‘ஒருதலை ராகம்’ படத்தில் நாயகனாக அறிமுகமான சங்கர், தற்போது இயக்குனராக அவதாரமெடுத்து மணல் நகரம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் ‘ஒருதலை ராகம்’ படத்தின் மூலம் அறிமுகமான கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
‘ஒருதலை ராகம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணமான டி.ராஜேந்தர் படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்திப் பேசியதாவது,
”நான் கடந்த 2 நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளில் பரபரப்பாக பேசினேன். புயல் வீசியது என்றார்கள். இங்கு. புயலாக வரவில்லை தென்றலாக வீசப் போகிறேன்.
நான் என்றும் பழையதை மறக்கமாட்டேன். நான் ‘ஒருதலை ராகம்’ படத்தை எடுத்த மாயவரம் ஏவிசி கல்லூரியை பார்த்தாலே இன்றும் விழுந்து கும்பிடுவேன். 34 ஆண்டுகளாக அங்குபோனது இல்லை. இந்த ஆண்டுதான் போகலாம் என இருக்கிறேன்.
இன்று எல்லாம் மாறி விட்டது. கேட்டால் ட்ரண்ட் என்கிறான். அன்றைய காதல் நாகருகமாக இருந்தது. ஆனால் இன்று மாறிவிட்டது. நூன் ஷோவில் பிக் அப் செய்து நைட் ஷோவில் பேக் அப் செய்துவிடுகிறார்கள். அன்று கதைக்காகப் படம் எடுத்தார்கள், இன்று சதைக்காகப் படம் எடுக்கிறார்கள். அன்று குத்துப் பாட்டு வைத்தார்கள். இன்று வெத்துப் பாட்டு வைக்கிறார்கள்.
இன்று தமிழ் சினிமாவில் அம்மா, ஆத்தா, தங்கை சென்டிமென்ட்டை மதிப்பதில்லை. அப்படி வைத்தால் சீரியல் என்கிறான். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இன்றும் அம்மா, ஆத்தா, தங்கை சென்டிமென்ட்டை மதிக்கிறான்.
இன்று புரிகிற மாதிரி பாட்டு இருக்கக் கூடாது. கேட்டால் ட்ரண்ட் என்கிறான். நான் 108 குரலில் பேசுவேன், இன்றுவரை ஃபீல்டில் இருக்கிறேன். ஆனால், என்னையே கிண்டல் செய்கிறார்கள்.
உங்களை யாராவது கிண்டல் செய்தால் கவலைப்படாதீர்ககள். உஉங்களிடம் திறமை இருந்தால் கிண்டல் செய்வான். உன் மேல் பொறாமை இருந்தால் கிண்டல் செய்வான் உன்னை யாரும் சட்டை செய்யவில்லை என்றால் நீ சடை என்று அர்த்தம். யாரும் உன்னைக் கிண்டல் செய்தால் கவலைப் படாதே.
அன்று ‘ராகம் தேடும் பல்லவி’யில் சங்கரை நான் ஒரு இயக்குநராக காண்பித்தேன். இன்று அது பலித்து விட்டது
எனக்கு மலையாளத்தில் படமெடுக்க ஆசை. அங்குதான் கலாச்சாரம் இருக்கிறது. அங்குதான் குடும்பக்கதை ‘திரிஷ்யம்’ ஓடுகிறது. மலையாளத்தில்தான் மம்முட்டி, மோகன்லால், திலீப் என எல்லாரும் வேட்டி கட்டி நடிக்கிறார்கள். இங்கு வேட்டி கட்டி நடிக்கிறார்களா? எல்லாரும் ஜீன்ஸ் போட்டு நடிக்கிறார்கள்” என்றார்.
‘மணல் நகரம்’ படத்தின் இசையை வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தி அவர்களக்கு நினைவுப் பரிசுகளையும் டி.ராஜேந்தர் வழங்கினார்.
‘மணல் நகரம்’ திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.