தமிழ்த் தொலைக்காட்சிகளில் மொழி மாற்றுத் தொடர்களின் அதிகரிப்பால் வேலையிழந்த சின்னத் திரை இயக்குனர் பாலாஜி யாதவ் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
அவருக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு சின்னத் திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக பல உறுப்பினர்கள் அந்த அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதன் பின் அவர்கள் சார்பாக விடுக்கப்பட்ட பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது,
“சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் தொடர்களின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்றன. பின் தெலுங்குத் தொடர்களின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் மட்டுமே நடக்க வேண்டும் என்று அங்குள்ள சேனல்கள் உத்தரவிட்டன. இதனைத் தொடர்ந்து தெலுங்கு மொழித் தொடர்களின் படப்பிடிப்புகள் அங்கு சென்றுவிட்டன. அப்போதே சின்னத்திரை சார்ந்த கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு ஐம்பது சதவீத வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன.
இதன் பிறகு மொழி மாற்றத் தொடர்கள் வரத் தொடங்கிய போது, வேலை வாய்ப்புகள் பெருமளவு குறையத் தொடங்கின. இதனால் சின்னத் திரை சார்ந்த கலைஞர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைக் குறிப்பிட்டு மொழி மாற்றத் தொடர்களை நிறுத்திக் கொள்ளுமாறு பெப்சி மற்றும் சின்னத் திரைக் கூட்டமைப்பு சார்பாக சம்பந்தப்பட்ட சேனல்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சார்பாகவும் இது குறித்து சேனல்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், மொழி மாற்றத் தொடர்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்கள் எங்கள் வேதனையைப் புரிந்து கொள்ளாமல் மேலும் அதிக எண்ணிக்கையில் ஒளிபரப்பி வருகின்றன.
இதன் விளைவாக பலர் வேலையில்லாமல் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வாழ்க்கை நடத்த இயலாத அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதன் விளைவுதான் இயக்குனர் பாலாஜி யாதவ் அவர்களின் தற்கொலை.
இப்போதைய சூழ்நிலையில் சின்னத்திரையை நம்பியிருக்கும் இயக்குனர்கள், எழுத்தாளர்கள், படத்தொகுப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலையின்றி நெருக்டிக்குள்ளாகியுள்ளனர்.
மொழி மாற்றுத் தொடர்களின் ஒளிபரப்புத் தொடருமானால் பாலாஜி யாதவ் போன்றே பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் மொழி மாற்றுத் தொடர்களை நிறுத்திவிட்டு, நேரடித் தொடர்கள் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கித் தந்து, இனிமேலும் உயிரிழப்புகள் நடைபெறாமல் காப்பாற்ற வேண்டுகிறோம்.
அல்லாத பட்சத்தில் எங்கள் உயிரையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நாங்கள் டப்பிங் தொடரை வெளியிடும் நிறுவனங்களுக்கெதிராக, அறவழியில் போராட வேண்டிய நிலைமை உருவாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்,” என தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக தலைவர் கவிதா பாரதியும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பாக தலைவர் ஜி.சிவாவும் அந்த பத்திரிகைச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.