ஒரு இயக்குனரின் படம் அடுத்தடுத்த வாரங்களில் வெளிவருவது தமிழ் சினிமாவில் எப்போதாவது நடக்கும் ஒன்று.
இந்த படத்தின் இயக்குனரான கௌசிக் இயக்கிய ‘ஆதியும் அந்தமும்’ படம் 14ம் தேதிதான் வெளியானது. அடுத்த வாரத்திலேயே இந்த ‘பனி விழும் நிலவு’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
இரண்டுமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட படங்கள் என்பது ஆறுதலான விஷயம். முதல் படத்தை த்ரில்லராகவும், இந்த படத்தை காதல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.
ஹிருதய், ஈடன் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படிப்பவர்கள். மிகவும் நட்புடன் பழகி வருகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்குள்ளும் இருக்கும் காதல் வெளிப்படுகிறது. அதன் பின் நெருங்கிப் பழகுகிறார்கள். ஆனால், இந்த காதலை நானாக சொல்லும் வரை ஹிருதய் இந்த காதலை யாரிடமும் சொல்லக் கூடாது என சொல்கிறார் ஈடன்.
ஒரு நாள் ஹிருதய்யை கெஸ்ட் அவுஸ் ஒன்றுக்கு வரச் சொல்லும் ஈடன், அவரை விளையாட்டாக அவமானப்படுத்தி விடுகிறார். இதை புரிந்து கொள்ளாமல் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறும் ஹிருதய் , நண்பர்களிடமும் சொல்லாமல் ஊரை விட்டே போகிறார்.
சில வருடங்களுக்குப் பின் நண்பன் ஒருவனின் திருமணத்திற்காகச் செல்கிறார். அங்கு நண்பர்கள், ஏற்கெனவே திட்டமிட்டபடி ஈடனையும் வரவைத்திருக்கிறார்கள். ஹிருதய், ஈடன் இருவரையும் சேர்த்து வைப்பதுதான் நண்பர்களின் திட்டம். அதன் பின் காதலர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.
‘பம்பாய்’ படத்தில் அரவிந்த்சாமி – மனிஷா கொய்ராலா மகனாக நடித்த ஹிருதய் இந்த படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். எப்போதும் வெறுப்புடனேயே இருக்கும் கதாபாத்திரத்திற்கு இவருடைய முகம் அப்படியே பொருந்திப் போகிறது. காதலி, ஈடன் மீதான வெறுப்பை சில காட்சிகளில் அதிகமாகவே காட்டுகிறார். கதாபாத்திரத்திற்காகத்தான் இயக்குனர் இவரைத் தேர்ந்தெடுத்திருப்பார் போல. அதை ஏமாற்றவில்லை ஹிருதய்.
கல்லூரி மாணவியாக கலகலப்பாக இருக்கிறார் ஈடன். அதிலும், ஹிருதய்யை காதலிக்க ஆரம்பித்த பின் அவருடைய கலாட்டாக்கள் அதிகமாகவே உள்ளது. அதனால், காதலனையும் பிரிய நேரிடுகிறது. பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதலனை சந்திக்கும் போது காட்டும் உருக்கமும் ரசிக்க வைத்துள்ளது.
கல்லூரி கதையாக இருந்தாலும், நகைச்சுவைக்கென்று பெரிதாக எதையும் யோசிக்கவில்லை. பேருந்து பயணத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, கதாபாத்திரத்தின் மூலம் கொஞ்சம் ஓவராகவே, வேறு விதமாக சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். அநியாயத்திற்கு டபுள் மீனிங் டயலாக் வேறு…
பாண்டியராஜன், கோவை சரளா காமெடி என்ற பெயரில் எதை எதையோ செய்கிறார்கள், ஆனால், சிரிப்புதான் வரவில்லை.
எல்.வி.கணேசன் ஹிட் பாடல்களைக் கொடுப்பதற்கு இன்னும் கொஞ்சம் மெனக் கெடலாம். இந்த மாதிரி கதைகளில் பாடல்கள் ஹிட்டாக அமைவது அவசியம்.
