ஐ – விமர்சனம்

தமிழ் சினிமாவை மற்றவர்களும் பார்த்து பொறாமைப்படும் விதத்தில் படத்தை எடுக்கும் ஒரே இயக்குனர் ஷங்கர். வழக்கம் போலவே இந்தப் படத்திலும் திரையில் ஒரு மாயஜாலத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் கிரியேட்டிவிட்டி வருகிறது என்று தெரியவில்லை. கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு பாடல் காட்சிகள், பிரமிக்க வைக்கம் சண்டைக் காட்சிகள் என திரையில் பார்ப்பது கனவா அல்லது நிஜமா என்றே புரியவில்லை. விழிகளை விரிய வைக்கும் காட்சிகள் திரையில் தெரிந்தாலும் மனதை உருக்கும் காட்சிகளோ, ஷங்கர் படங்களில் இருக்கும் ஒரு சமூக சிந்தனையோ படத்தில் இல்லாமல் அவரும் கொஞ்சம் வழக்கமான கமர்ஷியல் பாணியில் பயணித்திருக்கிறாரே என்று யோசிக்க வைக்கிறது. வட சென்னை பகுதியைச் சேர்ந்த விக்ரமிற்கு ஆணழகன் போட்டியான மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் இந்தியா இப்படி பெயர் வாங்க வேண்டுமென தன்னைனுடைய உடலை கடுமையான உடற்பயிற்சி மூலம் பிரமாதமாக வைத்திருக்கிறார்.  பிரபல மாடலிங்கான எமி ஜாக்சனின் தீவிர ரசிகராக இருக்கிறார் விக்ரம். மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் வென்ற பின் மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறார். இந்த சூழ்நிலையில் மாடலிங்கான எமி ஜாக்சனுக்கு உடன் மாடலிங் செய்யும் உபேன் பட்டேல் மூலம் தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படுகிறது. அவரை எதிர்த்துக் கேட்கப் போய் மாடலிங் வாய்ப்புகளையும் இழக்க நேரிடுகிறது. அதன் பின் உபேன் பட்டேலுக்கு பாடம் கற்பிக்க விக்ரமை மாடலிங்கில் நுழைய வைத்து அவரை பிரபல மாடலாக மாற்றுகிறார். உபேன் பட்டேலை பழி வாங்கத் துடிக்கும் எமியின் ஆசையும் நிறைவேறுகிறது. பிரபல தொழிலதிபரான ராம்குமாரின் நிறுவனங்களுக்கு பிரத்யேகமான மாடல்களாக விக்ரமும், எமி ஜாக்சனும் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், ராம்குமார் நிறுவனத்தின் குளிர்பானம் ஒன்றால் தீங்கு விளைகிறது எனக் கூறி விக்ரம் அதற்கான விளம்பரத்தில் நடிக்க மறுக்கிறார். இதனால் ராம்குமார் நிறுவனத்தின் பங்குகள் சரிகின்றன. விக்ரம் மாடலாக இருக்கும் போது அவருக்கு ஸ்டைலிஸ்டாக இருக்கும் திருநங்கையான ஓஜாஸ் ராஜானி விக்ரம் மீது ஆசைப்பட விக்ரம் அவரை நிராகரிக்கிறார். இதனால் ஓஜாஸும் விக்ரம் மீது வெறுப்பாகிறார். விக்ரமால்தான் தாங்கள் பாதிக்கப்பட்டோம் என நினைக்கும் ராம்குமார், உபேன் பட்டேல், ஓஜாஸ் ஆகியோர் விக்ரமை வித்தியாசமாக பழி வாங்குகிறார்கள். அதனால் கொடுமையாக பாதிக்கப்படும் விக்ரம் என்ன ஆனார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஒரு கதாபாத்திரத்திற்காக உடலை இப்படி மெருகேற்றவும், வருத்திக் கொள்ளவும் விக்ரமால் மட்டுமே முடியும். பாடி பில்டர் ஆக உடலை அசத்தும் அளவிற்கு ஏற்றியிருக்கிறார். முதல் பாதியில் அவரும் சந்தானமும் நடத்தும் கலாட்டாக்கள் அசத்தலோ அசத்தல். ஆணழகன் போட்டியில் விக்ரம் மேடையில் நடத்தும் சாகசம் அவர் நிஜமாகவே அந்தப் போட்டியில் கலந்து கொண்டது போலவே தோன்ற வைக்கிறது. அதன் பின் ‘ஐ’ வைரசால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்து அவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். நடிப்புக்காக இதுவரை யாராவது இந்த அளவிற்கு மெனக் கெட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அடுத்து, கூன் விழுந்த கதாபாத்திரத்தில் குரலை வைத்துக் கூட அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறார். உடலை வில்லாக வளைத்து நடிக்கவும் செய்ய முடியும் என்ற புது மொழியைக் கண்டுபிடித்திருக்கிறார் விக்ரம். எமி ஜாக்சன், அழகோ அழகு. இந்தப் படத்தில் நடிப்பில், நடனத்தில் என அவருடைய முந்தைய படங்களை விட நிறையவே முன்னேற்றம். ஆரம்பக் காட்சிகளில் அவருடைய கிளாமரான மாடலிங்கை தமிழ் நடிகைகள் யாராவது செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஒரு பக்கம் விக்ரம் அவருடைய உடல் வலிமையைக் காட்ட, மறுபக்கம் எமி அவருடைய உடல் அழகைக் காட்டி ஆளுக்கொரு பக்கமா வியக்க வைக்கிறார்கள். எமி ஜாக்சனுக்கு இந்தப் படம் கண்டிப்பாக திருப்பு முனையாக அமையும். சந்தானம் இருக்கும் படத்தில் சத்தம் போட்டு சிரிக்காமல் இருக்க முடியுமா…வழக்கம் போலவே இந்தப் படத்திலும் அவருடைய கடமையை செவ்வனே செய்திருக்கிறார். அதிலும் பவர் ஸ்டாரை கலாய்ப்பதில் மட்டும் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக சிரிக்க வைக்கிறார். அந்தக் காலப் படங்களைப் போல படத்தில் நாலு வில்லன்கள். பார்க்க நல்லவர், உள்ளுக்குள் கெட்டவராக சுரேஷ் கோபி. மிகப் பெரும் கோடீஸ்வரராக ராம்குமார், மாடலிங் ஸ்டைலிஸ்ட்டாக ஓஜாஸ் ராஜானி, பிரபல மாடல் ஆக உபேன் பட்டேல் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்தான். பாடல்களைப் படமாக்கிய விதம் வழக்கம் போல மிரள வைக்கிறது. பாடல்களுக்கான கான்செப்ட்டை ஷங்கர் எங்கிருந்துதான் பிடிக்கிறாரோ… பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் தனி விதத்தில் ரசிக்க வைக்கிறது. அதிலும் சீனா நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும், அந்த பூந்தோட்டமும் அழகோ அழகு. பாடல்களுக்கு அட்டகாசமான அரங்குகளை அமைத்து பிரமிக்க வைத்திருக்கிறார் முத்துராஜ். அனல் அரசு, பீட்டர் மிங்-கின் சண்டைக் காட்சிகள் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக அமைந்துள்ளன. வீட்டா வொர்க்ஷாப்பின் மேக்கப்பும், படத்திற்கு எஃபெக்ட்ஸ் காட்சிகளை அமைத்துள்ள சீனிவாஸ், மோகன் ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள். உடலைப் பற்றிய படம், அழகைப் பற்றிய படம் கூடவே கொஞ்சம் இதயத்தைத் தொடும் அளவிற்கு கதையையும் அமைத்திருக்கலாம். ஆனாலும்… ஐ – வழக்கமான தமிழ் சினிமா அல்ல….அதுக்கும் மேல…

Read Previous

இன்றைய ரிலீஸ் – 2 படங்கள்…

Read Next

இன்றைய ரிலீஸ் – 2 படங்கள்…

Most Popular