சர்வம் தாள மயம் – விமர்சனம்

இயக்குனர் ராஜீவ் மேனன் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தை இயக்கிய 18 வருடங்களுக்குப் பிறகு மிகப் பெரும் இடைவெளியில் இந்த ‘சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

இதற்கு முன் நடனம், விளையாட்டு, இசை என பல விதங்களில் பார்த்த கதைதான். ஆனாலும், இயல்பான காட்சிகளால், கதாபாத்திரங்களால் படத்தை ரசிக்க வைக்கிறார் ராஜீவ் மேனன்.

மாட்டுத் தோலை வைத்து மிருதங்கம் செய்யும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குமரவேல் மகன் ஜி.வி.பிரகாஷ்குமார். டிரம்ஸ் வாசிப்பவருக்கு ஒரு முறை நெடுமுடி வேணு மிருதங்கம் வாசிக்கும் கச்சேரியைப் பார்க்கும் வாய்ப்பு  கிடைக்கிறது. அன்றிலிருந்து மிருதங்கம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நெடுமுடி வேணுவை விடாமல் தொந்தரவு செய்து அவரிடம் சிஷ்யனாகவும் சேர்ந்து விடுகிறார். கற்றுக் கொண்டு வரும் நேரத்தில் நண்பன் ஒருவன் செய்த அரசியலால் அவரால் விரட்டப்படுகிறார். இந்தியாவைச் சுற்றி பல இசைக் கருவிகளைக் கற்கும் ஜிவி பிரகாஷை மீண்டும் சிஷ்யனாக சேர்த்துக் கொள்கிறார் வேணு. இந்தக் கால இசை உலகத்திலிருந்து ஓரம் கட்டப்படும் வேணு, தன் சிஷ்யன் மூலம் தான் யார் என்பதை இந்த உலகத்திற்கு மீண்டும் காட்டுகிறார். இதுதான் படத்தின் கதை.

வாழ்க்கை முறையில் பொருத்தமில்லாத ஒரு குருவுக்கும், சிஷ்யனுக்குமான இசை உறவை மிகவும் ரசனையாகக் காட்டியிருக்கிறார் ராஜீவ் மேனன். அதே சமயம் இடைவேளைக்குப் பின் அவ்வளவு திறமைசாலியான இசை மேதை நெடுமுடி வேணுவையும் டிவி நிகழ்ச்சிக்காக அழைத்து வருவது நியாயமா ?. ஒரு கிளாசிக்கல் படமாகப் போய்க் கொண்டிருப்பது டிவி நிகழ்ச்சி என வந்ததும் ஒரு சாதாரண படம் போல இறங்கியது போலாகிவிட்டது.

ஜி.வி. பிரகாஷ் இதுவரை நடித்துள்ள படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பேச்சில் சென்னைத் தமிழும், செயலில் துடிப்பும், மிருதங்கம் கற்பதில் ஆர்வமும் என அந்த பீட்டர் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். இந்தப் படம் அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.

படத்தின் முக்கியமான கதாபாத்திரமான மிருதங்க வித்வான் வேம்பு ஐயர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் நெடுமுடி வேணு. தன் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு மேதை இப்படித்தான் இருப்பார் என்பதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அவருடைய பேச்சு, உடல் மொழி, பார்வை அனைத்துமே ஒரு கம்பீரத்துடன் இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் காதலியாக அபர்ணா பாலமுரளி. கதைக்கேற்ற, கதாபாத்திரத்திற்கேற்ற நடிகையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர். எந்த ஒரு காட்சியிலும் மிகையில்லாத நடிப்பு.

நெடுமுடி வேணுவின் மதிப்பை குறைக்கச் செய்யத் துடிப்பவர்களாக அண்ணன், தங்கை வினித், திவ்யதர்ஷினி. வினித்திற்காவது வேணுவை பழி வாங்க ஒரு முன்கதை உண்டு. ஆனால், திவ்யதர்ஷினிக்கு அவர் மீது ஏன் அவ்வளவு வெறுப்பு என்பதற்குக் காரணமில்லை. டிவி இசை நிகழ்ச்சிகள் இப்படித்தான் நடக்கின்றன என அவரை வைத்தே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். டிவி நிகழ்ச்சி நடுவரான வினித்தின் சிஷ்யர் எப்படி அதே போட்டியில் கலந்து கொள்வார் எனத் தெரியவில்லை. எந்த டிவி நிறுவனமும் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள்.

அப்பாவி அப்பாவாக குமரவேல், அவ்வளவு யதார்த்தமான நடிப்பு. நெடுமுடி வேணு மனைவியாக சாந்தா தனஞ்செயன். சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் கூட நடிக்கிறோம் என்பது இல்லாமல் நடிக்கிறார்கள்.

ஏஆர் ரகுமான் இசையில் கதையுடன் இணைந்த பாடல்கள்.  ‘வரலாமா உன்னருகில்…’ அதிகம் ரசிக்க வைக்கிறது.

இசை என்பது அனைவருக்கும் பொதுவானது. சாதி, மதத்தை முறி ஆர்வமுள்ள யாரும் கற்றுக் கொண்டு திறமைசாலியாகலாம் என்ற கருத்திற்காக ‘சர்வம் தாள மயம்’ ரசிப்பு மயம்.

Read Previous

சகா – விமர்சனம்

Read Next

சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் ‘மிஸ்டர் லோக்கல்’

Most Popular