கடந்த ஆண்டின் வசூல் சாதனையாளரான சிவகார்த்திகேயன், இந்த ஆண்டு வெளியான ‘மான் கராத்தே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘டாணா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது.
இதற்கடுத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன் ராம் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் பற்றித்தான் இதுவரை முடிவுக்கு வராமலே இருந்தார்கள், இப்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படப்பிடிப்பில் இருக்கும் போதே சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அப்போது அவருக்கு பேசப்பட்ட சம்பளத்தை மட்டுமே இப்போது தருவோம் என்று திருப்பதி பிரதர்ஸ் உறுதியாக இருந்ததாம். ஆனால், அந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் அவரை வேறு ஒரு உயரத்திற்குக் கொண்டு போனது.
இப்போதும் அதே பழைய சம்பளத்தைக் கொடுத்தால் அவர் எப்படி வாங்குவார். பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் என்ற ரீதியில் இருவருக்கும் பொதுவாக ஒரு சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டதாம்.
அந்தத் தொகை தற்போது சிவகார்த்திகேயன் வாங்கும் தொகையை விட குறைவு என்கிறது கோடம்பாக்க வட்டாரம்…