தயாரிப்பு – ஆர்.எஸ்.இன்ஃபொடெயின்மென்ட் – ஃபோட்டோன் கதாஸ்
இயக்கம் – கௌதம் வாசுதேவ் மேனன் இசை – இளையராஜா பாடல்கள் – நா. முத்துக்குமார் ஒளிப்பதிவு – எம்.எஸ்.பிரபு , ஓம் பிரகாஷ் படத்தொகுப்பு – ஆண்டனி மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா நடிப்பு – ஜீவா, சமந்தா, சந்தானம், மற்றும் பலர். வெளியான தேதி – 14 டிசம்பர் 2012 கதை
வருண், நித்யா இருவரது காதல் வாழ்ககைப் பயணம்தான் இந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’. சிறு வயதிலேயே ஆரம்பமாகும் ( ! ) இவர்களது காதல் வாழ்க்கை கல்யாண வயது வரும் போது ஒன்று சேர்கிறதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
ஜீவா (வருண்) கல்லூரியில் படித்து வருபவர். கல்லூரியில் நடக்கும் கல்ச்சுரல் விழா ஒன்றில் திடீரென அவரது சிறு வயது தோழி (?) சமந்தாவை (நித்யா) சந்திக்கிறார். இந்த சந்திப்பு கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து இருவரையும் காதலிக்க வைத்து விடுகிறது. ஜீவா இல்லையென்றால் தான் இல்லை என்ற அளவிற்கு காதலை வளர்த்துக் கொள்கிறார் சமந்தா.
ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் குடும்ப சூழல் காரணமாக மேற் கொண்டு ‘எம்.பி.ஏ.’ படிக்க முடிவெடுக்கிறார் ஜீவா. இதனால் காதலர்கள் இருவரும் பிரிகிறார்கள். அதன் பின் 3 வருடங்கள் கழித்து, ஜீவா , சமந்தாவைப் பார்க்கத் துடித்து அவர் இருக்கும் இடம் தேடிச் செல்கிறார். இருந்தாலும் சமந்தா, ஜீவாவை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். வேறு வழியில்லாமல் ஜீவா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். இதன் பின் காதலர்கள் இணைந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
இயக்கம்
காதல் படங்களில் தனி முத்திரை பதிக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் கௌதம். அவருடைய ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ காதலே இன்னும் பலரது மனங்களில் நிழலாடிக் கொண்டிருக்கையில் இதோ மீண்டும் ஒரு காதல் படம். ஆனால் இந்த படத்தில் காதலின் அழுத்தத்தை ரசிகர்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு கொடுத்திருக்கிறாரா என்பதுதான் கேள்வி.
ஜீவா, சமந்தா இருவரும் கல்லூரி காலத்தில் பிரிவதற்கு அழுத்தமான காரணத்தை பதிவு செய்திருக்கலாம். சிறு வயதிலோ, பள்ளிப் பருவத்திலோ பிரிவது, புரியாத வயதில் என்றாலும், முடிவெடுக்கக் கூடிய புரிந்த வயதில் காதலர்கள் பிரிவதற்கு, வைத்திருக்கும் காரணம் அழுத்தமாக இல்லை. குடும்ப சூழலை ஜீவா சமந்தாவிடம், வெளிப்படையாக சொல்லியிருக்கலாமே ?
கொஞ்சம் நீ…ளமான காட்சிகள், ஜீவாவும், சமந்தாவும் பேசிக் கொண்டேயிருப்பது கொஞ்சம் அலுப்பூட்டுகிறது…சில பாடல்களை கதைக்காக பயன்படுத்தி ‘வெட்டி ..வெட்டி.. ’ பயன்படுத்தியிருப்பது அழகாக இல்லை.
ஆனாலும், கடைசி அரை மணி நேர காட்சிகள் ‘காதல்’ பிடித்தவர்களுக்கு அதிகம் பிடிக்கும்.
