தெகிடி – விமர்சனம்

பல பரபரப்புகளுக்கு மத்தியில் சத்தமில்லாமல் சில படங்கள் சத்தத்தை வரவழைத்து விடும். அப்படி வந்துள்ள படம்தான் இந்த ‘தெகிடி’.

அறிமுகப்படத்திலேயே அசத்தியுள்ள இயக்குனர்கள் வரிசையில் இயக்குனர் பி.ரமேஷ் இடம் பெற்று விட்டார். இப்படி ஒரு அருமையான கதையையும், திரைக்கதையையும் அடுத்து என்ன..அடுத்து என்ன…என்ற பரபரப்பை ஏற்படுத்தம் அளவிற்கு கொடுத்து வெற்றி பெற்று விட்டார்.

‘தெகிடி’ என பெயரில் மட்டும் வித்தியாசத்தை வைக்கவில்லை, படத்திலும் அந்த வித்தியாசம் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார். கதையின் மீதும், படத்தின் மீதும் அவருக்குள்ள நம்பிக்கை படமாக்கியிருக்கும் விதத்திலேயே தெரிகிறது.

அசோக் செல்வன், கிரிமினாலஜி படித்து விட்டு ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். சில தனி நபர்களின் தகவல்களைத் திரட்டிக் கொடுக்கும் வேலை அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு நான்கைந்து பேருடைய தகவல்களை சரியாக திரட்டிக் கொடுக்கிறார். அடுத்து கொடுத்த வேலை ஒரு பெண்ணைப்  பற்றியது. அவர்தான் படத்தின் ஹீரோயின் ஜனனி ஐயர் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

ஜனனியின் அழகில் மயங்கி, தான் யார் என்பதை  சொல்லாமலேயே தொழில் தர்மத்தையும் மீறி அவருடன் நெருங்கிப் பழகி காதலிக்கவும் ஆரம்பிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் முதலில் சேகரித்துக் கொடுத்த ஒரு நபர் விபத்தில் இறந்த செய்தியைப் பார்க்கிறார் அசோக். தொடர்ந்து அவர் தகவல் சேகரித்துக் கொடுத்த நபர்கள் அடுத்தடுத்து இறக்க நேரிட அதிர்ச்சியாகிறார். அப்படியென்றால், அடுத்து ஜனனி ஐயரும் அந்த லிஸ்ட்டில் இருப்பாரே என்ற எண்ணத்தில், இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க முயல்கிறார்.

அதை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.

‘பீட்சா 2’ படத்தில் நாயகனாக நடித்த அசோக் செல்வன் அடுத்து நடித்திருக்கும் படம் இது.  ‘பிரைவேட் டிடெக்டிவ்’ என்றழைக்கப்படும் ‘தனியார் துப்பறியும் நிபுணர்’. அப்படியே அந்த கதாபாத்திரத்தில் பொருந்திப் போகிறார். அதன் பின் என்ன நடிப்பதுதான்…அதையும் அந்த பாத்திரத்திற்கேற்றபடி சரியான அளவில் வெளிப்படுத்துகிறார். நடிப்பில் நிறையவே யதார்த்தம் தெரிகறது. சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னணி நாயகனாகலாம்.

ஜனனி ஐயர், அசோக் செல்வன் உயரத்திற்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும் நடிப்பில் குறைவைக்கவில்லை. அவர் காட்ட நினைக்கும் நடிப்பை, அவரது கண்கள் முந்திக் கொண்டு காட்டி விடுகின்றன.

அசோக் நண்பனாக காளி, இன்ஸ்பெக்டராக ஜெயப்பிரகாஷ் , அசோக்கின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். வில்லன்களாக பிரதீப் நாயகர், ஜெயக்குமார்.

நிவாஸ் கே. பிரசன்னா விண்மீன்…பாடலிலும், பின்னணி இசையிலும் ரசிக்க வைக்கிறார். படத்தை தரம் உயர்த்திக் காட்டியதில் முக்கிய பங்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கு உள்ளது. தேவையற்ற காட்சிகள் எதுவுமில்லாமல், பரபரவென படத்தை நகர்த்த உதவியுள்ள எடிட்டர் லியோ ஜான்பால், முதல் பாதியில் வரும் பாடல்களை தாராளமாக வெட்டியிருக்கலாம். அவை படத்தின் வேகத்திற்கு ஸ்பீட் பிரேக்கர்ஸ்.

தெகிடி –  தெகிரியமா ரசிக்கலாம்…

 

Read Previous

வல்லினம் – விமர்சனம்

Read Next

வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் – இசை விரைவில்…

Most Popular