பொறியாளன் – விமர்சனம்

Poriyalan - Gallery_00007 ஒரு முழு புத்தகம் புரிய வைப்பதை விட ஒரு இரண்டரை மணி நேர சினிமா பாமர மக்களுக்கும் சில விஷயங்களை எளிதில் புரிய வைத்து விடும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ‘பொறியாளன்’. இயக்குனர் தாணு குமார் முதல் படத்திலேயே சமுதாயத்திற்குத் தேவையான ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். ஏமாற்றுப்படுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். இன்றைய கால கட்டத்தில் நில மோசடி என்பது யாராலும் தீர்த்து வைக்க முடியாத ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதில் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தரக் குடும்பங்கள்தான். சிறுகச் சிறுக குருவி போல் சேர்த்து வைத்த பணத்தை வைத்துக் கொண்டு சென்னைக்கு மிக அருகில் என்று ஏமாற்றப்பட்டாலும் ஒரு கால் காணி நிலத்தை வாங்க மாட்டோமா என்று நம்பி வாங்கி ஏமாந்து போகிறவர்கள் அதிகம். அப்படிப்பட்ட ஒரு நில மோசடியை வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். ஆனாலும், இந்த நில மோசடியைத் தடுத்தேயாக வேண்டும் என்று ஆணித்தரமாக எதையும் சொல்லாமல் படமாக மட்டுமே முடித்திருப்பது நமக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஹரீஷ் கல்யாண் , சிவில் என்ஜினியரிங் படித்து முடித்து விட்டு, ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் என்ஜினியராக செய்த வேலையை விட்டு விட்டு நண்பர்களுடன் சேர்ந்து சொந்தமாக ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆரம்பிக்க முடிவு செய்கிறார். வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் அச்சுத குமாரிடமிம் வேலை செய்யும் ஹரீஷின் நண்பரான அஜய் ராஜ், அச்சுத குமார் ஒரு வழக்கில் சிறைக்குச் சென்றிருக்கும் சமயம் பார்த்து அவரின் பணத்தை எடுத்து ஹரீஷிடமி கொடுக்கிறார். நண்பர்கள் சேர்ந்து நிலத் தரகரான மோகன் ராமிடம் ஒரு நிலத்தை வாங்குகிறார்கள். அதன் பின் அங்கு பிளாட்டுகள் கட்ட அனுமதி வாங்கச் செல்லும் போது அந்த நிலம் மோகன் ராமிற்கு சொந்தமில்லாத ஒன்று என்று தெரிய வருகிறது. 2 கோடி ரூபாய் அளவிற்கு ஹரீஷும் நண்பர்களும் ஏமாந்து போகிறார்கள். இதனிடையே சிறையிலிருந்து பெயிலில் வரும் அச்சுத குமாருக்கு, அஜய் ராஜ் பணத்தை எடுத்த விவரம் தெரிய வர, ஹரீஷையும், அஜய் ராஜயும் பணத்தைக் கேட்டு மிரட்டுகிறார். இரண்டு நாளில் பணத்தைத் தரவில்லையென்றால் அவர்களது குடும்பத்தையே நாசம் செய்து விடுவதாகச் சொல்கிறார். ஹரீஷ், காணாமல் போன மோகன்ராமைக் கண்டு பிடித்தாரா, அச்சுத குமாருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தாரா என்பதுதான் படத்தின் மீதி கதை. ‘பொறியாளன்’ கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார் ஹரீஷ் கல்யாண். சாதாரண பொறியாளனாக இருந்து முதலாளி பொறியாளனாக மாற அவர் படும் துயரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. சாதிக்கத் துடிக்கும் வயதில் நம்மைச் சுற்றியுள்ள பல பெருச்சாளிகளுக்கு மத்தியில் வாழ்வது சாதாரண விஷயமல்ல என்பதை அவருடைய கதாபாத்திரம் நன்றாகப் புரிய வைக்கிறது. அதிரடி ஆக்ஷன் கதாநாயகனாக இவரது கதாபாத்திரத்தை இடைவேளைக்குப் பின் மாற்றி விடாமல், கடைசி வரை மிகவும் யதார்த்தமாகவே நகர்த்தியிருக்கிறார்கள். புதுமுகம் ஆனந்தி, உயரமான ஹரீஷ் கல்யாண் முன் ஜோடிப் பொருத்தமில்லாமல்தான் இருக்கிறார். இருந்தாலும் அவருடைய அந்த இரண்டு கண்கள் எண்ணற்ற எக்ஸ்பிரஷன்களை வெளிப்படுத்துகின்றன. மேக்கப் அதிகமில்லாமல் பக்கத்து வீட்டுப் பெண் போல் நடமாட விட்டிருக்கிறார்கள். ஹரீஷைக் காதலிப்பதுடன் இவருடைய வேலை முடிந்து போகிறது. அதிலும் இடைவேளைக்குப் பின் ஆளையோ காணோம். படத்தில் வழக்கமான வில்லனாக அச்சுத குமார், அடிக்கடி காணாமல் போய்விடும் மறைமுக வில்லனாக மோகன் ராமன். இரண்டு கதாபாத்திரங்களின் குணங்களைக் கொண்டவர்கள்  நம் ஊரிலேயே நிறைய பேர் கண்டிப்பாக இருப்பார்கள். ஹரீஷ் நண்பர்களாக அஜய் ராஜ், முரளி மற்றும் மயில்சாமி கதாபாத்திரங்கள் நட்புக்கு இலக்கணம். சில தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இசையமைப்பாளர் ஜோன்ஸ் வாசித்துத் தள்ளியிருக்கிறார், இம்மாதிரியான படங்களுக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை இசையைமப்பாளர் உணர வேண்டும். ஒளிப்பதிவிலும் தெளிவு இல்லை. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்த படமா என ஆச்சரியமளிக்கிறது. பொறியாளன் – நில மோசடியை புரிய வைப்பவன்…

Read Previous

அமர காவியம் – விமர்சனம்

Read Next

உதயநிதி, எமி ஜாக்சன் நடிக்கும் ‘கெத்து’….

Most Popular