“உயிர், மிருகம், சிந்து சமவெளி” என விவகாரமான, பரபரப்பான படங்களைக் கொடுத்த இயக்குனர் சாமி, ஒரு பாசமான படத்தைக் கொடுத்திருக்கிறார். தன்னால் வேறு ஒரு கதைக் களத்திலும், ‘அப்படி, இப்படி’ என இல்லாத காட்சிகளுடன் ஒரு படத்தைத் தர முடியும் என இந்த ‘கங்காரு’வில் அண்ணன், தங்கை பாசத்தைச் சுமந்து நெகிழ வைக்கிறார். சிறு வயதிலேயே ஆதரவற்ற அம்மாவையும் பறி கொடுத்த அர்ஜுனா, கைக் குழந்தையாக இருக்கும் தங்கையுடன் கொடைக்கானலுக்கு வேலை தேடி வருகிறார். அவருக்கு வேலை போட்டுக் கொடுத்து ஆதரவாகவும் இருக்கிறார் மளிகைக் கடை நடத்தும் தம்பி ராமையா. காலங்கள் கடக்க, தங்கை பிரியங்கா மீது அளவு கடந்த, முரட்டுத் தனமான பாசத்தை வைத்திருக்கிறார் அர்ஜுனா. தங்கை பிரியங்காவுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் அர்ஜுனா. பிரியங்கா மீது ஆசைப்பட்ட ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்க, அவர் எதிர்பாராமல் இறந்து போகிறார். அடுத்து வேறு ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்ய, அவரும் இறந்து போகிறார். இரண்டு மாப்பிள்ளைகளும் இறக்க, பிரியங்கா மீது ஆசைப்படும் கலாபவன் மணிதான் காரணமாக இருப்பார் என நினைக்கிறர்கள். தங்கைக்கு எப்படியாவது நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க அண்ணன் அர்ஜுனா முடிவெடுக்கிறார். அதன் பின் அவருடைய ஆசை நிறைவேறியதா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ‘கங்காரு’, முருகேசனாக புதுமுகம் அர்ஜுனா. எங்கிருந்துதான் இப்படி ஒரு முரட்டுத்தனமான ஆசாமியை இயக்குனர் கண்டுபிடித்தாரோ. சாப்பிடுவதில் ராஜ்கிரணையே தோற்கடித்து விடுவார் போலிருக்கிறது. கடிவாளம் கட்டி விட்டது போல் தங்கையைப் பற்றி மட்டுமே நினைக்கிறார், அவரைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார். தங்கை பிரியங்கா மீது வைத்திருக்கும் முரட்டுத்தனமான பாசம், ‘முள்ளும் மலரும்’ காளியைக் கூட மிஞ்சி விடும் போலிருக்கிறது. சில காட்சிகளில் பார்வையிலேயே பயமுறுத்துகிறார். கதாபாத்திரத்தை நன்றாக உள் வாங்கி நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாத நடிப்பு அர்ஜுனாவிடம் வெளிப்பட்டுள்ளது. கொஞ்சமும் சினிமாத்தனமில்லாத யதார்த்தமான தோற்றத்துடன் பிரியங்கா. முரட்டுத்தனமான அண்ணனையே தன்னுடைய பாசமான மிரட்டலால் பணிய வைப்பவர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பார்கள், இங்கு தங்கை சொல் மிக்க மந்திரமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து நெகிழ வைத்த நட்சத்திரங்களான ‘பாச மலர்’ சாவித்திரி, ‘முள்ளும் மலரும்’ ஷோபா, ‘சிவப்பு சூரியன்’ சரிதா, என காலம் கடந்தும் இந்த ‘கங்காரு’ பிரியங்கா பேசப்படுவார் என்று எதிர்பார்க்கலாம். நாயகன் அர்ஜுனாவைக் காதலிக்கும் பெண்ணாக வர்ஷா அஸ்வதி. அர்ஜுனா தன்னைக் கொஞ்சம் கூட திரும்பிப் பார்க்கவில்லை என்றாலும் அவரை விடாமல் துரத்துகிறார். ‘என் ஏத்தத்துக்கும், இறக்கத்துக்கும் என்னா குறைச்சல்’ என்ற பாடலிலேயே தன்னுடைய இருப்பைப் பதிவு செய்து விடுகிறார். இந்தக் காலத்தில் தம்பி ராமையா போன்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாராவது உதவுவார்களா என்பது சந்தேகம்தான். குணச்சித்திர நடிப்பில் தற்போது தம்பி ராமையாவை தாண்டிச் செல்ல யாருமில்லை. கலாபவன் மணி, இயக்குனர் சாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஜின்னா குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீனிவாஸ் இசையில் “பேஞ்சாக்கா…, தாயும் கொஞ்ச காலம்…” ஹிட் பாடல்களாக அமையும். ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு கதையை மிஞ்சாமல் கொடைக்கானலின் யதார்த்த அழகை வெளிப்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட எளிமையான, பாசமான, சிறிய படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தால் திரையுலகம் நன்றாக இருக்கும்.