இரவும் பகலும் வரும் – விமர்சனம்

மகிழ்ச்சியும் சோகமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் விதத்தில்தான் ‘இரவும் பகலும் வரும்’ என படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. பாசத்தால் ஏங்கித் தவிப்பது, பணத் தேவை, சரியான கவனிப்பு இல்லாதது போன்றவைதான் ஒரு மனிதன் தவறான வழியில் செல்ல காரணமாக அமைகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு பாசமோ, காதலோ, நட்போ நெருங்கும் போது அவர்கள் மாற வாய்ப்புள்ளது என்பதை இந்தப் படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாலா ஸ்ரீராம். அம்மா இல்லாததால், சித்தியின் வளர்ப்பு பிடிக்காத மகேஷ் வீட்டில் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டேயிருப்பார். மகேஷிடம் சின்னச் சின்னத் திருட்டுப் பழக்கம் இருப்பது அவருடைய சித்திக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் வீட்டில் சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இரவு நேரங்களில் திருடுவதுதான் மகேஷுக்கு வேலை. அப்படி ஒரு நாள் திருடும் போது வேறு ஒரு திருட்டுக் கும்பலுடன் மகேஷுக்குப் பழக்கமாகிறது. அந்தத் திருட்டுக் கும்பலை வழி நடத்துவது போலீஸ் அதிகாரியான வெங்கடேஷ். ஒரு முறை அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வழிப்பறி செய்யும் போது மகேஷுக்கு முன்பே பழக்கமான யுவராணி இறந்து போகிறார். அவர் தன் காதலி அனன்யாவின் அண்ணி என பின்னர் மகேஷுக்குத் தெரிய வருகிறது. அதன் பின் திருட்டுத் தொழிலை விட முடிவெடுத்து, அந்தத் திருட்டுக் கும்பலைக் கண்டுபிடித்து அழிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. எப்போதும் ஒரு சோகமான முகத்துடனேயே இருக்கும் மகேஷுக்கு இந்தக் கதாபாத்திரம் அப்படியே பொருந்திப் போகிறது. பார்க்க அப்பாவியாகத் தெரிந்தாலும், இவரா திருடுபவர் என்ற கேள்விக்குப் பொருத்தமான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். கடைசியில் மனம் மாறி திருட்டுத் தொழிலை விட்டு, அவர்களைக் கண்டுபிடிக்க இறங்கிய பின் நல்லவராக மனதில் இடம் பிடிக்கிறார். தமிழில் அனன்யா எப்போதோ ஒரு சில படங்களில்தான் நடிக்கிறார். தொடர்ந்து நடித்திருந்தால் இந்நேரம் நயன்தாராவுக்கெல்லாம் கூட போட்டியாக வந்திருக்கலாம். ஜெகனின் நகைச்சுவையில் சிரிப்பு குறைவு. வெங்கடேஷின் வில்லத்தனத்தில் இப்படி கூடவா நகை மீது பைத்தியமாக ஒருவர் இருப்பார் என ஆச்சரியப்பட வைக்கிறார். யுவராணி கொஞ்சமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார். தினா பாடல்களில் ஏமாற்றிவிட்டார். கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு இரவு நேரக் காட்சிகளை யதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறது. இன்னும் பரபரப்பான ஆக்ஷன் படமாக திரைக்கதை அமைத்திருக்கலாம். காவல் துறை அதிகாரிதான், திருடர்களுக்கெல்லாம் தலைவன் என்பதெல்லாம் 70களோடு போய்விட்ட சினிமாத்தனம். இரவும் பகலும் வரும் – மிதமான வெளிச்சம்.

Read Previous

Ok Kanmani – Mental Manadhil – Song

Read Next

திலகர் – விமர்சனம்

Most Popular