முண்டாசுப்பட்டி – விமர்சனம்

நிச்சயமாக வழக்கமான சினிமா கிடையாது, வழக்கமான காதல் காட்சிகள் கிடையாது , ஹீரோவும் ஹீரோயினும் தொட்டு கூட நடிக்கலன்னா பார்த்துக்குங்க, குத்துப்பாட்டு கிடையாது, இப்படியெல்லாம் ஒரு படம் வந்து ரசிகர்களை ரசிக்க வைக்க முடியுமா ? என்ற கேள்விக்கு இந்த படம் விடையாக அமைந்துள்ளது. அறிமுக இயக்குனர் ராம் குமார் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் நேரடியாக ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதே படத்தை குறும்படமாக இயக்கியது மட்டுமே இதற்கு முந்தைய அனுபவம். பரவாயில்லை, ரசிகர்களை நகைச்சுவை என்னும் அஸ்திரத்தால் கட்டிப் போட்டு விடலாம் என்று நினைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ‘முண்டாசுப்பட்டி’ என்ற ஒரு கிராமம். இந்த கிராமத்திற்குள் இருக்கும் யாருமே போட்டோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவ்வளவு ஏன், காமிராவைப் பார்த்தாலே ஓடி விடுவார்கள். அதற்குக் காரணம் ஒரு பிளாஷ்பேக். அப்படிப்பட்ட ஒரு கிராமத்திற்குள் போட்டோ எடுப்பவராய் நுழைகிறார் விஷ்ணு விஷால், கூடவே அவருடைய வலது கை காளி வெங்கட். புகைப்படம் எடுக்கச் செல்பவர் அங்கு பார்க்கும் நந்திதாவையும் சேர்த்து தனது மனதுக்குள் படம் பிடித்து வந்து விடுகிறார். விதி, அவரை வலியச் சென்று அந்த ஊருக்குள் தள்ளி விடுகிறது. நந்திதாவுக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் விஷ்ணு தன்னுடைய காதலில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். இது மாதிரியான படத்தை கண்டிப்பாக வரவேற்றே ஆக வேண்டும். வழக்கமாக, அரைத்த மாவையே அரைக்காமல் புதிதாக ஒரு கதையை யோசித்ததற்காக இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். பழங்காலத்தில் இருந்த ஒரு நம்பிக்கையையே கதையாக யோசித்து அதற்குத் தகுந்தபடி காட்சிகளை அமைத்து, கலகலப்பாக படத்தைக் கொடுத்திருக்கிறார். விஷ்ணு விஷால், அந்த 80களின் தோற்றத்தில் மாநிறக் கலருக்கு அப்படியே பொருந்திப் போகிறார். ஆனால், இயக்குனருக்கு இவர் மீது என்ன கோபமோ, சரியான ‘விக்’கை பொருத்தாமலே விட்டிருக்கிறார். கொஞ்சம், கமல்ஹாசன் கிட்ட கடன் கேட்டிருந்தால் கூட அழகா செஞ்சித் தர ஏற்பாடு பண்ணியிருப்பாரு. ஆனாலும், போகப் போக அந்தக் குறையைக் கூட தன்னுடைய நடிப்பால் மாற்றிவிடுகிறார் விஷ்ணு. இவருக்கும் நந்திதாவுக்கும் இடையிலான காதலில் பேச்சை விட பார்வைதான் அதிகம். ‘சைட்’ அடித்து நிறைய அனுபவம் இருக்கும் போல, அந்தக் கால இளைஞர்கள் எப்படிச் செய்வார்களோ அப்படியே செய்திருக்கிறார். விட்டுடாதீங்க பாஸ்…நல்ல கதாபாத்திரமா தேடிப் பிடிங்க. ‘அட்டகத்தி’ நந்திதா, ‘அழகுக்குட்டி நந்திதான்னுதான் சொல்லணும். ஒரு பெங்களூரு பொண்ணுக்கு எப்படி தமிழ்நாட்டோட கிராமத்து கெட்அப்புலாம் அப்படியே பொருந்திப் போகுதோ. ஒரு சில நடிகைகளுக்கு மட்டும்தான் எந்த விதமான தோற்றமும் பொருத்தமா இருக்கும். சில காட்சிகளில் அந்த 80களின் நாயகி ஷோபாவை ஞாபகப்படுத்துகிறார். இன்னும் கொஞ்சம் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். அடிக்கடி எட்டிப் பார்க்கிறதோட இவர் கேரக்டரை வச்சிருக்காரு இயக்குனர். படத்தோட கலகலப்புக்கு இரண்டே பேரு உத்தரவாதம். முதல் பாதியில காளி வெங்கட். சமயத்துக்கேத்தபடி டைமிங் டயலாக்ல சிரிக்க வச்சிடறாரு. அப்புறமா இவரையே ஓவர் டேக் பண்ணிடறாரு அந்த ‘முனீஷ்காந்த்’ ராமதாஸ். இவரோட நடிப்புக்கு அந்த வித்தியாசமான குரல் ரொம்பவே உதவியா இருக்கு. முயற்சி செய்தால் முன்னணி நகைச்சுவை நடிகரா வரலாம். ஷான் ரோல்டன் இசையில் ஒரு சில பாடல்களே ஹம் செய்ய வைக்கின்றன. இருந்தாலும் தியேட்டரை விட்டு வெளியில் வந்தால் ஞாபகம் இல்லை. கிராமத்தை உள்ளது உள்ளபடி காட்டியிருக்கிறது ஷங்கரின் ஒளிப்பதிவு. அழுத்தமான காட்சிகளோ, திடுக்கிடும் திருப்பங்களோ இல்லாமல் தெளிந்த நீரோடை போலவே காட்சிகள் நகர்கின்றன. இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாமோ என்று யோசிக்க வைத்திருக்கிறது. சேர்த்து வைத்து இரண்டாவது படத்தில்  உழைத்தால் இயக்குனர் அடுத்தடுத்து பெயர் வாங்க வாய்ப்புள்ளது. முண்டாசுப்பட்டி – சிரிப்பூர்…  

Read Previous

நான்தான் பாலா – விமர்சனம்

Read Next

ரஜினிகாந்தைக் கவர்ந்த ‘முண்டாசுப்பட்டி’…

Most Popular