யாசகன் – விமர்சனம்

yasagan review

அருமையான தலைப்பு, நல்ல கதைக் கரு, இவையிருந்தும் சரியாக சொல்லப்படாத கதைகளும், படங்களும் எவ்வளவோ உண்டு.

சமூகப் பார்வையுடன் திரைப்படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே. அதிலும் முதல் படத்திலேயே வெறும் காதல், கீதல் என வழக்கமான படங்களைத் தர முயற்சிக்காமல் கொஞ்சம் மாறுபட்ட சிந்தனையுடன் படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள் திரும்பிப் பார்க்கப்படுகிறார்கள்.

இந்த படத்தின் இயக்குனர் துரைவாணனும் அப்படியே.  இன்னும் பல விஷயங்களைத் தெளிவாக வைத்திருந்தால் இந்த படமும் பேசப்பட்டிருக்கும். பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை, ஏதோ ஒரு பள்ளிக் கூட பட்டமளிப்பு விழா போல காட்டியிருப்பதே இதற்கு உதாரணம்.

மகேஷ், படித்து விட்டு வேலையில் இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர். அப்பாவிடம் எப்போதுமே, எதற்கெடுத்தாலும் திட்டு வாங்கிக் கொண்டேயிருக்கிறார். அடுத்தவர்களுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் உடனே உதவும் குணம் கொண்டவர். இவருக்கும், அப்பாவின் நண்பரின் மகளான நிரஞ்சனாவுக்கும் காதல். ஒரு சந்தர்ப்பத்தில் நிரஞ்சனாவும் வேறு ஊருக்குச் சென்று விடுகிறார். இதனிடையே தன்னால் ஒரு சிறுமியைக் காப்பாற்ற முடியாமல் போவதை நினைக்கும் மகேஷ் மனநிலை பாதிக்கப்படுகிறார்.

பெற்றோர் மட்டும் மகன் மீது பாசத்தை வைக்க, அக்காவும், ஊராரும் மகேஷை வெறுத்து ஒதுக்குகின்றனர். ஊருக்குள்ளேயே அனாதை போல சுற்றி வருகிறார் மகேஷ். இவரின் நிலை நிரஞ்சனாவுக்குத் தெரிய வர மகேஷை எப்படியாவது குணப்படுத்த முயற்சிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.

‘அங்காடித் தெரு’ மகேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். எப்போதுமே ‘உர்’ என்றே முகத்தை வைத்திருக்கிறார். அப்பா அடிக்கடி திட்டித் திட்டியே அவரை அப்படி ஆக்கி விடுகிறார். காதலி நிரஞ்சனா, விழுந்து விழுந்து காதலித்தால் கூட ஒரே எக்ஸ்பிரஷனைத்தான் தருகிறார். மனநிலை பாதிக்கப்பட்ட பின் அந்த நடிப்பில் அதிகமாகவே ஈடுபாடு காட்டியுள்ளார்.

நிரஞ்சனா, சராசரியான பக்கத்து வீட்டுப் பெண் முகம். இந்த கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக இருக்கிறார். மகேஷை துரத்தித் துரத்திக் காதலிப்பதே இவரது வேலை. அதை சரியாகச் செய்திருக்கிறார்.

மகேஷின் அக்காவாக வரும் ஜானவியின்  கதாபாத்திரமும், அதில் அவரது நடிப்பும் இயல்பாக அமைந்துள்ளது. நாயகன், நாயகியின் பெற்றோர்களாக வருபவர்கள் சினிமாத்தனமில்லாத முகத்துடன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இடைவேளைக்கு முன் அங்கங்கே ‘எம் மகன்’ தென்பட்டாலும், இடைவேளைக்குப் பின் எதையோ அழுத்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அதிரடியான காட்சிகள் எதுவும் இல்லாமல் அவை எடுபடாமல் போய் விட்டன.

சதீஷ் சக்கரவர்த்தி பின்னணி இசையில் தெரிகிறார், பாடல்களில் காணவில்லை.

இன்னும் கொஞ்சம் அழுத்தமாக உழைத்திருக்கலாம்.

Read Previous

பனி விழும் நிலவு – விமர்சனம்

Read Next

நல்ல படத்தை ‘வேற மாதிரி’ படம் ஆக்குவதா ? இயக்குனர் அதிர்ச்சி…

Most Popular