வானவராயன் வல்லவராயன் – விமர்சனம்

vanavarayan vallavarayan 2308_00012 இயக்குனர், நடிகர் ஆர்.பாண்டியராஜன் இயக்கி, நாயகனாகவும் அறிமுகமான ‘ஆண் பாவம்’ படத்தின் 2014ம் ஆண்டு வடிவம் தான் இந்த ‘வானவராயன் வல்லவராயன்’. ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜமோகன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கிராமத்துப் பின்னணியில் வரும் தமிழ்ப் படங்கள் குறைந்து வரும் சூழ்நிலையில் இந்தப் படத்தை மிகவும் கலகலப்பாகவும், கொஞ்சம் மிகைப்படுத்தியும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அண்ணன் தம்பி என்றால் இளம் வயதில் அடித்துக் கொள்வார்கள்தான். ஆனால், இந்தப் படத்தில் அண்ணனான கிருஷ்ணாவும், தம்பியான ம.க.ப.ஆனந்தும் அடித்துக் கொள்வது ஓவரோ ஓவர். அதாவது ஒரு கல்யாண வீட்டில் சாப்பாட்டுப் பந்தியில் ஒருவரைக் கூட சாப்பிட விடாதபடி ஒரு சின்ன விஷயத்துக்கு அடித்துக் கொள்வார்களாம். நம்ம ஊர்ப் பக்கமெல்லாம் இப்படி பார்த்தது கிடையாது. இப்படியாக சில விஷயங்களை மட்டும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் படம் பார்க்கும் மொத்த நேரமும் அப்படியே ஓடிவிடுகிறது. படத்தில் யாரை அழகாக காட்டியிருக்கிறார்களோ இல்லையோ, மோனல் கஜ்ஜாரை அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவாளர் பழனிகுமாரின் கைவண்ணத்தில் அவர் ‘பளிச்’சென இருக்கிறார். தம்பி ராமையா, கோவை சரளா தம்பதியரின் மகன்கள் கிருஷ்ணா, ம.க.ப.ஆனந்த். வசதியான குடும்பமாக இருந்தாலும் அதிகமாகப் படிக்காமல் இருவரும் எப்போதுமே வம்பு, சண்டை, சச்சரவு என்றே ஊரில் பிரச்சனையை ஏற்படு த்துபவர்கள். கிருஷ்ணாவிற்கு, பக்கத்து ஊரிலுள்ள மோனல் கஜ்ஜார் மீது காதல். அப்படி இப்படி பேசி கல்லூரிக்குப் போகும் மோனலை ‘கரெக்ட்’ செய்து தன் காதலில் விழவைக்கிறார் கிருஷ்ணா. இந்தக் காதல் விவகாரம் மோனல் குடும்பத்தாருக்குத் தெரியவர கிருஷ்ணாவை ‘ரவுண்டு’ கட்டி அடித்து விடுகிறார்கள். அண்ணனை அடித்ததற்காக மோனல் ஊருக்குச் சென்று நடுத் தெருவில், மோனல் அப்பாவான ஜெயப்பிரகாஷின் வேட்டியை உருவிவிடுகிறார் தம்பி ஆனந்த். இதன் பின் கிருஷ்ணா, மோனல் காதல் ஆட்டம் காண்கிறது. தம்பி ஆனந்தை விட்டு விலகினால்தான் கிருஷ்ணாவைக் காதலிப்பேன் என்கிறார் மோனல். தம்பிதான் முக்கியம் என்கிறார் அண்ணன், இந்த ஆட்டத்தில் பாசம் ஜெயித்ததா, காதல் ஜெயித்ததா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. அண்ணன் வானவராயனாக கிருஷ்ணா, தம்பி வல்லவராயனாக ம.க.ப.ஆனந்த், இரண்டு பேருக்குமே படத்தில் வாய் நீளம். அதாவது, பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். மற்றவர்களை பேசவும் விட மாட்டார்கள், அடிதடிதான் அவர்கள் ஆயுதம். சமயத்தில் இரண்டு பேருமே அடித்துக் கொள்கிறார்கள். ஆனாலும், தம்பி மீது யாராவது கை வைத்தால் அண்ணனுக்கு கோபம் தலைக்கேறி விடும். அப்படி ஒரு பாசம். இந்த பாசக் குளத்திற்குள்  மோனல் கல்லெறிந்தாலும், குளம்  அசைந்து கொடுக்கவில்லை. இடைவேளைக்கு முன்னரும், கிளைமாக்சுக்கு முன்னரும் தனக்கு நன்றாக நடிக்கவும் வரும் என்றும் நிரூபித்திருக்கிறார் ம.க.ப.ஆனந்த். சந்தானம், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு மேலும் ஒரு பார்சேல்ல்ல்ல்….. தம்பி ராமையா, கோவை சரளா மாதிரியான அப்பா அம்மாக்கள் எந்த ஊரிலிருக்கிறார்கள் என்று தேடிப் பார்க்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே மகன்கள் தண்ணியில் தள்ளாடுகிறார்கள். போதாக் குறைக்கு ஆங்கிலேயேனுக்கே ‘அல்வா’ கொடுத்த பாட்டி சௌகார் ஜானகி. மோனலின் பொறுப்பான அண்ணனாக எஸ்.பி.சரண், அப்பாவாக ஜெயப்பிரகாஷ்…அமெரிக்க மாப்பிள்ளையாக திடீரென கிளைமாக்சுக்கு முன்னர் வந்து தமிழ் சினிமாவின் ‘அமெரிக்க மாப்பிள்ளை’ கதாபாத்திரத்திற்கே ஆசிட்ஊற்றிவிடுகிறார் சந்தானம். சீரியசாக கிளைமாக்ஸ் போய்க் கொண்டிருக்கும் போதும், சந்தானத்தின் ‘சர்ப்ரைஸ் என்ட்ரி’ செம ரகளையாக அமைந்திருக்கிறது. எதுக்கு பாஸ், நமக்கு ஹீரோவெல்லாம், அதுக்குத்தான் நிறைய பேர் இருக்காங்களே, இந்த காமெடி டிராக்கையே நல்லா ஓட்டலாமே… யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ‘தக்காளிக்கு தாவணியே…மற்றும் ‘விடுடா பொண்ணுங்களே…வேணாம்…பாடல்கள் அதிகமாக தாளம் போட வைக்கும். வானவராயன் வல்லவராயன் – எந்த லாஜிக்கும் பார்க்காம வாய் விட்டுச் சிரிக்கலாம்…  

Read Previous

அமீரைக் குற்றம் சாட்டும் அறிமுக இயக்குனர்…

Read Next

‘ஐ’ இசை விழா – முழு தொகுப்பு….

Most Popular