ரசிகர்களின் ரசனைக்கேற்ப இசையமைக்க வேண்டும் – வர்ஷன்

இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் மூலம் வர்ஷன் என்ற புது இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் தன்னுடைய அனுபவத்தைப் பற்றி வர்ஷன் கூறியதாவது,

“படத்தின் தலைப்பே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. அந்த எதிர்பார்ப்புக்கு ஈடேற்றும் வகையில் இசையமைப்பது எனக்கு பெரும் சவாலாக அமைந்தது. எனினும் ஒரு புதுமுகத்திற்கு தேசிய விருது பெற்ற இயக்குனரின் திரைப்படத்திலும், யு டிவி போன்ற பெரிய நிறுவனத்தின் படத்திலும் வாய்ப்பு கிடைப்பது என்பது அபூர்வம். ஜனநாதன் சார் இப்படம் முழுவதும் என்னை வழி நடத்தி இசையமைப்பாளராக உருவாக்கியுள்ளார்.

லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து, பின் இந்திய பாரம்பரிய இசையை, சென்னை இசைக் கல்லூரியில் பயின்றேன். என்னுடைய சில பாடல்கள் ஜனநாதன் சார் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அதனால் எனக்கு ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் இசையைமக்க வாய்ப்பளித்தார்.

இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும், ஜனநாதன் சாரின் திரைக்கதைக்கு உறுதுணையாய் இருக்கும் வண்ணம் அமைய வேண்டும் என்று, நினைவில் வைத்துகொண்டு இசையமைத்தேன். படத்தின் பின்னணி இசையும் நன்றாக வந்துள்ளது.

ஒரு தனித்த இசைக் கலைஞனாய் வேலை செய்வது மிகவும் எளிது, ஒரு இயக்குனரிடம் வேலை புரிவது மிகவும் புதிதாக இருந்தது. ஆனால், ஒரு இசையமைப்பாளர் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இசையமைக்க வேண்டும். ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் என்னை ஒரு இசையமைப்பாளராய் மேலும் மெருகேற்றியுள்ளது. இப்படத்தின் இசை நாளை 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என நல்ல அறிமுகப் படத்துடன் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் வர்ஷன்.

Read Previous

மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமானுக்கு வைரமுத்து புகழாரம்…

Read Next

டிவி சேனல்களுக்கு எதிராகப் போராட்டம் அறிவிப்பு…