தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மசாலாப் படங்களுக்கு என்று எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. நம்பவே முடியாத ஆக்ஷன் காட்சிகளை நம்ப வைக்கும் அளவிற்கு எந்த இயக்குனர் கொடுக்கிறாரோ அவரை கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அப்படித்தான் இந்தப் படத்தில் இயக்குனர் ஹரி பல அதிரடியான நம்ப முடியாத காட்சிகளையும் நம்ப வைக்கும் அளவில் ‘கரம்’ மசாலாவாகச் சேர்த்து கொடுத்திருக்கிறார்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பணத்தை, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அருகில் நிறுத்தி வைப்பது, அரசியல் தலையீட்டால் பணிமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி விக்ரமை அதே இடத்தில் ஐந்து வருடங்கள் பணி செய்ய குடியரசுத் தலைவரே உத்தரவிட்டது என தமிழ் சினிமாவில், ஏன் தெலுங்கு சினிமாவில் கூட வராத பல காட்சிகளை யோசித்து, யோசித்து சேர்த்திருக்கிறார் இயக்குனர் ஹரி.
அது மட்டுமா கிளைமாக்சில் வில்லன்களை போட்டுத் தள்ள வகுக்கக்கப்படும் வியூகம் கூட தமிழ் சினிமாவுக்குப் புதியதுதான். இப்படி ஒரு சுமோ, ஹெலிகாப்டர் சேசிங் கிளைமாக்சை தமிழ் சினிமா இதற்கு முன் பார்த்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்த இரண்டாம் பாகத்தின் உயிர் நாடியே ஸ்டன்ட் சில்வாவின் ஆக்ஷன் காட்சிகள்தான். விக்ரமின் ஒவ்வொரு அடியும், இடியாக இறங்குகிறது என்பது பழைய வசனம்தான் என்றாலும் அது உண்மைதான்.
கல்யாண மண்டப சண்டைக் காட்சி, கோயில் அரிவாள் சண்டைக் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி என விக்ரமும் சண்டைக் கலைஞர்களும் பறந்து பறந்து அடிக்கிறார்கள். ஜாக்சி சான் செய்தாங்க, சில்வஸ்டார் ஸ்டோலோன் செய்தாங்க என அங்கலாய்க்கும் சில ஹாலிவுட் பீட்டர் ரசிகர்கள் இந்த ‘சாமி 2’ சண்டைக் காட்சிகளைப் பார்த்து பொறாமைப்பட வேண்டும்.
படத்தின் கதை வெரி சிம்பிள். தன் அப்பா ஆறுச்சாமியைக் கொன்ற வில்லன் ராவணன் பிச்சையை ஆறுச்சாமியின் மகன் ராமசாமி திரும்ப திருநெல்வேலிக்கே வந்து போட்டுத் தாக்குவதுதான் படத்தின் கதை. முதல் பாகத்தில் யாராலயும் நெருங்க முடியாத ஆறுச்சாமியை இரண்டாம் பாகத்தில் பெருமாள் பிச்சையின் மகன் ராவணன் பிச்சை ‘ஜஸ்ட் லைக் தட்’ கொலை செய்வது நம்ப முடியவில்லை. அவருடைய மனைவி த்ரிஷாவாக இருந்து ஐஸ்வர்யாவாக மாறியவரையும் கொலை செய்கிறார் வில்லன் பாபி சிம்ஹா. நிறை மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா இறந்த பின்னும் தான் சாவதற்கு முன்பு மனைவியின் வயிற்றைக் கிழித்து மகன் ராமசாமியை உயிருடன் வெளியில் எடுக்கிறார் ஆறுச்சாமி. தாய் இறந்தும் தான் பிறந்ததால்தான் டிரைலரில் ராமசாமி ‘நான் பூதம்’ என டயலாக் பேசுகிறார்.