நடிப்பு நாயகன்
காதல் நாயகனாக ஜீவாவை தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம். அவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால் பள்ளிப் பருவம் முதல் வேலைக்குப் போகும் வரை மீசை கூட இல்லாமல் ஒரே மாதிரி தோற்றத்தில் காட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம். (சந்தானத்துக்கு மீசையாவது வைத்திருக்கிறார்கள்.)
மற்றபடி காட்சிக்கு காட்சி காதல் நடிப்பில் கலக்கியிருக்கிறார் ஜீவா. சமந்தாவுடன் பல நெருக்கமான காட்சிகள். தியேட்டரில் ‘கொடுத்து வச்சவன்டா நீ’ என ரசிகர்கள் பொறாமைப்படுகிறார்கள்.
நாயகி
தமிழில் முதன் முறையாக ஒரு முழுமையான கதாபாத்திரத்தில் சமந்தா. இனி எத்தனை பேர் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறாரோ தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் ‘சமந்தா, நீ சமர்த்துமா’ என சொல்ல வைக்கிறார்.
இயக்குனர் கௌதம் நாயகியர் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் அதிகமாகவே மெனக் கெடுகிறார் போலும். உடை, நடை, ஸ்டைல் என ‘நித்யா’ கதாபாத்திரம் என்றென்றும் நினைவில் நிற்கும்.
மற்ற நடிகர்கள்
வழக்கம் போல் ஹீரோவின் நண்பனாக சந்தானம். ‘கால்ஷீட் ரொம்ப டைட்டு மச்சான், ஃபுல்லா நான் வருவனான்னு தெரியலை’ என அவரையே சொல்ல வைத்து விட்டு…கிளைமாக்ஸ் முன் காணாமல் போய்விடுகிறார் சந்தானம். ஆனாலும் அவர் வரும் காட்சிகள் அனைத்துமே ‘கை தட்டல்கள்’ இல்லாமல் இல்லை.
அப்பா, அம்மா, கதாபாத்திரங்களில் ஜீவாவின் அப்பா ரவி ராகவேந்தர் மட்டுமே ஓரிரு வசனங்கள் பேசுகிறார்.
வருண், நித்யா காதல் கதையில் மற்றவர்கள் பேச்சை குறைத்து விட்டார் இயக்குனர்.
இசை
இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே இனிமை. அருமை. குறிப்பாக, ‘சாய்ந்து..சாய்ந்து… ’, ‘என்னோடு…வா வா..’, ‘காற்றை கொஞ்சம்…’, ‘வானம் மெல்ல…’ பாடல்கள்…சில பாடல்களை துண்டு துண்டாக பயன்படுத்தி விட்டார் இயக்குனர்..ஏன் ஸார்…?
எம்.எஸ். பிரபு, ஓம் பிரகாஷ் இருவரது ஒளிப்பதிவு என்பதால் யார் எந்த காட்சிகளை படமாக்கினார்கள் என்பது தெரியாததால் மொத்தமாக பாராட்டு…
இடைவேளைக்கு முன்பாக ஜீவா, சமந்தா மொட்டை மாடியில் நின்று பேசும் முக்கியமான காட்சியில் காமிரா ‘கிரேன்’ கொண்டு மட்டுமே நீ…ளமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் க்ளோஸ் அப் காட்சிகள் கூட இல்லை…விறு விறு எடிட்டர் ஆண்டனி கூடவா இதை கவனிக்கவில்லை..
S 4 S Verdict
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தை மனதில் வைத்துக் கொண்டு படம் பார்க்கச் செல்ல வேண்டாம். இது வேறு கதை, வேறு தளம்..வேறு பயணம்…
இளையராஜாவின் இனிய இசையும், கௌதம் மேனனின் ‘காதல் இயக்கமும் ’, ஜீவா – சமந்தாவின் ‘காதல் ’ காட்சிகளும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
