திருட்டுப் பயலே 2 விமர்சனம்

சமூக வலைத்தளங்களில் முன் பின் தெரியாதவர்களுடன் பழகுவது பலவித ஆபத்துகளில் கொண்டு போய்விட வாய்ப்புள்ளது என்பதைச் சொல்லியிருக்கும் படம். இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

கதை

பாபி சிம்ஹா, அமலா பால் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். காவல் துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கும் பாபி சிம்ஹா, நுண்ணறிவுப் பிரிவில் சில விஐபிக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் பணிக்கு அமர்த்தப்படுகிறார். பாபி சிம்ஹாவை மிக நேர்மையானவர் என நினைத்து அவருக்கு அந்த வேலையைக் கொடுக்கிறார் அந்தத் துறையின் ஐ.ஜி. ஆனால், பாபி சிம்ஹாவே முதன் முதலில் ஒட்டுக் கேட்கும் ஒரு தொலைபேசி உரையாடலைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக பத்து கோடியை அடித்துவிடுகிறார்.

பாபி சிம்ஹாவின் மனைவி அமலா பால் பேஸ்புக்கில் அதிக ஆர்வத்துடன் இயங்குபவர். அதில் பழக்கமானவர் பிரசன்னா. ஒரு கட்டத்தில் பிரசன்னா, அமலா பாலை ஆசைக்கு இணங்க வைக்க பிளாக் மெயில் செய்ய ஆரம்பிக்கிறார். பிரசன்னாவைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும் பாபி சிம்ஹா, பிரசன்னாவுடன் நேருக்கு நேர் மோத களத்தில் இறங்குகிறார். பதிலுக்கு பிரசன்னா, பாபி சிம்ஹா செய்த திருட்டுத்தனங்களைத் தெரிந்து கொண்டு அவரையும் பிளாக் மெயில் செய்கிறார். அமலா பாலின் வீடியோவையும், பாபி சிம்ஹாவின் திருட்டுத் தனங்களையும் வெளியிடுவேன் என மிரட்டுகிறார். இதன் முடிவு என்ன என்பதுதான் ‘திருட்டுப் பயலே 2’.

இயக்கம்

‘கந்தசாமி’ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குனர் சுசி கணேசன் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். சமூக வலைத்தங்களில் ஏற்படும் நட்பு, மொபைல் போன் மூலம் ஏற்படும் சிக்கல்கள், குடும்பத்தில் உள்ளவர்களிடையே நம்பிக்கை இல்லாதது என இந்தக் காலத்தில் மக்கள் படும் அவஸ்தைகளைப் படமாக்கியிருக்கிறார். ‘திருட்டுப் பயலே’ படத்தின் முதல் பாகம் ஒரு சராசரியான இளைஞன், இளைஞி ஆகியோரைப் பற்றிய கதையாக இருந்ததால் அனைவரையும் கவர்ந்தது. அந்த முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது இதில் கொஞ்சம் சுவாரசியம் குறைவுதான்.

நடிப்பு

திருட்டுத் தனமானவனாக இருக்க வேண்டும் என்றால் அந்தத் திருட்டுத் தனம் பார்வையிலேயே வெளிப்பட வேண்டும். அதோடு, உடல் மொழியிலும் ஒரு தெனாவெட்டு இருக்க வேண்டும். அது இரண்டுமே பாபி சிம்ஹாவிடம் இல்லை. பிரசன்னாவை முழுமையாக எதிர்க்க முடியாமல் இவரும் தவிப்பது நாயகனுக்குரிய கெத்தை குறைக்கிறது. ஆனால், படத்தில் எதற்கும் பயப்படாதவராக, அஞ்சாதவராக இருக்கும் பிரசன்னா தான் படத்தின் நாயகனைப் போல எந்தப் பிரச்சனையிலிருந்தும் மீண்டு வருகிறார். பாபி சிம்ஹாவுடன் ஒப்பிடும் போது பிரசன்னா நடிப்பில் மேலோங்கி இருக்கிறார்.

அமலா பால் படத்தில் மிகப் பேரழிகியாகத் தெரிய வேண்டும். ஆனால், அவருக்கு அதிக மேக்கப் இல்லாமல், ரிச்சான ஆடைகள் இல்லாமல் சாதாரண ஒரு மனைவியாக நடமாட விட்டிருக்கிறார்கள். அவரது அழகில் பிரசன்னா மயங்குவதற்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை. சொந்தக் குரலில் வேறு பேசி தமிழைக் கொலை செய்திருக்கிறார் அமலா பால். ஆனால், சிரிப்பில் மட்டும் கள்ளம் கபடம் இல்லாமல் சிரிக்கிறார்.

இசை

வித்யாசாகர் இசையில் பாடல்கள் பெரிதாக ரசிக்கவில்லை. பின்னணி இசை மட்டும் ஓகே.

படத்திற்கு +

மக்கள் தற்போது அதிகம் மூழ்கிக் கிடக்கும் ஃபேஸ்புக், மொபைல் போன் ஆகியவற்றை மையப்படுத்திய கதை என்பதால் இந்தக் கால ரசிகர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

படத்திற்கு –

இடைவேளை வரை நேரம் போவது தெரியாமல் போகிறது. அதன் பின் பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா பால் மூவரிடையே நடக்கும் ‘டாம் அன்ட் ஜெர்ரி’ போராட்டம்….நீ…….ண்டு கொண்டே போகிறது.

Read Previous

பாலக்காட்டில் எம்ஜிஆர் நினைவகம் அமைக்க ‘எம்ஜிஆர்’ பட இயக்குனர் கோரிக்கை

Read Next

தானா சேர்ந்த கூட்டம் – டீசர்

Most Popular