நடிகர் சங்க விவகாரம் – விஷாலுக்கு சரத்குமார் எச்சரிக்கை…

vishal-and-sarathkumarதென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க விவகாரம் குறித்து கடந்த சில வருடங்களாகவே தற்போது பதவியில் உள்ளவர்களுக்கும், இன்றைய தலைமுறை நடிகர்களான விஷால் உள்ளிட்ட அவருடைய நண்பர்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

நடிகர் சங்க பழைய கட்டிடம், அரங்கத்தை இடித்து விட்டு அங்கு திரையரங்கத்துடன் கூடிய கட்டிடத்தைக் கட்ட முடிவெடுத்து பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால், அதன் பின் நீதிமன்ற வழக்கு என விவகாரம் நீடித்துக் கொண்டேயிருக்கிறது. அதற்கு இதுவரை வேறு எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே உள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சங்கத்தின் செயலாளரான ராதாரவி, விஷால் மற்றும் நாசரை தாக்கிப் பேசியதையடுத்து நடிகர் சங்க விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது.

இதனிடையே, திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த சரத்குமார் செய்தியாளர்களிடம் உரையாற்றியிருக்கிறார். அப்போது நடிகர் சங்க விவகாரம் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது,

“நடிகர் சங்கத்தைப் பற்றி விஷால் தொடர்ந்து ஏன் அவதூறாகப் பேசி வருகிறார் என்பது தெரியவில்லை. இதுவரை இந்த விவகாரத்தில் நான் எந்தவிதமான பதிலையும் தெரிவிக்காமல் இருந்தேன்.

நடிகர் சங்கத்திற்காக இருந்த கடன்களை பல நடிகர்கள் முயற்சி எடுத்து அந்தக் கடன்களை அடைத்ததோடு மட்டுமல்லாமல், மூன்றரை கோடி ரூபாய் அளவிற்கு வைப்பு நிதியாகவும் வைத்திருக்கிறோம்.

சத்யம் திரையரங்குடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு, கட்டிடம் கட்டி 29 ஆண்டுகள் அதை லீசுக்கு விடவும் முடிவு எடுத்திருக்கிறோம். அதை செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் முடிவெடுத்தோம்.

இதற்கு முன் சங்கத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்று எதுவும் தெரியாமல் விஷால் தொடர்ந்து அம்மாதிரி பேசிக் கொண்டிருந்தால் அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம்,  அவருடைய செயலை நான் கடுமையாக எச்சரிக்கிறேன்,” என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. விஷாலின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பொறுத்துத்தான் அடுத்து என்ன நடக்கும் என்பதும் தெரிய வரும்.

Read Previous

பாலிவுட்டுக்குப் போகும் அனிருத்…

Read Next

நான் தனுஷின் ரசிகன் – ஹிந்தி இயக்குனர் பால்கி…

Most Popular