தெலுங்கில் வெற்றி பெற்ற ‘க்ஷனம்’ திரைப்படத்தைத் தமிழில் ‘சத்யா’ வாக ரீமேக் செய்திருக்கிறார்கள். ஒரு பெண் குழந்தை காணாமல் போனதைக் கண்டு பிடிக்க முயலும் நாயகனின் கதை. ஆனால், அதில் காதல், தாய்ப் பாசம் இரண்டையும் கலந்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
கதை
சிபிராஜ், ரம்யா நம்பீசன் இருவரும் காதலர்கள். ஆனால், இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் பிரிந்து விடுகிறார்கள். சிபி வெளிநாட்டிற்கு வேலை சென்று விடுகிறார். ரம்யாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கிறது. நான்கு வருடங்களுக்குப் பிறகு, சிபியைத் தொடர்பு கொள்ளும் ரம்யா, காணாமல் போன அவருடைய குழந்தையைக் கண்டுபிடித்துத் தருமாறு கெஞ்சுகிறார். முன்னாள் காதலியின் நினைவாகவே இருக்கும் சிபி, அதைத் தட்ட முடியாமல், சென்னை திரும்பி, ரம்யாவின் குழந்தையைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
இயக்கம்
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை விறுவிறுப்புடன் கொடுத்திருக்கிறார். படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ் கடைசி வரை காப்பாற்றப்பட்டுள்ளது. அந்த சஸ்பென்ஸ் என்ன என்பதை யாராலும் யூகிக்க முடியாது என்பதுதான் படத்தின் திரைக்கதையில் உள்ள சிறப்பம்சம்.
நடிப்பு
சிபிராஜுக்கு அடுத்து ஒரு வெற்றிப் படம் எனத் தாராளமாகச் சொல்லலாம். தாடி வைத்தாலே காதல் தோல்வி என்று சொல்வார்கள். இந்தப் படத்திலும் காதல் தோல்வி நாயகன்தான் அவர். ஆனாலும, அந்த தாடியும், தோற்றமும் அவரை இதுவரை இல்லாத அளவில் புதுமாதிரியாகக் காட்டியிருக்கிறது. மனதுக்குள் இருக்கும் காதல் வலி முகத்தில் இயல்பாகவே வெளிப்படுகிறது.
ரம்யா நம்பீசன், அவருடைய பெண் குழந்தை காணாமல் போன தவிப்பை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். காவல் துறையிலிருந்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வரையில் ரம்யாவுக்கு அப்படி ஒரு குழந்தையே இல்லை என சொல்வதைக் கேட்டு அவர் தவிக்கும் தவிப்பு படம் பார்க்கும் பெண்களுக்கும் தொற்றிக் கொள்ளும்.
ஆனந்தராஜ் நேர்மையான இன்ஸ்பெக்டர் ஆக கொஞ்சம் கலகலப்பா நடித்திருக்கிறார். வரலட்சமி சரத்குமார் இவ்வளவு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஆச்சரியம்தான். இருந்தாலும் கதைக்குத் திருப்புமுனையான ஒரு கதாபாத்திரம். சதீஷ் காமெடியை விட கொஞ்ச நேரமே வரும் யோகி பாபு காமெடி சிரிக்க வைக்கிறது.
இசை
சைமன் கே கிங் இசையில் ‘யவ்வனா…’ பாடல் இனிமையான மெலடியாக காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பின்னணி இசையிலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
படத்திற்கு +
கடைசி வரை காப்பாற்றப்படும் சஸ்பென்ஸ், சிபிராஜ், ரம்யா நம்பீசனின் நடிப்பு.
படத்திற்கு –
இடைவேளைக்குப் பின் யார் எதை எதற்காகக் செய்கிறார்கள் என்பதில் தெளிவில்லாத, குழப்பமான திரைக்கதை. இன்னும் எளிமையாக புரிய வைத்திருக்க வேண்டும்.