மணிரத்னம், மணிரத்னம்தான்…கலைப் படைப்பிற்கு வயது தேவையில்லை என நிரூபித்திக்கிறார். 80களில் திரையில் ஒரு இளமைப் புயலை வீச ஆரம்பித்தவர் இந்த 2015லும் எப்படி வீச வைக்கிறார் என்ற ஆச்சரியம் மேலோங்கி நிற்கிறது. எங்கிருந்துதான் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை, காட்சிகளை கற்பனை செய்து படமாக்குகிறாரோ என அதிசயப்பட வைக்கிறார். ‘கலாச்சார அதிர்ச்சி’ என்று வைரமுத்து சொன்னாலும் முடிவில் ‘முதிர்ச்சி’யுடன் படம் முடிவது மணிரத்னத்தின் தனி முத்திரை. கல்யாணம், திருமண வாழ்க்கை, அதற்குப் பின் உள்ள குடும்ப வாழ்க்கை மீது வெறுப்பு கொண்ட துல்கர் சல்மான், நித்யா மேனன் யதேச்சையாக சந்தித்துப் பழக ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்படும் பழக்கம், இருவரையும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ வைக்கிறது. அதுதான் வாழ்க்கை என ‘லிவிங் டு கெதர்’ ஆக இருப்பவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் எப்படி, எதனால் நிகழ்கிறது என்பதுதான் படத்தின் கதை. துல்கர் சல்மானுக்கு தமிழில் இதுதான் முதல் படமாக இருந்திருக்க வேண்டும். தமிழில் அறிமுகமான முதல் படத்தை வாயைத் திறந்து பேசி நடிக்காமல் விட்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பதற்கே தனிப் பயிற்சி வேண்டும். மணிரத்னம் அவருக்குள் அந்த இளமைப் புயலை எப்படி புகுத்தினார் என்று அவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாத இந்தக் கால இளைஞர்களின் குணாதிசயத்தை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் துல்கர். தமிழ்த் திரையுலகத்தில் இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு இவர்தான் ‘அரவிந்த்சாமி, மாதவன்’ எல்லாம். நித்யா மேனன், இன்றிலிருந்து எத்தனை பேரின் நித்திரையை கலைக்கப் போகிறாரோ. காதலுக்கும், வாழ்க்கைக்கும் நடுவில் ஒரு பெண் எப்படி தவிப்பாள் என்பதை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். நித்யா மேனனின் கதாபாத்திரத்தை மிக கவனமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். படம் முழுவதும் நித்யா மேனனின் சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கிறது. என்னம்மா காதலனை இப்படி கொஞ்சுறீங்களேம்மா…என பல காதலர்களை பொறாமைப்பட வைப்பார். கொஞ்சம் ரேவதி, கொஞ்சம் ஷாலினி…மணிரத்னம் படங்களின் டிரேட் மார்க் நாயகி. பிரகாஷ்ராஜிடம் இப்படி ஒரு அலட்டிக் கொள்ளாத, யதார்த்த நடிகன் இன்னொரு பக்கம் இருக்கிறார் என்பது ஆச்சரியம்தான். பிரகாஷ்ராஜின் மனைவியாக லீலா சாம்ஸன். படத்தில் எந்த ஒரு காட்சியிலும் அவர்கள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. படத்திற்கு இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ‘ஸ்டிராங் பில்லர்கள்’. மும்பைப் மாநகரமும், தெருக்களும், பிரகாஷ்ராஜின் அந்த வீடும் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் கதையை மிஞ்சாமல் தனி அழகுடன் மிளிர்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் மீண்டும் ஒரு இசைப் புயல். தேவையான இடங்களில் தேவையான நிமிடங்களில் தேவையான அளவில் பாடல்கள் வந்து கட்டிப் போட்டு விடுகிறது. வைரமுத்துவின் கவிதைத் தமிழுக்கு மீண்டும் ஒரு வணக்கம்.