படத்தின் தலைப்பே மிகவும் நீளமாக இருப்பதால் தலைப்புக்கு ஒரு தலைப்பு கொடுக்க முடியவில்லை…
தமிழ்நாட்டில் இருக்கும் அநேகம் பேர் பிழைக்க ஓடி வரும் இடம் ‘சென்னை’. ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்பது மற்ற மாநிலக் காரர்களுக்குப் பொருந்தும். அதே போல, ‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ என்பது சென்னையை விட்டு வெளியில் இருந்து வருபவர்களுக்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம், பலருக்கும் தெரியாத ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞர்கள் பலர் உண்டு. இப்படி பிழைக்க வந்த இடத்தில் திருமணமாகாமல் ‘பேச்சுலர்ஸ்’ வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ உருவாகிக் கொண்டிருக்கிறது.
கரியாம்பட்டி ஸ்டுடியோஸ், ஏடிஎம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் மருது பாண்டியன் இயக்குனராக அறிமுகமாகிறார். பாபி சிம்ஹா, பிரபஞ்சன், லிங்கா, புதுமுகம் சரண்யா நடிக்கும் இப்படம் சென்னையின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சில கிராமங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.
“ரோட்டு கடை இட்லியின் சூட்டால் நாக்கை புண்ணாக்கி கொண்டு, அடி கதவு இல்லா கழிவறை, ஆறுக்கு இரண்டு அளவே கொண்ட ரூம்களில் வசித்துக் கொண்டு கனவு காணும் சென்னையிலேயே செட்டிலாகத் துடிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை அப்படியே படமாக்கி வருகிறேன். எனது வாழ்கையில் நடந்த உண்மையான சம்பவங்களின் நகைச்சுவை நிறைந்த கோர்வையே இந்தத் திரைப்படம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளோம்,” எனக் கூறுகிறார் படத்தின் இயக்குனர் மருதுபாண்டியன்.