நவீன சரஸ்வதி சபதம் – விமர்சனம்

‘சரஸ்வதி சபதம்’ என்ற அருமையான காவியத்தை சிறு வயதிலிருந்தே பார்த்துப் பழகியவர்கள் நாம். அப்படிப்பட்ட ஒரு அருமையான காவியத்தின் பெயரில் ‘நவீன’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து அந்த படத்தின் பெயரை இந்த அளவிற்கு கேலப்படுத்தியிருக்கக் கூடாது. நல்ல விஷயத்தைத்தான் சொல்ல வருகிறோம் என்று சொல்லி விட்டு, அதை ஒரு நல்ல விஷயத்தைச் சொல்வதற்கு பல மோசமான விஷயங்களைச் சேர்த்திருக்க வேண்டாம். ஒரு திரைப்படம் இயக்க வாய்ப்பு கிடைப்பதற்கு கோடம்பாக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளமையைக் கடந்தவர்கள் என பலரும் கனவுகளோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் சறுக்குபவர்கள் பல பேர். அந்த வரிசையில் இந்த படத்தின் இயக்குனர் சந்துருவும் சேர்ந்திருக்கிறார். ஜெய், சத்யன், விடிவி கணேஷ், ராஜ்குமார் நான்கு பேரும் நண்பர்கள்.  ஜெய்க்கு நிவேதா தாமஸ்ஸுடன் திருமணம் நிச்சயமாகிறது. நண்பர்கள் ஜெய்யை ‘ட்ரீட்’ கேட்க நால்வரும் பாங்காக் பயணமாகிறார்கள். அங்கு நன்றாக குடித்து விட்டு கும்மாளம் போடுகிறார்கள். விடிந்து பார்த்தால் ஆளில்லாத ஒரு தீவில் நால்வரும் கிடக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ஆனால் , இவர்கள் நால்வரையும் தேர்ந்தெடுத்து இவர்களது வாழ்க்கையில் திருவிளையாடல் நடத்துபவர் சிவபெருமான். அதுதான், நவீன சரஸ்வதி சபதம். நியாயமாகப் பார்த்தால நவீன திருவிளையாடல் என்றுதான் வைத்திருக்க வேண்டும். சிவபெருமான், பார்வதி, விநாயகர், முருகர், நாரதர், சரஸ்வதி என இந்துக் கடவுள்களை இந்த காலத்திற்கு ஏற்ற படி கம்ப்யூட்டர், ஐ பாட், ஆங்கிலப் பேச்சு என கலாய்த்திருக்கக் கூடாது. ஏதோ, பள்ளி ஆண்டு விழாவில் ஒரு நாடகத்தைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது. ஒரு ஆளில்லாத தீவில் நான்கு பேர் மாட்டிக் கொண்டால் அப்புறம் எப்படி கதை நகர்வது ? அதுதான் இங்கும் ஏற்பட்டிருக்கிறது. படத்திலேயே மனோபாலா கேரக்டர் மூலம் இதற்கு மேலும் ஏதாவது செய்யவில்லை என்றால் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் படத்தைப் பற்றி முதல் பாதி அருமை, இரண்டாம் பாதி ஸ்லோ என கலாய்ப்பார்கள் என சொல்லியும் கூட கதை நகரவில்லை. ஒரு சில காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் அனைத்திலும் நான்கு பேருமே குடித்துக் கொண்டேயிருப்பதால் அவற்றைப் பற்றி என்ன எழுதுவது… அதிலும் விடிவி கணேஷை சிவாஜி ரேஞ்சுக்கு நடிக்க வைக்கிறோம் ‘சரஸ்வதி சபதம்’ படத்தைக் கிண்டலடித்திருப்பது கற்பனை வறட்சியின் உச்சக்கட்டம். ‘காத்திருந்தாய் அன்பே’…பாடலில் மட்டுமே ஹீரோயின் பளிச்சிடுகிறார். கொஞ்ச நேரமே வந்து அதன் பின் கிளைமாக்சில் மட்டும் வருகிறார் ஹீரோயின் நிவேதா தாமஸ். ‘செக்ஸ்’ டாக்டர் சித்ரா லட்சுமணன் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். பாடல்களுக்கு பிரேம், பின்னணிக்கு கண்ணன் இசைத்திருக்கின்றனர். நவீன சரஸ்வதி சபதம் – சராசரிக்கும் கீழே….

Read Previous

விடியும் முன் – விமர்சனம்

Read Next

நான் நன்றாகத்தான் இருக்கிறேன்… – சமந்தா