‘மண் வாசனை’ கிராமத்துப் பக்கம்தான் வீசும் என்று யார் சொன்னது…எங்கள் வட சென்னைப் பக்கம் வந்து பாருங்கள், அந்த மண் வாசனையின் வாசம் இங்கும் அதிகமாகவே வீசும் என்று ‘மெர்சலாக’ சொல்லியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அதிகமான கதைக் களங்கள் என்று பார்த்தால் இரண்டே இரண்டுதான், ஒன்று மாநகரம் சார்ந்த கதைக் களம், மற்றொன்று கிராமம் சார்ந்த கதைக் களம். மாநகரமான மதுரையைச் சுற்றி படமெடுத்தால் கூட அதை கிராமம் சார்ந்த கதையாகவே பார்ப்பதும் உள்ளது. சென்னைக்கென்றும் ஒரு வரலாறு இருக்கிறது, இங்கு வந்து வாழ்பவர்களும் பல ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பிழைப்புக்காக வந்தவர்கள்தான். அவரவர்க்கு அவரவர் வசிக்கும் இடத்தை விட்டு விலகவே மனம் வராது. அந்த இடத்தின் மீது அப்படி ஒரு தீராத காதல் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘மெட்ராஸ்’. காதல், நட்பு, அரசியல், சென்டிமென்ட் இது மூன்றையும் கலந்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். கதைக்கான அந்த குடியிருப்புப் பகுதிக் களமே மிகவும் யதார்த்தமான ஒரு சூழலை படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறது. அதை கடைசி வரை மிகவும் நேர்த்தியாகக் கடைபிடித்திருக்கிறார் இயக்குனர். வட சென்னைப் பகுதியில் ஒரு கீழ் நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் ஒரு சுவற்றில் அரசியல் விளம்பரம் வரைவதற்காக இரு கட்சியைச் சேர்ந்தவர்களிடையே காலம் காலமாக மோதல் இருந்து வருகிறது. கடைசியாக அந்தப் பகுதியில் ‘வாய்ஸ்’ அதிகம் உள்ள ஜெயபாலனின் படத்தை அவரது மரணத்திற்குப் பிறகு வரைந்து விடுகிறார் அவருடைய மகன். அதன் பின் அந்த சுவற்றிற்கு முன் பல மரணங்கள் நிகழ்கின்றன. இருந்தாலும் அந்த சுவற்றில் தன்னுடைய கட்சி விளம்பரத்தை வரைந்தே தீர வேண்டும் எனத் துடிக்கிறார் கலையரசன். இவரின் நெருங்கிய நண்பர்தான் கார்த்தி. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் கார்த்தியும், கலையரசனும் அப்படி ஒரு நெருங்கிய நண்பர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அந்த சுவர்ப் பிரச்சனையால் நண்பனைக் காப்பாற்றுவதகற்காக எதிர்பாராமல் கார்த்தி ஒரு கொலை செய்து விடுகிறார். ஆனால், கார்த்திக்குப் பதிலாக நண்பர் கலையரசன் நீதிமன்றத்தில் சரணடைகிறார். அப்போது சிலர் கலையரசைனை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்து விடுகிறார்கள். நண்பனைக் கொலை செய்தவர்களை கார்த்தி பழி வாங்கத் துடிக்கிறார், அது வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை. காளி, கலையரசி, அன்பு, மாரி, ஜானி, பெருமாள், மேரி, எனக் கதாபாத்திரங்களின் பெயர்தான் மனதில் நிற்கிறது. காளியாக நடித்துள்ள கார்த்தி, கலையரசியாக நடித்துள்ள கேத்தரின் தெரேசா அலெக்சாண்டர் தவிர மற்ற பலரும் பரிச்சயமில்லாதத புதுமுகங்கள்தான். கேத்தரினுக்கும் தமிழில் இதுதான் முதல் படம். யாரையுமே படத்தில் நடித்திருக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. அப்படி ஒரு யதார்த்தமான கதாபாத்திரங்கள், நடிப்பு, கதைக்களம் என சென்னையைப் பற்றி தெரியாதவர்களுக்குக் கூட இந்தப் படத்தை ஒரு பதிவாகவே கொடுத்திருக்கிறார்கள். கார்த்தியின் நடிப்பும் சரி, பேச்சும் சரி…அவருக்கு சென்னைப் பக்கத்து ‘பருத்தி வீரன்’ என தாராளமாக ஒரு பெயரைக் கொடுத்து விடலாம். நண்பனுக்காகத் துடிக்கும் உண்மையான நண்பன். இப்படி பலரை இங்கு பார்க்கலாம், தன்னை விட தன் நண்பன் மீது அதிக பாசம் வைத்திருப்பவர்கள் இங்கு அதிகமே. அதிலும் காதலி கேத்தரின் உனக்கு யாரை அதிகம் பிடிக்கும் எனக் கேட்கும் போது கூட நண்பன் அன்புவைத்தான் அதிகம் பிடிக்கும் என நண்பனின் அன்புக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இடைவேளை ட்விஸ்ட்டும், சரி கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டும் சரி கார்த்தியை ஹீரோயிசமில்லாத ஹீரோயிசத்தைக் காட்டும் காட்சிகள். தெலுங்கில் கிளாமர் புயலாக நடித்த கேத்தரின் தெரேசா இங்கு கலையரசியாக கண்ணியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு டப்பிங் கொடுத்தவருக்கும் சரி பாதி பாராட்டுக்கள் சேர வேண்டும். பாடல் காட்சிகளில் கூட கனவுப் பாடல் என்று சொல்லி வேறு தடத்தில் கூட கதையை பயணிக்காமல் விட்டதற்கு பாராட்டுக்கள். காதலுக்கே உரிய சிணுங்கலும், பார்வையும், திமிர்த்தனத்தையும் அச்சு அசலாக அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் கேத்தரின். அன்புவாக நடித்திருக்கும் கலையரசன் ஹரிகிருஷ்ணன், அவரது மனைவியாக நடித்திருக்கும் ரித்திகா மற்றுமொரு யதார்த்தமான கணவன் – மனைவி. கார்த்தியின் அம்மாவாக ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் நாயகியாக நடித்த ரமா. கார்த்தியின் அப்பா, பாட்டி, அரசியல் வாதிகளான மாரி, பெருமாள், விஜி மனநிலை பாதிக்கப்பட்ட ஜானி, என இப்படி மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் மேக்கப் இல்லாத உண்மை முகங்களுடன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையில் சென்னைக்கே உரிய கானா பாடல்கள் மாறுபட்ட இசையில் ஒலிக்கின்றன. பின்னணி இசையிலும் சரி விகிதத்தில் அசத்தியிருக்கிறார். முரளியின் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளில் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது. அழுத்தமான பதிவாக இருந்தாலும் மெதுவான பதிவாக இருப்பது குறையாக இருக்கிறது. சில காட்சிகள் மிக மிக மெதுவாக நகர்வதைத் தவிர்த்திருக்கலாம். கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டி, காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருந்தால் ‘மெட்ராஸ்’ இன்னும் மெச்சலாம். இருந்தாலும்…. ‘மெட்ராஸ்’ – நல்ல மெட்ராஸ்…