டு லெட் – விமர்சனம்

மக்களின் வாழ்வியலை யதார்த்தமாய் சொல்லும் படங்கள் தமிழ் சினிமாவில் அபூர்வமாகத்தான் வருகின்றன. அப்படி அபூர்வமாய், அம்சமாய் வந்துள்ள படம்தான் இந்த ‘டு லெட்’.

ஒளிப்பதிவாளரான செழியன் தன் முதல் இயக்கத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் பெரிய நடிகர்களையும், பெரிய நடிகைகளையும் வைத்து படமெடுத்திருக்கலாம். ஆனால், கதைக்குத் தேவையான கதையின் நாயகனையும், நாயகிகையும் யதார்த்தமான முகங்களாய் தேர்வு செய்து பொருத்தமான நடிப்பை வரவைத்து இந்த ‘டு லெட்’ படத்தை உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள வைத்து தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ஒரு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார்.

சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பவர் சந்தோஷ் ஸ்ரீராம். மனைவி ஷீலா, மகன் தருண் ஆகியோருடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர்கள் குடியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர் அவர்களை உடனடியாக வீட்டைக் காலி செய்யச் சொல்கிறார். குறிப்பிட்ட தேதிக்குள் வேறு ஒரு வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்க சந்தோஷ், ஷீலா எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

வாழ்க்கையில் ஏழையாகவும் இருந்துவிடலாம், பணக்காரனாகவும் இருந்துவிடலாம், ஆனால், நடுத்தரக் குடும்பத்தில் அதிலும், கொஞ்சம் ஏழ்மையான நடுத்தரக் குடும்பம் என்றால் கேட்கவே வேண்டாம். அந்தக் குடும்பத்தினரின் கஷ்ட நஷ்டம், வலி, ஆசை, பாசம் எப்படி இருக்கும் என்பதை சந்தோஷ், ஷீலா இருவருமே அவ்வளவு யதார்த்தமாய், நிஜ தம்பதியினர் எப்படி இருப்பார்களோ அப்படியே வெளிப்படுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் கூட அவர்கள் நடிக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது, அவ்வளவு சிறப்பு.

மாஸ்டர் தருண், வீட்டு உரிமையாளர் ஆதிரா, வீட்டு புரோக்கர் அருள்எழிலன் இப்படி மற்ற கதாபாத்திரங்கள் கூட அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் பின்னணி இல்லை என்பது தெரியவேயில்லை. அதற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் இளையராஜாவின் பாடல் மற்ற ஓசைகள் அமைந்துள்ளன.

இம்மாதிரியான சினிமாக்கள்தான் தமிழ் சினிமாவில் அதிகம் வர வேண்டும். இப்படிப்பட்ட படங்களை மக்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டால், கமர்ஷியல் சினிமாக்கள் என்ற அபத்தமான சில சினிமாக்கள் வருவது கொஞ்சம் குறையும்.

டு லெட் – அரங்குகள் நிறையட்டும்…

Read Previous

சினிமா ஒரு துப்பாக்கி போல…. – சீமான்

Read Next

‘தலைவா’ டிசைனில் ‘தலைவி’ படம்

Most Popular