சிறுவர்களை வைத்து படம் எடுத்தால் அந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற கருத்தை இந்த படம் உடைத்து விட்டது. தப்பித் தவறிக் கூடக் குடும்பத்துடன் இந்த படத்தை பார்த்து விடாதீர்கள். சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட ‘பசங்க’ போன்ற பிரமாதமான படம் வந்த ஊரில்தான் இப்படிப்பட்ட போக்கத்த படங்களும் வருகின்றது என்பதை நினைக்கும் போது கோபம்தான் வருகிறது. படத்தை இயக்கியது ஒரு பெண் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். சிறுவர்களை வைத்து எடுக்கும் படத்தில் எப்படி அவரால் ‘செக்ஸ்’ என்ற விஷயத்தை முன்னிலைப்படுத்தி காட்சிகளை அமைக்க முடிகிறது. உதாரணத்திற்கு ஒரே ஒரு காட்சி… வீட்டில் ஒரு சிறுவன் போர்வைக்குள் படுத்திருக்கிறார். திடீரென எழுந்து வெளியில் செல்கிறான். அவனுடைய அம்மா எங்கடா போற எனக் கேட்கிறார். இல்லம்மா பெட்லயே சிறுநீர் கழிச்சிட்டன் போல இருக்கு…துவைச்சிட்டு வருகிறேன் எனத் தெருக்குழாயடிக்கு சென்று போர்வையை துவைத்து விட்டு, அவனும் குளித்துவிட்டு வருகிறான். அவன் நடந்து வரும் போது பின்னணியில் ஒரு சிறுமியின் மஞ்சள் நீராட்டு விழா போஸ்டர் இருக்கிறது. வயதுக்கு வந்ததைக் குறிக்கும் ஒரு பாடல் வேறு ஒலிக்கிறது. எங்கேயோ போயிட்டீங்க இயக்குனர் அவர்களே… படத்தின் மையக்கருவே சிறுவர்களை மையமாக வைத்து எடுக்க முடியாத ஒன்று. ஒரு பெண்ணை நான்கு பேர் சேர்ந்து கற்பழிப்பதை படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களான மூன்று சிறுவர்கள் பார்த்து விடுகிறார்கள். அந்த பெண் மறுநாள் ஆற்றங்கரையில் இறந்து கிடக்கிறாள். ஊராரும், காவல்துறையும் அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கிறார் என முடிவெடுத்து விடுகிறது. ஆனால், சிறுவர்களுக்குத்தான் அந்த பெண் கொலை செய்துதான் இறந்து போயிருக்கிறாள் என்பது தெரிகிறது. புத்திசாலித்தனமான (?) அந்த சிறுவர்கள் கொலைகாரர்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதி கதை. ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குனர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் சிறந்த பெண் இயக்குனர்கள் உருவாவது கடினம் என்பதை இவரும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கௌரவ் காளை, பிரவீண் கிஷோர், வசந்த் ஆகிய மூன்று சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களில் கௌரவ் காளை மட்டும்தான் நடிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறான். மற்ற இருவரும் எங்கயாவது நடித்து விடுவார்கள் என நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. இடைவேளைக்குப் பின்தான் கதையின் போக்கு ஒரே திசையை நோக்கி நகர்கிறது. அதுவரை கட்டவிழ்த்து போன்று ஏதேதோ காட்சிகள் சம்பந்தா, சம்பந்தமில்லால் வந்து போகின்றன. பாடல்கள் என்று வைத்திருக்கிறார்கள் பாருங்கள், அவை அதற்கு மேலே. ஒன்று கூட உருப்படியாக இல்லை. வில்லன்களாக நடித்துள்ள காளி, சாய் ஹரி, சுந்தர், கார்த்திக் இவர்கள்தான் கொஞ்சமாக நடித்துள்ளார்கள். வர்ஷினி, அகல்யா என இரண்டு சிறுமிகளை வைத்து காதல் காட்சிகளை அமைத்ததெல்லாம் ரொம்பவே ஓவர். அந்த வயதில் வரும் ஈர்ப்பை நட்பாக அழகாக காட்டியிருக்கலாம். ‘அழகி’ படத்தை தயவு செய்து ஒரு 50 முறையாவது பாருங்கள் இயக்குனரே…எப்படி இயல்பா அந்த ஈர்ப்பை வெளிப்படுத்தலாம் என்று அதைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள். பூவரசம் பீப்பீ – சீச்சீ….