நீ எங்கே என் அன்பே – விமர்சனம்

  nee engae en anbae review ஹிந்தியில் வித்யா பாலன் நடித்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘கஹானி’ திரைப்படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள். ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் கிளாமராக நடித்து இந்தியத் திரையுலகையே ஆச்சரியப்படுத்தியவர், அதற்கடுத்து ‘கஹானி’ படத்தில் முந்தைய படத்திற்கு நேர் எதிரான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றார். நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘நீ எங்கே என் அன்பே’ படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில், தமிழ் சினிமாவில் மீடியாக்கள் மூலம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே நடிகையான நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று யார் சொன்னார்களோ…..? ஆனாலும், முழு படத்தையும் நயன்தாரா நன்றாகவே தாங்கிப் பிடித்திருக்கிறார். தமிழில் ‘உன்னைப் போல் ஒருவன்’ , ‘துப்பாக்கி’ போன்ற படங்களில் பார்த்த தீவிரவாதம்தான் இந்த படத்தின் முக்கியக் கரு. இந்த படத்தில் ஒரு பெண்ணை அதுவும் திருமணமான ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தி படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ‘கஹானி’ படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரம் கர்ப்பிணிப் பெண் கதாபாத்திரம். அப்படிப்பட்ட ஒரு பெண் காணாமல் போன கணவனை தேடிக் கண்டுபிடிக்க முயல்வது தமிழ் ரீமேக்கில் இல்லை. நயன்தாராவின் கதாபாத்திரம் கர்ப்பிணிப் பெண் இல்லை என்பது அவர் மீதான அனுதாபத்தை வெளிப்படுத்தாமல் போகிறது. அப்படியே ‘காப்பி’ அடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பார்களோ…அல்லது தமிழ்த் தொலைக்காட்சிகளில் இதற்கு மேல் சென்ட்டிமென்ட் மழையை நம் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள் என்பது காணரமோ தெரியவில்லை… ஆனாலும், கொஞ்சம் கொஞ்சமாக ‘அனாமிகா’ கதாபாத்திரத்திற்குள் நம்மை  அழைத்துக் கொள்கிறார் நயன்தாரா. அதிலும், கிளைமாக்ஸ் காட்சி ட்விஸ்ட் சிறிதும் எதிர்பாராதது. அட…என ஆச்சரியப்பட வைக்கிறது. இருந்தாலும் சில காட்சிகளில் நயன்தாராவின் தோற்றம் முதிர் கன்னியாகத் தெரிவது ஏனோ…அதுவும் வைபவ் கூட போகும் போதெல்லாம் நயன்தாராவின் ‘மெச்சூர்ட்’ தோற்றம் பளிச்செனத் தெரிகிறது. விஜயசாந்தி நடித்த ஆக்ஷன் படங்களில் வரும் ஹீரோ போல் வருகிறார் வைபவ். இவருக்கு நயன்தாரா மீது ஒரு ஈர்ப்பு என்பதெல்லாம் வயசுக் கோறாகவே தெரிகிறதே தவிர, காதல் ஈர்ப்பெல்லாம் இல்லை என்றே தோன்றுகிறது. அடுத்தவர் மனைவி மீது, சப்-இன்ஸ்பெக்டரான வைபவ் காதலிப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்…நல்ல நட்புடனேயே இவர்களது கதாபாத்திரங்களை காட்டியிருக்கலாம். போலீஸ் அதிகாரியாக பசுபதி, அவரது உருட்டலும், மிரட்டலும் மிக மிக யதார்த்தம். கடமைக்காக துடிக்கும் அவரை அமைச்சர் அடங்க வைப்பதெல்லாம் யதார்த்தத்தின் உச்சகட்டம். இருந்தாலும் கடைசியில் கடமையில் வென்று முடிக்கிறார். மற்ற சின்னச் சின்னக் கேரக்டர்கள் கூட மனதில் நிற்கிறது. லாட்ஜ் மேனர், லாட்ஜ் சிறுவன், இமாம் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பொருத்தமான தேர்வு. மரகதமணியின் இசையில் அவ்வப் போது சின்னச் சின்னப் பாடல்கள் வந்து போகின்றன. கதையை மீறி இசையும், பாடல்களும் வராமல் படத்துடனேயே பயணிக்கிறது. கதை நடக்கும் ஹைதராபாத் பின்னணி, நமக்கு அந்நியமாகவே தெரிகிறது. நயன்தாரா தங்கியிருக்கும் அந்த லாட்ஜ், போலீஸ் ஸ்டேஷன், கடைத் தெரு எல்லாமே பக்கத்து பக்கத்து ‘செட்’டுக்குள் படமாக்கப்பட்ட உணர்வையே ஏற்படுத்துகிறது. சில காட்சிகள் மறைமுகமாக மத உணர்வைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. இருக்கிற பிரச்சனை போதாதா சினிமாவில் வேறா….? நாயகியருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இது போன்ற தமிழ்த் திரைப்படங்கள் தமிழில் அதிகம் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். இப்படத்தை இயக்கிய சேகர் கம்முலா இனி ரீமேக் படங்களையே இயக்க மாட்டேன் என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. அவருக்கே படத்தின் மீது நம்பிக்கையில்லையோ….என யோசிக்க வைக்கிறது. நீ எங்கே என் அன்பே – நிதானம்…  

Read Previous

100வது நாளில் ‘கோலி சோடா’…

Read Next

ரஜினியும் ‘ட்விட்டர்’-க்குள் வந்தார்….

Most Popular