முற்றுப் பெறாத முதல் பாகத்தை இரண்டாம் பாகத்திற்காக ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். போகிற போக்கில் பெருமாள் பிச்சைக்கு இலங்கையில் ஒரு குடும்பம் இருக்கிறது எனச் சொல்லி லாஜிக்காக வில்லன்களை நுழைத்துவிட்டார் இயக்குனர் ஹரி.
ஹரியின் அந்த பரபரப்பும், விறுவிறுப்பும் இந்தப் படத்திலும் அப்படியே இருக்கிறது. ஆனால், சூரியை நம்பிய விதத்தில் மட்டுமே அவர் ஏமாந்து போயிருக்கிறார். நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பு வராத ஜோக்குகளை அடிக்கும் சூரிதான் படத்தின் வேகத் தடை.
ஆறுச்சாமி இரண்டாம் பாகத்தில் ராம்சாமி (விக்ரம் அப்படித்தான் சொல்கிறார்), ஆக அதிரடி காட்டுகிறார். ஐஏஎஸ் படிப்புக்காக மத்திய மந்திரி பிரபு வீட்டில் பிரன் ஆபீஸ் மேனேஜராக வேலை பார்க்கிறார். அப்போது பார்க்க அப்பாவி, ஆனால், பின்னர் ஐபிஎஸ் முடித்துவிட்டு ராம்சாமியாக என்ட்ரி ஆன பின் கடைசி வரை வேகம், வேகம், வேகம், ஆவேசம், ஆவேசம் மட்டுமே விக்ரம் நடிப்பில் நிரந்தரமாகக் குடி கொண்டிருக்கிறது.
விக்ரமை துரத்தித் துரத்திக் காதலிக்கும் மத்திய மந்திரி மகளாக கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமா இலக்கணங்களுடன் கூடிய நாயகி. சிரிக்கிறார், சண்டை போடுகிறார், கொஞ்சுகிறார், இரண்டு பாடல்களுக்கு நடனமாடுகிறார், கொஞ்சமாக கிளாமர் காட்டுகிறார், கொஞ்சம் அழுகிறார்.
‘மாமி’ த்ரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதிலும் அவர் பிராமணப் பேச்சு பேசுவதெல்லாம் ஐயோடா சாமி ஐஸ்வர்யா.
அண்ணன்கள் ஓஏகே தேவர், ஜான் விஜய் ஆகியோரை டம்மியாக்கிவிட்டு தம்பி பாபி சிம்ஹா தான் மெயின் வில்லன். தம்பிக்குப் பின்தான் அண்ணன்கள் பதுங்குகிறார்கள். ஹரி, விக்ரம் ஓட்டத்திற்கு பாபி சிம்ஹாவும் ஈடு கொடுக்கிறார்.
தேவிஸ்ரீபிரசாத் தமிழ்ப் படங்களுக்கும் தெலுங்குப் படங்களைப் போலவே இசையமைப்பதை எப்போது மாற்றிக் கொள்வார் என்று தெரியவில்லை. பாடல்கள் தாளம் போட வைத்தாலும், பின்னணை இசையில் விக்ரமிற்குப் பதில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை மனதில் வைத்துக் கொள்வார் போலிருக்கிறது.
ஹரி படத்தில் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இல்லாத குறை தெரிகிறது. இருப்பினும் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், ப்ரியன் அளவிற்கு பெயர் வாங்க உழைத்திருக்கிறார்.
‘சாமி’ முதல் பாகத்தில் காதல், குடும்பம், சென்டிமென்ட் ஆகியவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு இருந்தது. இந்தப் படத்தில் முதல் பாகம் அளவிற்கு அவை அழுத்தமாக இடம் பெறவில்லை. ஆனாலும், பரபரப்பான ஆக்ஷனில் அவற்றை மறக்கச் செய்து விடுகிறார் இயக்குனர் ஹரி.
சாமி 2 – ஒரு சாமி, 3 சிங்கம்