பலத்த எதிர்பார்ப்புகளுடன்,பரபரப்புகளுடன் வெளிவந்துள்ள படம் ‘விவேகம்’. அஜித் நடித்து இதற்கு முன் வெளிவந்த படங்களை விட இந்தப் படத்திற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு படம் ஆரம்பமான ஐந்து நிமிடங்களுக்குள்ளேயே படம் பார்க்கும் ரசிகன் படத்திற்குள் ஐக்கியமாகி விட வேண்டும். ஆனால், ‘விவேகம்’ படத்தில் முதல் அரை மணி நேரத்திற்கு என்ன நடக்கிறது என்பதை சாதாரண ரசிகனால் புரிந்து கொள்ள முடியாது.
Counter Terrorist Squad, அதாவது தீவிரவாத எதிர்ப்புப் படை என்றால் என்ன, அதன் வேலைகள் என்ன, அஜித் அந்தப் படையில் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்பதை படம் ஆரம்பிக்கும் போது ஒரு ஐந்து நிமிடம் காட்சிகளுடன் விளக்கியிருந்தால், படத்தின் கடைசி வரை ரசிகனால் படத்துடன் தன்னைத் தொடர்புப்படுத்திக் கொண்டிருந்திருக்க முடியும்.
அஜித்துக்கு ஒரு சிறந்த ‘இன்ட்ரோ’ கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் யோசித்த இயக்குனர் சிவா, ரசிகர்களைப் பற்றி யோசிக்கவில்லை. அந்த ‘இன்ட்ரோ’வைக் கூட முழுமையாகக் காட்டாமல் ‘கட்’ செய்து, ‘கட்’ செய்து காட்டி கடுப்பேற்றுகிறார்.
பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட தீவிரவாதக் கும்பல் ஒன்றின் கூடாரத்திற்குள் புகுந்து அங்கு ‘Weapon Drive’, மற்றும் பணம் பரிமாற்றம் நடப்பதைத் தடுத்து, அங்கு பன்ச் டயலாக் பேசி அறிமுகமாகும் ‘இன்ட்ரோ’ காட்சியில், அடுத்து, குறைந்தது 50 பேர் மிஷின் கன்களால் சுட, அவ்வளவு பேரையும் ஒற்றை ஆளாக எதிர்த்து அவர் மீது ஒரு குண்டு கூட படாமல் திரும்புகிறார். தமிழ் சினிமா ஹீரோ எதிரிகளின் கூடாராத்திலிருந்து எளிதில் தப்பிப்பது 2117ம் ஆண்டில் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்படி படத்தில் காதில், பூவைச் சற்றுவதற்குப் பதிலாக, அஜித்தின் கட்-அவுட்டுகளுக்குப் போட்ட மாலை அளவிற்கு காதில் சுற்றி அனுப்புகிறார்கள்.
செர்பியாவில் இருந்து செயல்படும் தீவிரவாத எதிர்ப்புப் படையில் இருக்கும் நேர்மையான அதிகாரி அஜித். அவருடைய அணியில் விவேக் ஓபராய் உள்ளிட்ட நால்வர் துணையாக இருந்து பல சாகசங்களை செய்த அனுபவமுள்ளவர்கள். ஒரு முறை தீவிரவாத கும்பல் ஒன்றைப் பிடிக்கும் சமயத்தில் அஜித்துடன் இருக்கும் விவேக் ஓபராய் உள்ளிட்டவர்களே அஜித்தை துப்பாக்கியில் சுட்டு அவரை சாகடிக்க முயற்சிக்கிறார்கள். அதிலிருந்து தப்பிக்கும் அஜித் காணாமல் போகிறார். காயத்திலிருந்து உடல்நலம் தேறி, நட்புடன் கூட இருந்தவர்களே துரோகம் செய்ததை எதிர்த்துப் போராடுகிறார். அதில் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
செர்பியாவில் ஆரம்பமாகும் கதை, அடுத்து ஸ்லோவேனியா…அப்புறம் எந்த ‘…..யா’ நாட்டுக்கெல்லாம் போகிறது என்பதே தெரியவில்லை. அவற்றை ஆங்கிலத்தில் போடுகிறார்கள். ஆனால், ஆங்கிலப் பாடல் வரும் போது அவற்றைப் புரிந்து கொள்ள தமிழில் சப் டைட்டில் போடுகிறார்கள். கதையைப் புரிய வைக்க ஊர்ப் பெயரை தமிழில் போட வேண்டிய இடத்தில் ஆங்கிலத்தில் போடுவதும், ஆங்கிலப் பாடல்களை தமிழில் சப் டைட்டில் போடுவதால் அதைத் தெரிந்து கொள்வதிலும் என்ன பயன்.
