பார்த்திபன் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெளியாக உள்ளது.
இந்த படத்தின் வெளியீட்டைப் பற்றி பார்த்திபன் அவருடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான இரண்டு படங்களான ‘ஜிகர்தண்டா, சரபம்’ ஆகிய இரண்டு படங்களும் கொரியன், ஜப்பான் படங்களின் காப்பி என பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில் அவருடைய பதிவில் “அந்நியன் எவனின் கருவையும் களவாடாமல்” என்று அவர் பாணியில் குறிப்பிட்டுள்ளது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.
அவருடைய பதிவு இதோ….
“ஸ்ஸ்ஸ்! அப்பாடா …. எப்படா? ரிலீஸ் என முடிவாகி (ஆகஸ்ட் 15) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளை ஒப்பந்தம் செய்தல், விளம்பர தீப்பந்தங்கள் ஏற்றுதல், வியாபார தந்திரங்களுக்குள் சிக்காமல் # ktvi இளம் ரசிகர்களின் இமைகளுக்கும் கண்களுக்கும் இடையே சிம் கார்டாய் இணைப்பது எப்படி? …
ஆள் வைத்தாவது நம் மூச்சை வாங்க வைத்துவிட்டு, சற்று நேரம் நாம் ஓய்வெடுக்கலாமா என யோசிக்க வைத்தது சில நாட்களின் வேலைப் பளு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆயிரம் பேரை வாழ வைத்தாலும் ‘என்னை வாழ வைக்கும்’ என ரசிகர்களை குறிப்பிடுவார். அப்படி அந்த மகானே குறிப்பிட்ட ரசிகர்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் ‘என்னை வாழ வைக்க’…
அது, ஆகஸ்ட் 15-இல் வெளியாகும் என் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை அன்றே பார்த்து வெற்றியாக்குவது!
ஏன்?… அந்நியன் எவனின் கருவையும் களவாடாமல், இப்படி இரவெல்லாம் கண் விழித்து கவனமாய் செதுக்கிய ஒரு ‘ஒரிஜினல்’ திரைப்படத்திற்குக் கிடைக்கும் மகத்தான வெற்றியே என்னை உயிர்ப்புர செய்யும்.
எவ்வளவு நாளைக்குதான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?”, என்று அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எதையும் வெளிப்படையாகப் பேசும் பழக்கம் கொண்ட பார்த்திபனின் இந்த பதிவும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை…