பதவி – விமர்சனம்

தயாரிப்பு – செவன்த் சென்ஸ் மூவீஸ் – லாரன்ஸ் பிரசாத் இயக்கம் – தேவா .கே இசை – மகேஷ் சங்கர் பாடல்கள் – பிறைசூடன், சினேகன், விவேகா, கல்யாண்ஜி, இந்திரஜித், முருகானந்தம் வசனம் – வி. பிரபாகர் ஒளிப்பதிவு – ஷாம்தத் படத்தொகுப்பு – பீட்டர் பாபியா நடனம் – நோபல், ஸ்வர்ணா

நடிப்பு – சர்வானந்த், சாய் குமார், சுந்தீப், ரூபி பரிகார், ராஷ்மி கௌதம், ஜீவா, கிஷோர், சுரேகா வாணி, பவித்ரா மற்றும் பலர்.

தவிக்காக ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் அரசியல் கதைதான் இந்த பதவி. அரசியல் என்றாலே பரபரப்பும், விறுவிறுப்பும் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டேயிருக்கும் விதத்தில் இருக்கும். இதை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

ஆரம்பம் முதல் கடைசி வரை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி அரசியல் வசனங்கள் நம்மை அதிகமாகவே ரசிக்க வைத்து விடுகிறது.

சர்வானந்த் சிறுவனாக இருக்கும் போதே அவரது அப்பா கொலை செய்யப்பட , அவருடைய அம்மாவை திருமணம் செய்து கொள்கிறார் சாய் குமார். சர்வானந்தின் அக்காவிற்கு இந்த திருமணம் சிறிதும் பிடிக்கவில்லை. ஆனால், சர்வானந்த் , சாய்குமாரை மானசீகமாக அப்பாவாக ஏற்றுக் கொள்கிறார்.

சர்வானந்தின் அம்மாவிற்கும், சாய்குமாருக்கும் ஒரு மகன் பிறக்கிறான். பல வருடங்கள் கழித்து சாய்குமார்  எம்.எல்.ஏவா இருக்கிறார். அவருக்கு பக்க பலமாக சர்வானந்த் இருக்கிறார். இவர்களிருவரும் அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

தனக்குப் பின் சர்வானந்த் தான் வாரிசாக வரவேண்டும் என நினைக்கிறார் சாய்குமார். ஆனால் சாய்குமாருக்குப் பிறந்த சந்தீப் , இதை மிகவும் எதிர்க்கிறார். அது மட்டுமல்ல போதை பழக்கத்திற்கு அடிமையாகிய இவர் சாய்குமாரின் நண்பரின் மகளை கற்பழித்து கொலையும் செய்து விடுகிறார்.

இதற்கு டாக்டர் சர்டிபிகேட் தரும் டாக்டரான தன் அக்காவையும், மாமாவையும் கொலை செய்து விடுகிறார். சாய்குமாரோ அவர் பெற்ற பிள்ளையான சந்தீப்பை இவற்றிலிருந்து காப்பாற்ற நினைக்கிறார். சர்வானந்தோ அக்காவையே கொலை செய்த சந்தீப்பை பழி வாங்க நினைக்கிறார்.

ஒரு கட்டத்தில் சாய்குமாரின் உண்மையான சுயரூபம் என்ன என்பது சர்வானந்திற்குத் தெரிய வர, அவர் அடிதடி அரசியலை விட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார், அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ்.

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் காதல் நாயகனாக வலம் வந்த சர்வானந்த், இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்திருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது, அதிரடி ஆக்ஷன் நடிப்பிலும் நன்றாகவே ரசிக்க வைக்கிறார். அவருடைய தோற்றமும், ஆவேசமான நடிப்பும் அவருடைய கதாபாத்திரத்திற்கு மேலும் ‘அரசியல் பவரை’ கூட்டுகிறது.

அப்பா கதாபாத்திரம்தான் என்றாலும் சாய்குமாரின் அரசியல் சாணக்கியத்தனம் ஆஹா என்று பேச வைக்கும். அவருடைய கணீர் குரலே அவருக்கு மிகப் பெரிய பிளஸ் பாயின்ட். போதாததற்கு சிவாஜியின் பாதி நடிப்பை எந்த கதாபாத்திரத்திலும் காட்டி விடுவார். வளர்ப்பு மகனை விட பெற்ற மகன் மீது அவர் காட்டத் துடிக்கும் பாசம் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மையை அழகாக புரியவைத்து விடுகிறது.

படத்தின் வில்லன் (?) என்று சொன்னால் சந்தீப் தான். இவர் வேறு யாரையோ எதிர்க்கவில்லை. அப்பாவையும், அண்ணனையும் எதிர்த்து அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என நினைக்கிறார். இந்தக் கால ‘கெட்ட’ இளைஞர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்பதை இவர் கதாபாத்திரம் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

நாயகி ரூபி பரிகாருக்கு அதிக வேலை இல்லை, அவ்வப்போது சர்வானந்துடன் வந்து டூயட் பாடி விட்டு போவது  மட்டுமே அவருடைய வேலை.

சாய்குமாரை எப்படியாவது வீழ்த்த நினைக்கும் ஒரு அரசியல் வியாபாரியான ஜீவா கடைசியில் சாய்குமாரை அவருடைய வலையில் சிக்க வைத்து விடுகிறார். மற்றொரு அரசியல்வாதியாக ஜெயப்பிரகாஷ் ரெட்டி , இளைஞர் அணித் தலைவராக இருந்து அரசியல் நகைச்சுவை செய்கிறார்.

சந்தீப் ஜோடியாக ராஷ்மி கௌதம், சர்வானந்த் அக்கவாக சுரேகா வாணி, அம்மாவாக பவித்ரா லோகேஷ், நண்பனாக வெண்ணிலா கிஷோர் நடித்திருக்கிறார்கள்.

பாடல்கள் படத்திற்கு வேகத் தடைதான், பிரபாகரின் அனல் தெறிக்கும் அரசியல் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் பாயின்ட். பல வசனங்களுக்கு தாராளமாக கை தட்டிப் பாராட்டலாம்.

2010ல் தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘பிரஸ்தனம்’ என்ற படத்தின் மொழி மாற்றம் இத்திரைப்படம். ஆனால், மொழி மாற்றுப் படம் என்று தெரியாத அளவிற்கு  மாற்றம் செய்திருக்கிறார்கள்.

பதவி – தாராளமாகப் பார்க்கலாம்.

பதவி – கேலரி

பதவி எனக்கு ரீ என்ட்ரி – சாய்குமார்  

 

Read Previous

என் பெயரை இழுக்க வேண்டாம் – மகிழ் திருமேனி

Read Next

வடிவேலு ஹீரோ – இயக்கம் கே.எஸ். ரவிகுமார்

Most Popular