நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2026 பொங்கல் வெளியீடாக வந்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம், எம்ஜிஆர்-ஐக் கொண்டாடும் ஒரு கற்பனை கலந்த காமெடி-ஆக்ஷன் படமாக அமைந்துள்ளது.
சூப்பர் ஹீரோ கான்செப்ட்டுடன் எம்ஜிஆர் ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படம், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கலந்து பொழுதுபோக்கு அளிக்க முயற்சிக்கிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு நலன் இயக்கிய இப்படம், கார்த்தியின் வித்தியாசமான அவதாரத்தைக் காட்டுகிறது.
மாசிலா என்ற கற்பனை ஊரில் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண், எம்ஜிஆர் மறைந்த நாளில் பிறந்த, தனது பேரனை கார்த்தி, தீவிர எம்ஜிஆர் ரசிகராக வளர்க்கிறார். வளர்ந்து இன்ஸ்பெக்டர் ஆகும் கார்த்தி, லஞ்சம் வாங்கி நன்றாக சம்பாதிக்கிறார். ஒரு லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனிடையே, பிரபல தொழிலதிபர் சத்யராஜின் மகள் ஷில்பா மஞ்சுநாத் ஏற்படுத்திய கார் விபத்து மரணம் ஒன்றில், அவரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுகிறார். அதை வைத்து முதல்வருடன் நெருக்கமாக இருக்கும் சத்யராஜின் ஆதரவுடன் மீண்டும் வேலைக்குச் சேர்கிறார். ஒரு தொழிற்சாலை விவகாரத்தில் அரசுக்கு எதிராக சிலர் குரல் எழுப்ப, அவர்களைக் கண்டுபிடிக்கும் குழுவில் இணைகிறார். ஒரு கட்டத்தில் அவர் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆனவர் என்பது தாத்தா ராஜ்கிரணுக்குத் தெரிய வர, அன்றே அவர் இறந்து போகிறார். அவரது வேண்டுகோளுக்கு இணைங்க எம்ஜிஆர் ‘பவர்’ கார்த்தி உடலில் இறங்கி நல்லது செய்ய ஆரம்பிக்கிறது. ஆனால், இது கார்த்திக்கே தெரியாது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதுன் படத்தின் மீதிக் கதை.
கார்த்தி தனது இரட்டை ஆளுமை கதாபாத்திரங்களில் பிரகாசிக்கிறார். எம்ஜிஆர் அவதாரத்தில் அவரது மேனரிசமும், ஸ்டைலும், கூடவே வரும் நகைச்சுவை நடிப்பும் சிறப்பு. எம்ஜிஆர் பிம்பத்தின் நடிப்பைத் தாக்குப் பிடித்து நடித்து படத்தையும் தாங்கி நிற்கிறார்.து. க்ரித்தி ஷெட்டி நாயகியாக இருந்தாலும், அவ்வப்போது வந்து போகிறார். எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண், உணர்ச்சிகரமான தாத்தா வேடத்தில் நடித்துள்ளார். சத்யராஜ், ஆனந்தராஜ், கருணாகரன் குறைவான காட்சிகளில் வந்தாலும் அவர்களது கதாபாத்திரத்தைப் பேச வைக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கின்றன. பழைய எம்ஜிஆர் பாடல்களின் ரீமிக்ஸ் படத்திற்கு கூடுதுல் பலத்தை சேர்க்கிறது. ஒளிப்பதிவு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் (குறிப்பாக கிளைமேக்ஸ்) சிறப்பாக அமைந்துள்ளன.
திரைக்கதை முதல் பாதியில் சுவாரசியமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் அந்த சுவாரசியம் குறைந்தாலும், எம்ஜிஆர் ‘பவர்’ கார்த்திக்குள் நுழைந்து ஒரு சூப்பர் மேன் படமாக மாற்றி ஆக்ஷனில் சென்றுவிடுகிறது.
‘வா வாத்தியார்’ ஒரு வழக்கமான மசாலா படமாக இருந்தாலும், கார்த்தியின் ஒன்-மேன் ஷோவால் பார்க்கத்தக்கது. எம்ஜிஆர் ரசிகர்களுக்கு சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.