மர்மமும் பரபரபப்புமாக வந்துள்ள இப்படத்தை கிறிஸ் திருக்குமரன் இயக்கியுள்ளார். அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
பாண்டிச்சேரியை மையமாகக் கொண்டு கதை தொடங்குகிறது. சிறுவயது முதலே நட்பாக இருக்கும் காளி (அருண் விஜய்) மற்றும் மீனு (சித்தி இட்னானி), இளம் வயது வந்த போது வாழ்க்கையின் நடைமுறையால் பிரிகின்றனர். சில ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்குத் திரும்பும் காளி, ஹோட்டலில் வெயிட்டராகப் பணிபுரியும் மீனுவை மீண்டும் சந்திக்கிறார். ஆனால் வாழ்க்கை மீதான அவளது பார்வை பணத்தை மையமாகக் கொண்டதாகி விட்டது. திருமணம் பற்றி பேசும் காளியிடம், “அதற்கு கோடி கணக்கில் பணம் வேண்டும்” என்று மீனு சுலபமாகச் சொல்லிவிடுகிறாள்.
மனமுடைந்த காளி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஒரு விலையுயர்ந்த கார் மோதுகிறது. காரில் இருந்தவர் — காளி போலவே அச்சு அசலாக இருக்கும் உபேந்திரா (அருண் விஜய்). கோடீஸ்வரன் ஆன உபேந்திராவுடன் அறிமுகம் ஆகிறார் காளி., ஆனால், அதுவே காளியின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை கொண்டுவருகிறது. பண ஆசையில் மூழ்கிய மீனு, உபேந்திராவைக் கொல்வதற்காக காளியை தூண்டுகிறார். காளியும் அதில் சிக்கிக்கொள்கிறான்.
ஆனால் பின்னர் தெரியவரும் உண்மை — உபேந்திரா ஒரு பரோலில் வெளிவந்த கொலைகாரன் என்பதே கதையின் அதிரடி திசையைத் தீர்மானிக்கிறது. இதற்குப் பிறகு காளி கண்டுபிடிக்கும் உண்மை, கிளைமாக்ஸ் வரை பரபரப்பைத் தக்க வைத்திருக்கிறது.
காளி மற்றும் உபேந்திரா ஆகிய இரு மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் வெளிப்படுத்திய நடிப்பு நிச்சயமாக படத்தின் முதுகெலும்பு. ஒவ்வொரு ஆக்ஷன் சீனிலும் அவர் காட்டிய உடல் மொழியும் எனர்ஜியும் பாராட்டத்தக்கது. சித்தி இட்னானி, இதுவரை நடிக்காத ஒரு நெகட்டிவ் வேடத்தில் மெருகூட்டியுள்ளார். தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டவர்கள் தங்களது பங்கை நன்றாக நிறைவேற்றியுள்ளனர்.
சாம் சி.எஸ். இசையமைப்பில், பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்தை இரட்டிப்பாக உயர்த்துகிறது. டிஜோ டாமியின் கேமரா, ஒளியையும் உணர்ச்சியையும் திறம்பாக கட்டமைக்கிறது. படத்தின் மிகப் பெரும் பலமாக ஒளிப்பதிவுஅமைந்துள்ளது. குறிப்பாக லைட்டிங் சிறப்பான தரத்தில் உள்ளன.அந்தோணியின் தொகுப்பு வேகத்தையும் நெருக்கடியையும் சமநிலையில் வைத்திருக்கிறது.
வித்தியாசமான திரைக்கதை, சண்டை காட்சிகளின் அதிரடி, கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆகியவை “ரெட்ட தல” படத்திற்குச் சிறப்பை சேர்க்கின்றன. அருண் விஜயின் ஆற்றல் மிக்க இரட்டிப்பு நடிப்பு படத்தை முழுவதுமாகத் தாங்கி நிற்கிறது.