‘கத்தி’ விவகாரம்…கோபி மீது முருகதாஸ் அவதூறு வழக்கு…

Kaththi - Gallery - 2_00014‘கத்தி’ படத்தின் கதை தொடர்பாக அப்படத்தை எதிர்த்து மிஞ்சூர் கோபி என்பவர் வழக்குத் தொடர்ந்து, பின்னர் மேல் முறையீடும் செய்திருந்தார். சில நாட்களுக்கு முன் அந்த மேல் முறையீட்டை வாபஸ் பெற்றார் கோபி.

இதையடுத்து இந்த விவகாரத்திற்கு இத்துடன் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதாக நினைத்த நிலையில் கோபி மீது அவதூறு வழக்கைத் தொடர்ந்திருப்பதாக ‘கத்தி’ படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். “ஆரம்பித்திலிருந்தே இந்த விவகாரத்தில் நான் அக்கறை செலுத்தவில்லை. ஆனால், இதை நான் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், எனது அடுத்த படத்தின் போதும் வந்து அவர்களது கதை என உரிமை கொண்டாட ஆரம்பிப்பார்கள்.

இம்மாதிரியான ஆட்களை ஊக்கப்படுத்தக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.  ஒரு நாள் எனக்கு நீதி கிடைக்கும், உண்மை வெளிவரும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நான் அமைதியாக இருந்தேன். அதோடு, இதில் எந்த அவசரத்தையும் காட்ட வேண்டாமென்று இருந்தேன். அவருடைய குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை.

எனது அடுத்த படத்தில் எனது திறமை என்ன என்பதையும் வெளிப்படுத்துவேன். இப்போது, அவர் மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளேன்,” என்றும் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கோபி வழக்கை வாபஸ் பெற்றதற்கான காரணம் என்ன என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். வழக்கை வாபஸ் பெற்ற விவகாரம் என்பது வழக்கமான சட்ட முறைதான். சீக்கிரத்தில் கோபி இன்னும் அதிகமான ஆதாரத்துடன், புதிய வழக்கைத் தொடுக்கும் முயற்சியில் இருக்கிறார் எனச் சொல்கிறார்கள்.

ஆக, இப்போதைக்கு ‘கத்தி’ கதை விவகாரம் ‘கட்’ ஆகாமல் நீண்டு கொண்டேதானிருக்கும் எனத் தெரிகிறது.

Read Previous

‘வசந்தகுமாரன்’ பிரச்சனை…வசந்தம் வீசுமா…?

Read Next

இளையராஜா இசையில் பாடிய விஜய் ஆண்டனி…

Most Popular