திருமணத்திற்குப் பின்னும் காதல் இருக்கிறது…என்பதை சொல்லியிருக்கும் படம்.
இளமையான நட்சத்திரங்கள், இளமை ததும்பும் கதை, கொஞ்சம் இனிமையான பாடல்கள் என இருந்தாலும் ‘சென்டிமென்ட்’ காட்சிகளில்தான் நம்மை அதிகம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் அட்லி.
அதிலும், நஸ்ரியா, ஆர்யாவிடம் ,“நான் இதுவரைக்கும் அம்மா மடில படுத்தது இல்ல, உன் மடில படுத்துக்கிட்டுமா,” என கண்ணீருடன் கேட்கும் போது உங்கள் கண்ணோரம் கண்ணீர் எட்டிப் பார்த்தால் நீங்கள் இளகிய மனம் கொண்டவர்தான்.
நஸ்ரியாவை அளவுக்கதிகமாகக் காதலிக்கும் ஆர்யா, ஜெய்யை அளவுக்கதிகமாகக் காதலிக்கும் நயன்தாரா. ஆனால், இந்த காதலர்கள் சேர முடியாமல் பிரிய நேரிடுகிறது. பின்னர், ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கிறது. இருந்தாலும் இவர்கள் கணவன் – மனைவியாக வாழாமல் ஒரே வீட்டிற்குள் மட்டுமே வசிக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் இருவர்களது காதல் பிளாஷ்பேக்கும் மற்றவருக்குத் தெரிய வருகிறது. ஆனால், இருவருமே பிரிய முடிவெடுக்கிறார்கள். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
‘ராகம்’ என்றாலே ‘சரிகமபதநி’ என்பதிலிருந்து மட்டுமே பிறக்கிறது. இந்த படத்தின் கதையும் ஏற்கெனவே பார்த்து பழகிய ‘ராகம்’ ஆகமாக இருந்தாலும் ‘மௌனமாக’ இல்லாமல் கொஞ்சம் ஆர்ப்பாட்டமாகவே ஒலிக்கிறது.
ஆர்யா – நயன்தாரா ஜோடி ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்திற்குப் பிறகு பாஸ் மார்க் மட்டும் வாங்கவில்லை, ‘டிஸ்டின்க்ஷனே’ வாங்கி விடுகிறார்கள். இருவருக்குள்ளும் ‘கெமிஸ்ட்ரி’ மட்டுமில்லை, ‘பிஸிக்ஸ், ஸுவாலஜி’ என அனைத்து அறிவியல் பாடங்களும் ஒர்க் அவுட் ஆகியுள்ளன.
ஒரு கட்டத்தில் நமக்கே ‘கொஞ்சம் தள்ளி நடிங்க பாஸ்’ என கத்தும் அளவிற்கு ‘ஜெய் – நயன்தாரா’ காட்சிகள் அமைந்துள்ளன. ஜெய்யை பார்த்தால் ‘மச்சம் பாஸ்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ஜெய் – நயன்தாரா காதலை விட ஆர்யா – நஸ்ரியா காதல்தான் மனதில் அதிக இடம் பிடிக்கிறது. அதிலும், ஆர்யாவைப் பார்த்து நஸ்ரியா ‘பிரதர்’ என சொல்லும் போதெல்லாம் ‘பேஜார்’ ஆகிறது.
யாருப்பா அந்த மேக்கப்மேன்…‘நயன்தாரா மீதும் நஸ்ரியா மீதும்’ அப்படி என்ன கோபம்…ஒரு காட்சியில் நயன்தாரா அழுதால் கண்ணீர் கருப்பாக வருகிறது. க்ளோஸ்அப் காட்சிகளில் நஸ்ரியாவிற்கு ஓவர் மேக்கப் போட்டு விட்டிருக்கிறார்.
நயன்தாராவின் அப்பாவாக சத்யராஜ். இப்படி ஒரு அப்பா எல்லா பெண்களுக்கும் இருந்தால் நடக்கும் திருமணம் எல்லாமே காதல் திருமணங்களாகத்தான் இருக்கும்.
ஆர்யாவின் நண்பனாக வழக்கம் போல் சந்தானம். அவ்வப்போது சிரிக்க வைத்தாலும், நயன்தாராவிடம் , ஆர்யாவின் காதலைப் பற்றி சொல்லும் போது கண்ணீர் விடவும் வைக்கிறார்.
ஜெய்யின் நண்பனாக சத்யன், சத்தியமாக சிரிக்க வைக்கவில்லை.
ஜிவி. பிரகாஷ்குமார் இசையில் ஒரு சில பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், வெளியில் வந்த பின் எந்த பாடல் எங்கு வந்தது என யோசிப்பதை தவிர்க்க முடியவில்லை.
ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு அவ்வளவு அழகு. ஆர்யா – நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார்.
ரூபன் படத்தொகுப்பில் இன்னும் கத்திரியை வைக்கலாம்…ஒரு 15 நிமிடம் குறைத்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.
‘ராஜா ராணி’ – ரம்மியம்…
மற்ற விவரங்கள்…
தயாரிப்பு – ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன் – ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், தி நெக்ஸ்ட் பிக் பிலிம்
எழுத்து , இயக்கம் – அட்லி
இசை – ஜி.வி. பிரகாஷ்குமார்
பாடல்கள் – பா.விஜய், நா.முத்துக்குமார், கானா பாலா
ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்
படத்தொகுப்பு – ரூபன்
கலை – டி.முத்துராஜ்
ஒலி வடிவம் – தபாஸ் நாயக்
நடனம் – எம். ஷெரிப்
சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா
நடிப்பு – ஆர்யா, ஜெய், சத்யராஜ், சந்தானம், சத்யன், நயன்தாரா, நஸ்ரியா, நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, சிங்கமுத்து மற்றும் பலர்.
வெளியான தேதி – 27 செப்டம்பர் 2013.