, அழகு இரண்டிலுமே பெரிய முன்னேற்றம் தெரிகிறது. ஒரு ‘லோக்கல்’ பையனான விஜய் வசந்த், தன்னைச் சுற்றி வருவதை விரும்பாதவர், கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது காதல் கொள்வது யதார்த்தமாக வெளிப்பட்டுள்ளது. தொடர்ந்து நல்ல படங்களையே தேர்வு செய்து நடித்தால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வருவார் மஹிமா. விறுவிறுப்பான த்ரில்லர் படமாக இருந்தாலும் படத்தை இடைவேளை வரை தாங்கிப் பிடிப்பவர்களில் சரண்யா முக்கியமானவர். சென்னைத் தமிழைப் பேசி அப்படியே அந்த கதாபாத்திரத்தை நம் கண்முன் நிறுத்தி விடுகிறார். அது எப்படி அவர்களுக்கு மட்டும் எல்லாவிதமான அம்மா கதாபாத்திரங்களும் அம்சமாகப் பொருந்திப் போகிறது எனத் தெரியவில்லை. ஆனாலும், விஜய் வசந்த் அம்மாவான இவரை அடிப்பதும், எட்டி உதைப்பதும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. யதார்த்தமாக சொல்கிறோம் என்பதற்காக இப்படிப்பட்ட காட்சிகளை வைத்திருப்பதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். படத்தின் மெயின் வில்லனாக அடியாளாக இருந்து அரசியல்வாதியாக மாறும் ரகுமான். இவருக்கு உதவியாளராக தம்பி ராமையா. இவர்களது கூட்டாளியாக சுகன்யா. இவர்கள் செய்யும் வங்கி சம்பந்தமான பணப் பரிமாற்ற வித்தைகள் பலருக்குத் தெரியாத ஒன்று. அடப்பாவிகளா….? என ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகே பிரபு வந்தாலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. ‘கும்கி’ அஸ்வின், நமோ நாராயணன், வின்சென்ட் அசோகன், அழகம்பெருமாள் இவர்களும் படத்தில் இருக்கிறார்கள். பிரேம்ஜி அமரன் பின்னணி இசையில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். நல்ல படம் அமைந்தால்தான் நல்ல பெயரும் கிடைக்கும். இந்த படத்தில் பிரேஜிக்கு அந்தப் பெயர் கிடைத்திருக்கிறது. ‘ஓரக்கண்ண சாச்சு…நீ, மீச கொக்கு….’ பாடல்கள் ரசிக்க வைத்துள்ளன. ஜி.ராதாகிருஷ்ணனின் வசனம் பல இடங்களில் கைதட்டலைப் பெறுகிறது. குறிப்பாக “என் கடனைக் கொடுக்கிறதுக்கு அஜித்தை ஏண்டா அடகு வைக்கிற” என நமோ நாராயணன் பேசும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது. ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவும், பிரவீண் – ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் இயக்குனருக்கு பக்கபலமாக அமைந்துள்ளன. இடைவேளைக்குப் பின்னர் வழக்கமான ‘பழி வாங்கும்’ கமர்ஷியல் சினிமாவாக பயணிக்க ஆரம்பித்ததை தவிர்த்திருக்கலாம். ஒரு சீரியசான த்ரில்லரில், கடைசி நேர ட்விஸ்ட்டுக்காக ‘சினிமா துப்பாக்கி’ என ‘என்னென்னமோ’ நடத்தி விட்டார்  இயக்குனர். இருந்தாலும் இயக்குனர் ராஜ பாண்டியை இந்த படம் தமிழ்த் திரையுலகில் ராஜ நடை போட வைக்கும். என்னமோ நடக்குது – நல்லதே நடக்கும்…  

Read Previous

அமலா பால் நல்ல மனம் கொண்டவர் – இயக்குனர் விஜய்

Read Next

நாம் நேசிக்கும் வேலை நம்மை கைவிடாது – காளி

Most Popular