45வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் திரையிட ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.
அந்த விழாவில் ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் திரையிடுவதற்காக 181 படங்கள் கலந்து கொண்டன. அவற்றில் 26 படங்கள் திரையிடத் தேர்வு செய்யப்பட்டன, அதில் தேர்வாகியுள்ள ஒரே தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்’ மட்டுமே. பிரம்மா .ஜி இப்படத்தை இயக்கியுள்ளார்.
7 மலையாளப் படங்களும், 7 மாராத்திப் படங்களும், 5 பெங்காலி படங்களும், 2 இந்திப் படங்களும், ஒரு கன்னடம், ஒரு தமிழ், ஒரு காசி மொழி, ஒரு ஒரியா, ஒரு அஸ்ஸாமிஸ், ஆக மொத்தம் 26 படங்கள் திரையிடத் தேர்வாகியுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் ‘தங்க மீன்கள்’ திரைப்படம் கலந்து கொண்டது. அப்போது திரையிடத் தேர்வான 25 படங்களில் ‘தங்க மீன்கள்’ மட்டுமே தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘குற்றம் கடிதல்’ திரையிடத் தேர்வானது பற்றி தயாரிப்பாளர் ஜேஎஸ்கே. சதீஷ்குமார் கூறியதாவது, “தமிழில் நல்ல படங்கள் வெளிவர வேண்டும் என நினைக்கும் பலருக்கும் இந்த கௌரவத்தை சமர்ப்பிக்கிறேன். இது மேலும் பல திறமைகளை ஊக்குவிக்கவும், உருவாக்கவும் உத்வேகத்தைக் கொடுக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
45வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா நவம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது.