த்ரில்லர் பட வரிசையில் ‘யூகன்’ ஒரு பழி வாங்கும் படமாக வந்திருக்கிறது. கடைசி வரை யூகிக்க முடியாத கிளைமாக்சை வைத்து பரபரப்பையும், பயத்தையும் அதிகம் ஏற்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். த்ரில்லர் படங்களுக்கே உரிய விறுவிறுப்பு, அடுத்து என்ன நடக்கும், நடப்பதெல்லாம் ஏன் நடக்கிறது என்ற எதிர்பார்ப்பு திரைக்கதையில் உள்ளது. அறிமுக நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு இந்த அளவிற்கு ஒரு படத்தைக் கொடுத்திருப்பதை வரவேற்க வேண்டும். இயக்குனர் கமல்.ஜி, தான் இயக்கியுள்ள முதல் படத்திலேயே சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். சஸ்பென்ஸ் கலந்த கதையில் அப்படி திரைக்கதையை மெயின்டெய்ன் செய்து கொண்டு செல்வது சாதாரண விஷயமல்ல. யஷ்மித், சித்து, ஷாம், பிரதீப் பாலாஜி, மனோஜ் ஐந்து பேரும் ஒரு சாப்ட்ஃவேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். யார், எதற்காக, ஏன் கொலை செய்கிறார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. கடைசியில் யஷ்மித், சித்து மட்டும் எஞ்சியிருக்கிறார்கள். ஒரு பக்கம் ஏசிபியும் கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க இறங்க, கொலைகளுக்கான காரணம் தெரிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. படத்தில் பார்த்துப் பழகிய நட்சத்திரங்கள் என்று யாருமேயில்லாதது படத்திற்கு ஒரு பக்கம் பக்கபலமாக இருந்தாலும், அதுவே சில சமயங்களில் மைனஸாகவும் உள்ளது. ஒவ்வொருவரது முகத்தையும் ஞாபகம் வைத்துக் கொண்டு படத்தைத் தொடர்வதில் சிறு குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் படத்தில் நடித்துள்ள அனைவருமே சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். படத்தின் கதாநாயகியாக சாக்ஷி அகர்வால். இவருக்கும் யஷ்மித்திற்கும் இடையே ஆரம்பமாகும் நட்பு, அப்படியே காதலாக மாறுவதில் யதார்த்தமான காட்சிகளால் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். சாக்ஷிக்கு ஏற்படும் முடிவு எதிர்பாராத ஒன்று. ஆரம்பத்திலிருந்தே வெறும் வெற்றுப் பார்வையாலேயே பேயாக வந்து பகீர், பகீர் என பயமுறுத்திவிடுகிறார். பின்னணி இசையை விட சவுண்ட் எஃபெக்ட்ஸ் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. மேக்கிங்கில் இன்னும் அதிகமாக மெனக்கெட்டிருக்கலாம். சில காட்சிகளைப் பார்க்கும் போது குறும்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.