திலகர் – விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் கிராமத்துப் பின்னணியில் படங்கள் வருவது வெகுவாகக் குறைந்து வரும் வேளையில் முற்றிலும் கிராமத்துப் பின்னணியில் ஒரு ஆக்ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தில் ஆக்ஷன்தான் முக்கியம் என்றாலும், அதை குடும்பத்துப் பின்னணியில் மிகவும் நெகிழ்ச்சியுடன் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பெருமாள் பிள்ளை. தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இன்னும் சாதிய அடிப்படையிலான மோதல்களும், யார் பெரியவன் என்ற ஈகோ மோதல்களும் இல்லாமல் இல்லை. அதையெல்லாம் விட்டு விட்டு, படித்து பட்டம் பெற்று முன்னேறி வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள் என்பதை இன்றைய தலைமுறையினருக்கும் உணர்த்தியிருக்கிறார்கள் படக் குழுவினர். தென் தமிழகத்தில் உள்ள வெல்லூர் என்ற கிராமத்தில் கிஷோர் பேச்சைக் கேட்டு கட்டுப்பாடுடன் இருக்கும் கிராமம் அது. மனைவி, அம்மா, தம்பி என தன் குடும்பத்தார் மீதும், ஊர் மக்கள் மீதும் பாசமாக இருப்பவர் கிஷோர். இவருக்கு ஊரில் இருக்கும் நல்ல பெயரைப் பார்த்து பொறுக்காத ‘பூ’ ராமு, வெல்லூர் மக்களை அவமானப்படுத்துகிறார். இருந்தாலும் பொறுமையாகப் போகும் கிஷோர் ஒரு சந்தர்ப்பத்தில் ராமுவின் திரையரங்கத்ற்கு சீல் வைக்க காரணமாக இருக்கிறார். இதனால் ஆத்திரமடையும் ராமு, கிஷோரின் வாழைத் தோப்பை அழித்து விடுகிறார். ஆத்திரமடையும் கிஷோர் ராமுவின் மகன்களை அடித்து உழைத்து போலீசிடம் சிக்க வைக்கிறார். பின்னர் பெயிலில் வரும் மகன்கள், ராமு ஆகியோர் சேர்ந்து தசரா திருவிழாவில் கிஷோரைக் கொலை செய்கிறார்கள். அதுவரை, அப்பாவியாக இருந்த கிஷோரின் தம்பி துருவா, அண்ணனைக் கொன்றவர்களைப் பழி வாங்க, ‘திலகர்’ ஆக வெகுண்டெழுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ‘தேவர் மகன், சண்டக் கோழி’ போன்ற படங்களில் அப்பா, மகன் உறவைப் பார்த்த நமக்கு இந்தப் படத்தில் அண்ணன், தம்பி பாசத்தை உணர்வுபூர்வமாகக் காட்டியிருக்கிறார்கள். அண்ணணாக நடித்திருக்கும் கிஷோரும், தம்பியாக நடித்திருக்கும் கிஷோரும் நிஜ அண்ணன் தம்பி போலத்தான் தெரிகிறார்கள். அதே போல கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் அனு மோல், அம்மாவாக நடித்திருக்கும் சுஜாதா ஆகியோர் அடங்கிய குடும்பத்தைப் பார்த்தால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வையே தரவில்லை. கிஷோரின் நடிப்பில் அவருடைய குரலும் எப்போதுமே தனி கவனம் பெறும். இந்தப் படத்தில் ஊர் பெரிய மனிதராக குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் அவ்வளவு பொருத்தமாக நடித்திருக்கிறார். திலகர் ஆக புதுமுகம் துருவா. இடைவேளை வரை இந்தக் காலத்தில் இப்படி ஒரு அப்பாவியா என யோசிக்க வைப்பவர், இடைவேளைக்குப் பின் வீறு கொண்டு எழுந்து அவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். ஆக்ஷன் நடிப்பில் துருவாவின் நடிப்பு அடடா போட வைக்கிறது. துருவாவிற்கு ஜோடியாக மிருதுளா பாஸ்கர். அதிகமான வேலையில்லை என்றாலும் வரும் ஒரு சில காட்சிகளில் மனதில் இடம் பிடிக்கிறார். வில்லனாக ‘பூ’  ராமு, குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்தவர், உக்கிர வில்லன் உக்கிரபாண்டியாக உருமியுள்ளார். கண்ணன் இசையில் பாடல்களை விட பின்னணி இசைதான் காட்சிகளுக்குப் பொருத்தமான விதத்தில் அமைந்து ரசிக்க வைத்திருக்கிறது. ராஜேஷ் கே. நாராயணன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. நெல்லைச் சீமை கிராமம் ஒன்றை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார். அதிலும் குலசேகரப்பட்டிணம் தசராத் திருவிழா காட்சியை அவ்வளவு கூட்டத்திற்கிடையில் எப்படித்தான் படமாக்கினாரோ…? கதையை மிஞ்சாத இயல்பான ஒளிப்பதிவு. கிஷோர், ராமின் மகன்களுடன் சண்டை போடும் காட்சியில் நிஜ மண் சுவர்களை உடைத்து சண்டையிடுவதில் ஸ்டன்ட் மாஸ்டர் ஜி தனி கவனம் பெறுகிறார். வன்முறை வேண்டாம் என்பதை வன்மத்துடன் சொல்லியிருக்கிறார்கள். திலகர் – வெற்றித் திலகம்.    

Read Previous

இரவும் பகலும் வரும் – விமர்சனம்

Read Next

11 மணி நேரத்தில் படமான ‘தப்பா யோசிக்காதீங்க’…

Most Popular