அஜித் வழக்கம் போல அதிரடி காட்டுகிறார், ஸ்டைலாக நடக்கிறார். எதிரிகளை எதிர்த்து நிறுத்தி நிதானமாக பன்ச் டயலாக பேசுகிறார். மனைவி பாராட்டும் நல்ல கணவனாக இருக்கிறார். மனைவி உயிருக்கு ஆபத்து என்றாலும் எங்கோ தூரத்தில் இருந்து எதிரிகளை சரியாகக் குறி பார்த்து சுடுகிறார். கிளைமாக்சில் அந்த கடைசி ஒரு நொடியில் வழக்கமான சினிமா ஹீரோ போல சாகசம் புரிகிறார். தன் ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்தாமல் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் அஜித் கதைகளை ஏன் தேர்வு செய்வதில்லை என்பது அவருக்கே வெளிச்சம்.
அஜித்தின் மனைவியாக காஜல் அகர்வால். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வால் எதற்கு என்று தெரியவில்லை. யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். காஜல் இருந்தும் கிளாமல் துளி கூட இல்லை என்பது அதிசயம்தான். பாடல்களில் வழக்கமான வீணை வாசிப்பதும், ஸ்வெட்டர் பின்னுவதும் இன்னும் எத்தனை படங்களில் பார்க்க வேண்டுமோ…?.
கமல்ஹாசனின் மகளான அக்ஷராஹாசனை சில நிமிடங்களே வரும் ஒரு கதாபாத்திரத்திலா அறிமுகப்படுத்துவது. வரும் இரண்டு மூன்று காட்சிகளிலும், முகத்தைக் கூடக் காட்டாமல் பைக் சேசிங் காட்சியும், காதலனைப் பார்க்க முகத்தை மறைத்துக் கொண்டு போகும் காட்சியும் போய்விட்டது. அஜித்துடன் பேசுவதாக ஒரு காட்சியில் மட்டுமே வந்துவிட்டு போயே…..விடுகிறார்.
படத்தில் கருணாகரன் பேசுவதையெல்லாம் நாம் காமெடி என்று குறிப்பிட்டால் ரசிகர் உலகம் நம்மை மன்னிக்காது.
விவேக் ஓபராய் தான் படத்தின் வில்லன், நம்பிக்கைத் துரோக நண்பன். தீவிரவாத தடுப்புப் படையிலிருந்து கொண்டு தீவிரவாதத்திற்கு துணை போகிறார். அவர் மட்டும் கருப்பு ஆடு அல்ல, அவருக்குத் துணையாக கூடவே இன்னும் சில கருப்பு ஆடுகள் உள்ளன. தமிழ் சினிமாவில் ஆயிரம் முறை பார்த்த கதாபாத்திரங்கள். இவரும் அஜித்தும் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே நேருக்கு நேராக மோதிக் கொள்கிறார்கள். அதுவரை போனில் மட்டுமேதான் பேசிக் கொள்கிறார்கள். ஒரு ஹீரோயிச ஆக்ஷன் படத்தில் இப்படி நாயகன், வில்லன் பேச்சுகள் அதிகமாக இருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்.
‘தீவிரவாத எதிர்ப்பு படை’ அலுவலக செட்டும், அதில் வரும் விர்ச்சுவல் ஸ்கிரீன் காட்சிகளும் கொஞ்சமாக பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. பைக் சேசிங் காட்சி பரபரப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாத கும்பலிடமிருந்து அஜித் தப்பிக்கும் அந்த பிரம்மாண்ட அணை காட்சி மிரள வைத்துள்ளது. இப்படி விஷுவலாக பல காட்சிகள் புதிதாக உள்ளன.
ஒளிப்பதிவாளர் வெற்றி, படத் தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குனர் மிலன் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கலோயன், கணேஷ் சண்டைக் காட்சிகள் நம்பகத் தன்மை இல்லை என்றாலும் ஆச்சரியப்படுத்துகின்றன.
அனிருத்தின் இசையில் சர்வைவா…பாடலும், காதலாட பாடலும்…ஒலி, ஒளியில் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் ஓகே.
காட்சிகளில் காட்டிய வித்தைகளை, கதையிலும், திரைக்கதையிலும் காட்டியிருந்தால் ஒரு சூப்பர் ஹிட் படம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும்.