இன்று திரைக்கு வந்துள்ள ‘கங்காரு’ படத்துக்கு தடை கோரி ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் படத்தை இயக்கிய சாமி, இதற்கு முன்பு சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியிருப்பதால், இந்தப் படமும் அந்த மாதிரிதான் இருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அந்த வழக்கு விசாரணக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“ஒரு படத்தைப் பார்க்காமலேயே, அதன் கதை, காட்சிகள் என்னவென்று தெரியாமலேயே படத்துக்குத் தடை கோரும் போக்கு இன்று அதிகரித்துவருகிறது. என் ‘கங்காரு’ படத்துக்கு எதிராகவும் அப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
‘கங்காரு’ படம் அண்ணன், தங்கைப் பாசத்தை புதிய பரிமாணத்தில் சொல்லியிருக்கும் படம். துளி கூட ஆபாசமற்ற, சுத்தமான படம் என்று தணிக்கைக் குழுவால் ‘யு’ சான்று அளிக்கப்பட்ட படம்.
படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் பாராட்டுகிறார்கள். ஆனால் படத்தையே பார்க்காமல், அவர்களாக ஒரு கருத்தைக் கற்பனை செய்து கொண்டு படத்துக்குத் தடை கேட்கிறார்கள். இது என்ன வகை நியாயம்?. உறவின் பெருமையையும் மேன்மையையும் சொல்லும் படம்தான் இந்த ‘கங்காரு’.
உலகுக்கே கலாச்சாரத்தைக் கற்றுத் தந்தது தமிழினம். அந்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனின் தம்பிகள் நாங்கள். எப்படி திரைப்படம் எடுக்க வேண்டும் என எங்களுக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. பிரபாகரனின் தம்பிகளால் கலையுலகம் தலை நிமிருமே தவிர, இம்மியளவு தலை குனிவு கூட ஒரு நாளும் நேராது, ” என அந்த அறிக்கையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.