புதுமுகங்கள் தேவை – விமர்சனம்

puthumugangal thevai

தயாரிப்பு – வின்னர் புல்ஸ் பிலிம்ஸ்

இயக்கம் – மனீஷ் பாபு

இசை – ட்வின்ஸ் டியூன்ஸ்

பாடல்கள் – கிருதியா

கதை, திரைக்கதை – எஸ்.ஏ. அபிமான்

வசனம் – கவிதா பாரதி

ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ், ஆர். சரவணன்

படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்

கலை – மோகன மகேந்திரன்

நடனம் – தினா, பாப்பி, அஜய்ராஜ்

சண்டைப் பயிற்சி – ரன் ரவி

மக்கள் தொடர்பு – மௌனம் ரவி

நடிப்பு – சிவாஜி தேவ், ராஜேஷ் யாதவ், ஆதீஷ், பானு, விஷ்ணுப்ரியா, ராஜ் கபூர், காதல் தண்டபாணி, எம்.எஸ். பாஸ்கர், கிரேன் மனோகர், டெல்லி கணேஷ் மற்றும் பலர்.

வெளியான தேதி – டிசம்பர் 28, 2012.

2012ன் கடைசியில் பார்த்த ஒரு வித்தியாசமான திரைப்படம். பெரியநடிகர்கள் இல்லை, பிரம்மாண்டமான அரங்குகள் இல்லை, வெளிநாட்டு பாடல் காட்சிகள் இல்லை என இப்படி பல இல்லை இருந்தாலும், இந்த அளவுக்கு படத்தை ரசிக்க வைக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் இந்த ‘புதுமுகங்கள்’ கூட்டணி.

ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர் சிவாஜி தேவ். சென்னையில் வாய்ப்புத் தேடித் தேடி அலைந்து சோர்ந்து போய், நண்பன் ஆதீஷ் இருக்கும் ஊருக்கு ஒரு மாறுதலுக்காக வருகிறார்.

ஆதீஷ், அந்த ஊரில் உள்ள அவருடைய மாமாவின் சிறிய ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். அந்த ஹோட்டலில் அனைத்து வேலைகளுக்கும் சொந்தக்காரர் ராஜேஷ் யாதவ். சிவாஜி தேவின் ஆசையான திரைப்படம் இயக்கும் கனவை நிறைவேற்ற நினைக்கிறார். ராஜேஷ் யாதவ், சிவாஜி தேவ், ஆதீஷ் மூவரும் இணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்க நினைக்கிறார்கள். இவர்களது முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.

ஒரு கிராமத்துப் பின்னணியில் திரைப்படத்தை யதார்த்தமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மனீஷ் பாபு. எந்த இடத்திலும் சினிமாத்தனம் இல்லாத ஒன்றே படத்தை அதிகம் ரசிக்க வைக்கிறது.

திரைப்படம் இயக்கப் போராடும் இயக்குனர் கதாபாத்திரத்தில் சிவாஜி தேவ். ஒரு படத்தை இயக்க லட்சியமுள்ள ஒரு இளைஞன் எப்படியெல்லாம் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹோட்டலில் அனைத்து வேலைகளையும் பார்ப்பவராக ராஜேஷ் யாதவ். சிவாஜி தேவின் சினிமா ஆசையை நிறைவேற்ற பாடுபடும் ஒரு போராட்ட குணம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் எதையும் சாதித்து விட முடியும் என உணர்த்தும் அருமையான கதாபாத்திரம். தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் ரெடி.

சிவாஜி தேவின் காதலியாக விஷ்ணுப்ரியா. அதிகமான வேலையில்லை. இவர்களது காதலை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.

நடிகையாகவே பானு. சில காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பு.

எம்.எஸ். பாஸ்கர், கிரேன் மனோகர், நகைச்சுவைக்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

ட்வின்ஸ் டியூன்ஸ் இசையில் ‘கருவிழி சுற்றிப் பார்க்கும்….’, ‘என் உயிரின்…’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

ராஜேஷ் யாதவ், சரவணனின் ஒளிப்பதிவு நாகர்கோவில் சுற்றியுள்ள பகுதிகளின் ரம்மியத்தை கண் முன் நிறுத்தியுள்ளது.

படம் முடிஞ்சிடுச்சின்னு எழுந்தால்…கிளைமாக்சுக்குள்ள, கிளைமாக்சுக்குள்ள, கிளைமாக்ஸ்….யதார்த்தமான முயற்சி….“புதுமுகங்கள் தேவை”…

இந்த மாதிரி நல்ல முயற்சிக்கு “ரசிகர்கள் ஆதரவு தேவை….”

Read Previous

‘எவர் கிரீன் ஸ்டார்’ – தேவயானி

Read Next

4ம் தேதி 4 படங்கள்