வித்தியாசமான கதைக் களங்களில் பயணிக்கும் படங்கள் நம்மை வெகுவாகக் கவர்வதுண்டு. அதிலும், வழக்கமான மசாலா, காதல் என அரைத்த மாவையே அரைக்காமல் ஏதாவது புதிதாக சொல்லும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெறுவதுண்டு.
இந்த படமும் ஒரு வித்தியாசமான கதைக் களத்தில், அதாவது ரயில் பயணம் ஒன்றில் பயணிக்கும் கதை. அதை எந்த அளவிற்கு சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் முக்கிய விஷயம். ‘விரட்டு’ என தலைப்பை வைத்து விட்டு விரட்டாமல் ‘மஞ்சள்’ சிக்னலில் பயணிப்பது போன்ற திரைக்கதைதான் படத்திற்கு அவ்வப்போது ‘சிவப்பு’ சிக்னலைக் காட்டி விடுகிறது.
தாய்லாந்து நாட்டில் இருக்கும், சுஜிவ், எரிக்கா பெர்ணான்டஸ் இருவரும் சின்னச் சின்னத் திருட்டுக்களைச் செய்யும் திருட்டு நண்பர்கள். ஆனால், திடீரென எரிக்கா திருடுவதை விட்டு விட்டு ரெஸ்டாரென்ட் வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என சுஜிவ்விடம் சண்டை போட்டு விட்டு சென்று விடுகிறார்.
அப்போது, எதிர்பாராமல் நண்பனாகும் சுமந்த் ஷெட்டி, அதுவரை சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு இந்தியாவிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அவருக்குத் துணையாக இருக்க எரிக்கா முடிவெடுக்கிறார். அப்போது சுஜிவ்வும் வந்து சேர்ந்து கொள்கிறார். சுஜிவ், சுமந்த் ஷெட்டியிடம் இருக்கும் பணத்தை திருடு வேண்டும் என நினைக்கிறார்.
அதே சமயம், அந்த பணத்திற்காக அமித், பிரக்யா ஜெய்ஸ்வால் அடங்கிய மற்றொரு திருட்டு குழுவும் முயல்கிறது. அனைவருமே ஒரே ரயிலில் பயணம் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் சுஜிவ் மனம் திருந்தி, சுமந்த் ஷெட்டிக்கு உதவி செய்ய முடிவெடுக்கிறார். அவரும், எரிக்காவும் சேர்ந்து அமித் கும்பலிடம் இருந்து சுமந்த் பணத்தை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.
சுஜிவ், இளமையான துடிப்பான திருடனாக வலம் வருகிறார். யாரிடமிருந்து எப்படி பணத்தை அடிக்கிறார் என்பதே லாவகமாக படமாக்கப்பட்டிருக்கிறது. அவருக்கும் எரிக்காவுக்கும் இடையே இருக்கும் நட்பும், வெளியில் சொல்லாத காதலும் அருமையாக வெளிப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகளில் விரட்டி, விரட்டி அடிக்கிறார்.
எரிக்கா பெர்ணான்டஸ் ரயில் கொஞ்சம் வேகமாகப் போனாலே பறந்து போய் விடுவார் போலிருக்கிறது. அவ்வளவு ஒல்லியாக இருக்கிறார். நட்பு, காதல் இரண்டுக்குமிடையே பயணிக்கும் கதாபாத்திரம் இவருக்கு. கிடைத்த வாய்ப்பில் நடிப்பில் பயணிக்கிறார்.
கிளாமரான உடையிலும், அசத்தலான காதலிலும் அதிகப்படியாகவே ஈர்க்கிறார் பிரக்யா ஜெய்ஸ்வால். சுஜிவ்வை வளைத்துப் போட முயற்சிக்கும் இடங்களில் அவர் காட்டும் வேகம் ‘புல்லட்’ ரயில் போல் வேகம் எடுக்கிறது. கொஞ்சம் முயற்சி பண்ணினால் தமிழ் சினிமா இவரை விரட்டிப் பிடிக்கும்.
அப்பாவி இளைஞனாக சுமந்த் ஷெட்டி, இவரின் பணத்தை அடிக்க முயலும் ‘சிறுத்தை’ அமித் கதைக்கு முக்கியமான கதாபாத்திரங்கள்.
தரண் குமார் இசையில் பின்னணி இசை கவர்ந்துள்ளது. பாடல்களில் இன்னும் உழைத்திருக்கலாம். படம் முடிந்த பின் வரும் ஆன்ட்ரியா பாடும் பாடலை இடையில் எங்காவது பயன்படுத்தியிருக்கலாம்.
ஒரே ரயிலில் கதை நகர்ந்து சென்றாலும் சுவாரசியமாக உள்ளது, இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் வேகத்தை கூட்டியிருந்தால் விறுவிறுப்பான படமாக அமைந்திருக்கும்.
விரட்டு – ஓட்டம் குறைவு…
