கேரள நாட்டிளம் பெண்களுடனே – விமர்சனம்

kerala nattilam pengaludaney review

தண்ணீர்ப் பிரச்சனையில் கேரளா மீது நமக்கு அதிகப்படியான கோபம் இருந்தாலும், கேரளப் பெண்கள் மீது நம் அனைவருக்கும் ஆர்வம் அதிகம்தான்.

இல்லையென்றால் பத்மினி முதல் பார்வதி வரை கேரள ஹீரோயின்களைத்தானே அதிகம் ரசித்து வருகிறோம்.

அதையே ஒரு படமாக எடுத்தால் என்ன ? என இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் யோசித்திருப்பார் போல…போஸ்டர்ல இருக்கிற போட்டோவ எக்குத் தப்பா போட்டிருந்தால் படத்தோட டைட்டிலுக்கேத்த மாதிரி வேற மாதிரியான படமான்னு யோசிக்க வச்சிருக்கும். நல்ல வேளை, அழகான ஒரு காதல் கதையை கொடுக்க இயக்குனர் முயற்சி பண்ணியிருக்காரு.

ஞான.சம்பந்தன் – ரேணுகா தம்பதியினருக்கு ஒரே மகன் அபி. சம்பந்தன் அவர் இளைஞரா இருக்கும் போது ஒரு கேரளப் பெண்ணை காதலிச்சி , காதல்ல தோல்வியடைஞ்சவரு. இருந்தாலும், அந்த கேரள ஞாபகம் அவரை விட்டுப் போகாம இருக்கு. மனைவி ரேணுகாவுக்கும் அவர் காதலைப் பத்தி தெரியும். வீட்டுலயே மலையாளம் பேசிக்கிட்டு, பொங்கலைக் கொண்டாடாம, ஓணம் பண்டிகையை கொண்டாடற அளவுக்கு சம்பந்தன் கிட்ட கேரள மோகம்.

தன்னால ஒரு கேரளப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாததால, மகன் அபியை சின்ன வயசுல இருந்தே ஒரு கேரளப் பெண்ணைதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி வளர்க்கிறாரு. ஒரு கட்டத்துல அபியை கேரளப் பெண்ணை காதலிக்கிறதுக்காகவே, கேரளாவுக்கு ‘பேக்’ பண்ணி அனுப்பறாரு. அப்பா ஆசையை மகன் நிறைவேத்தினாரா இல்லையான்கறதுதான் படத்தோட மீதி கதை.

அறிமுக நாயகன் அபி, கொஞ்சம் அப்பாவித்தனமான முகம். ஆனால், காதலிக்கிறதுல மட்டும் அசகாய சூரர். கேரளாவுக்குப் போனதுமே அவரோட காதல் வேலையை கனகச்சிதமா செய்யறாரு. காயத்ரியைப் பார்த்ததுமே அவரைக் காதலிக்கிறாரு. எப்படியாவது அவரோட சம்மதத்தை வாங்கணும்னு துடிக்கிறாரு. ஆனால், இரண்டு பேருக்குமிடையே இருக்கிற காதல் ‘கதகளி’ ஆடுவது சுவாரசியம்தான். ஆனால், அபி முகத்துல ‘ரொமான்ஸ்’ ரொம்ப எட்டிப் பார்க்க மாட்டேங்குது.

காயத்ரிதான் படத்தின் ஹீரோயின். மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் ஹீரோ இவரைத்தான் அதிகம் சுற்றி வருகிறார். இவருக்குத்தான் படத்தில் காட்சிகள் அதிகம் இருக்கின்றன. இவரின் அந்த இரண்டு கண்கள், அழகாகப் பேசுகின்றன. பேசி நடிப்பதை விட, பேசாமல் கண்களாலேயே காதல் செய்கிறார். முயற்சித்தால் முன்னணிக்கு வரலாம்.

மற்றும் பலர் ரகத்தில்தான் மற்ற இரண்டு ஹீரோயின்களான அபிராமி, தீக்ஷிதா வருகின்றனர்.

ஞான.சம்பந்தன் அரை குறை மலையாளத்தைப் பேசி அடிக்கடி ‘கடி’க்கிறார், அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். ஹீரோவின் நண்பனாக காளி, அம்மாவாக ரேணுகா, அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு.

ஹீரோவுக்கு ஹிந்தி தெரியாது என்பதற்காக ஹீரோயின் காயத்ரியின் தங்கை ஹீரோவைப் பார்த்து, “உங்க ஊர்ல இதான் பிரச்சனை, நேஷனல்  லாங்வேஜான ஹிந்தியே தெரியலை” எனச் சொல்லும் வசனத்தை வைத்ததற்காக வசனகர்த்தா, இயக்குனர் வீட்டின் முன் போராட்டமே நடத்தலாம்.

குஜராத் உயர் நீதிமன்றம்  2010ம் ஆண்டு, 22 மொழிகளை இந்தியாவின் அலுவல் மொழியாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது. ஹிந்தி ஒரு அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என கூறியுள்ளது.

கொஞ்சம் வரலாறைப் படியுங்க இயக்குனர் ஸார்.

எஸ்.எஸ். குமரன் இசையமைப்பில் ‘ஹலோ யாரது…’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. கேரளாவின் அழகை இன்னும் அதிகமாக ஒளிப்பதிவாளர் யுவா காட்டியிருக்கலாம். வீதி, வீடு என்றே காமிரா பயணிக்கிறது.

கிளைமாக்ஸ் ட்விஸ்ட் சிறிதும் எதிர்பாராதது. அருமையான கதையில் , இன்னும் கலகலப்பாக புகுந்து விளையாடியிருக்கலாம்.

கேரள நாட்டிளம் பெண்களுடனே –  நம்மை ஏமாற்றுவதே கேரளாவின் வேலை….

Read Previous

‘சைவம்’ படத்திற்காக மாறிய நாசர்…

Read Next

விரட்டு – விமர்சனம்

Most Popular