‘ஹாரர்’, அதாவது ‘பயம்’ என்ற உணர்வை மையப்படுத்திய தமிழ்ப் படங்கள் வெளிவருவது மிகவும் குறைவுதான். நாம் சொல்வது ‘பேய்’ என்ற பயம் இல்லாத தமிழ்ப் படங்களைப் பற்றி…
ஹாலிவுட்டில் மட்டுமே இது மாதிரியான படங்கள் அடிக்கடி வருவது வழக்கம். தமிழில் எப்போதோ ஒரு முறைதான் வரும். அப்படி வந்திருக்கம் ஒரு படம்தான் இந்த ‘உரு’.
பிரபல எழுத்தாளரான கலையரசன் எழுதிய கதைகள் மூலம் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர். அவர் எழுதிய கதைகளை யாரும் வாங்கிப் படிப்பது குறைந்துவிட்ட நிலையில், மீண்டும் தன் எழுத்துத் திறமையை நிரூபிக்க, மேகமலைக்குச் சென்று தனிமையில் ஒரு ‘பயம்’ கதையை எழுத ஆரம்பிக்கிறார். அப்போது அவரைக் கொலை செய்ய முகத்தை முகமூடி கொண்டு மறைத்திருக்கும் ஒரு உருவம் முயற்சிக்கிறது.
கணவன் கலையரசனைப் பார்க்க மனைவி தன்ஷிகாவும் மேகமலைக்கு வருகிறார். அந்தத் தனிமையான வீட்டில் கலையசரன் இல்லாமல் தன்ஷிகா மட்டும் அந்த முகமூடி உருவத்திடம் மாட்டிக் கொள்கிறார். அந்த உருவம் தன்ஷிகாவைக் கொல்ல 5 மணி நேரம் மட்டுமே டைம் கொடுக்கிறது. அதில் இருந்து அவர் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை என்று சொல்ல முடியாத ஒரு முடிவு இந்தப் படத்தில் உண்டு. அது என்ன என்பதுதான் சஸ்பென்ஸ்.
கலையசரன், தன்ஷிகா இருவருக்குமே ‘பயம்’ என்ற ஒரே ஒரு உணர்வைக் காட்டினாலே போதும். கணவன், மனைவியான இருவரும் ஆரம்பத்தில் சிறு சிறு சண்டை போட்டுக் கொள்ளும் சில காட்சிகள் மட்டுமே பயத்திற்கு அப்பாற்பட்டது. இருவருமே அவர்களது கதாபாத்திரங்களில் நன்றாக பயப்பட்டிருக்கிறார்கள்.
அந்தத் தனிமையான வீடும், அந்த சுற்றுப்புறமும், அடிக்கடி ஏரியல் ஷாட்டில் வரும் மலைப் பிரதேசமும் நமக்கும் சேர்த்து பயத்தைக் கொடுக்கின்றன.
ஒரே ஒரு வீடு, இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே படத்தை முழுமையாக ஆக்கிரமித்துவிடுகின்றன. மைம் கோபி மட்டும்தான் படத்தில் அடுத்து அதிக நேரம் வரும் மூன்றாவது கதாபாத்திரம்.
கிளைமாக்ஸுக்கு முன்பாக நாம் சிறிதும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விக்கி ஆனந்த்.
சமீபத்தில் வெளிவந்த ‘ஹாரர்’ படங்களில் மிரள வைத்த படம் என ‘உரு’ படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.