தயாரிப்பு – கம்பெனி புரொடக்ஷன்ஸ் – எம்.சசிகுமார் இயக்கம் – எஸ்.ஆர்.பிரபாகரன் இசை – என்.ஆர்.ரகுநந்தன் ஒளிப்பதிவு – ச. பிரேம்குமார் படத்தொகுப்பு – வி. டான்போஸ்கோ
நடிப்பு – எம். சசிகுமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகரன், சூரி, அப்புக்குட்டி, நரேன், தென்னவன், துளசி சுஜாதா, நீது நீலாம்பரன் மற்றும் பலர்.
படம் பார்க்க வர்ற ரசிகர்களை எந்தவிதமான சலிப்பையு அடைய வைக்காம, ஒரு இரண்டரை மணி நேரம் அப்படியே உக்கார வைக்கிறது ஒரு சில இயக்குனர்களுக்குதான் கை வந்த கலை. அறிமுக இயக்குனர் பிரபாகரன், ஆரம்பத்துல இருந்து, கடைசி வரைக்கும் இதை சரியா கையாண்டு அவருடைய முதல் படத்தை ஒரு வெற்றிப் படமா விதைச்சிட்டாரு.
வழக்கமான, கிராமம், காதல், நண்பர்கள், உறவுகள் இதுதான் கதைன்னாலும், அதை பயன்படுத்தியிருக்கிற விதம் புதுசு. நட்புக்கும் சசிகுமாருக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்குன்னு தெரியலை. இந்த படத்துலயும் ‘நட்பு’ தான் அவரை ஒரு தயாரிப்பாளராவும், நடிகராவும் ஜெயிக்க வச்சிருக்கு.
கண்டமனூரைச் சேர்ந்த சசிகுமார், சூரி, இனிகோ பிரபாகரன் நெருங்கிய நண்பர்கள். சீமனூத்தைச் சேர்ந்த லட்சுமி மேனனை காதலிக்கிறாரு காலேஜ்ல படிக்கிற இனிகோ பிரபாகரன். இவருக்கு, லட்சுமி கிட்ட காதலை சொல்ல தைரியமில்லாம, சசிகுமாரை துணைக்கு கூப்பிடறாரு…டெய்லி பஸ்ல காலேஜுக்குப் போற லட்சுமி மேனனை எப்படியாவது இனிகோவை காதலிக்க வைச்சிடலாம்னு சசியும் போறாரு. தொடர்ச்சியா முயற்சி நடக்குது.
ஒரு நாள், லட்சுமியை மடக்கி, சசி , நண்பன் இனிகோவுக்காக பேச, நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்னு சசியைப் பார்த்து சொல்லிடறாங்க லட்சுமி. அப்புறம் என்ன நண்பனை சமாதானப்படுத்திட்டு சசி, லட்சுமியை சின்சியரா லவ் பண்ண ஆரம்பிச்சிடறாரு…அப்ப நடக்கிற ஒரு எதிர்பாராத கொலைப் பழி சசிகுமார் மேல விழ, அப்புறம் நடக்கிறது எல்லாமே ட்விஸ்ட்டுக்கு மேல ட்விஸ்டா கிளைமாக்ஸ் வரை நாம எதிர்பார்க்காத மாதிரி பரபரப்பா போகுது படம்.
சரியான கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்யறதுலயே ஒரு நடிகரோட பாதி வெற்றி அமைஞ்சிடுது. அப்படி ஒரு பொருத்தமான படத்தை தேர்வு செஞ்சிருக்காரு சசிகுமார். ஆரம்பத்துல ரஜினி ரசிகரா கொஞ்சம் ‘அதிரடி’யா அறிமுகமானாலும், போகப் போக நம்ம மனசுக்குள்ள உட்காந்துடறாரு. ஆனாலும், அநியாயத்துக்கு நல்லவனா இருக்காரு. அது என்னன்னு படத்தைப் பாருங்க புரியும் ? . சசி ஸார், நீங்க விளையாட வேண்டிய ஏரியா இதுதான்…இதே மாதிரி, இறங்கி பதக்கத்தை வாங்குங்க…
லட்சுமி மேனன், அநேகமா இவருக்கு மேக்கப்பே போட்டிருக்க மாட்டாங்க. அப்படியே மதுரைப் பக்கத்து பொண்ணு மாதிரியே இருக்காரு. இப்படி தாவணி-ல பொண்ணுங்கள பார்த்து (?) எவ்வளவு நாளாச்சி. அந்த சின்ன (! ) கண்ணுல முறைக்கிற முறைப்பு இருக்கே. இப்படிலாம் முறைச்சா எவன்தான் கிட்ட வந்து காதலை சொல்றது , இனிகோ மாதிரி பயந்துதான் நிக்கணும். வீட்டுக்கு காதல் தெரிஞ்சதும், அப்பாவை எதிர்க்காம அடங்கிப் போயிட்டாரேன்னு பார்த்தால், சசிகுமாரை சந்திச்சி பேசற அந்த ஒரு காட்சி போதும் அவரோட தைரியத்துக்கு. ‘கும்கி’க்கு முன்னாடி இதுலயே நல்ல நடிகைன்னு பேரை வாங்கிட்டாங்களே !!
சூரி, அதிகம் அலட்டிக்காம டயலாக்காலயே நகைச்சுவைய அள்ளித் தெளிச்சிருக்காரு. இப்படியே கலக்கிட்டிருந்தாருன்னா, அடுத்த ‘மதுரை சைக்ளோன்’ ஆயிடுவாரு.
சசிகுமார் நண்பனா இனிகோ பிரபாகரன், அழகர்சாமியின் குதிரைல இரண்டாவது கதாநாயகனா நடிச்சவரு. இந்த படத்துலயும் படம் முழுக்க வர்றாரு, முதுகுலயும் குத்திடறாரு…
லட்சுமி மேனன், தோழியா நடிச்சிருக்க நீது நீலாம்பரன், சசிகுமார் அப்பாவா நரேன், லட்சுமி மேனன் அப்பாவா தென்னவன், சித்தியா சுஜாதா அளவான , இயல்பான நடிப்பு.
அப்புக்குட்டி சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் கட்டய கொடுத்துட்டு அப்புறம் கட்டையில போயிடறாரு…
விஜய சேதுபதி தான் படத்துல நட்பான வில்லன். இப்படி காதலிச்ச பொண்ணு கிடைக்காம போயி ஆளாளுக்கு பழி வாங்க இறங்கிட்டால் இந்த ஊருல ஒருத்தனும் இருக்க மாட்டான்.
ரகுநந்தன் இசையில , காதல் வந்து பொய்யாக…, றெக்கை முறைத்தேன் ரசிக்க வச்சிருக்கு. ஆனால், எங்கேயோ கேட்ட ஞாபகம். இளையராஜா ரசிகராக இருக்கலாம்.
முதல் பாதியில் அதிகமான பேருந்து காட்சிகளை வைத்திருப்பதையும், சாதியைப் பற்றி மறைமுகமாகக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாம்.
சசிகுமாருக்கு, சுப்ரமணியபுரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்த சுந்தரபாண்டியன் ‘சூப்பரான’ வெற்றியாக அமையும்.