குறும்புக்கார பசங்க – விமர்சனம்

kurumbukara pasangaதயாரிப்பு – ஸ்ரீ பூங்காவனம் சினி கிரியேஷன்ஸ், ஸ்ரீ பெரியாயி பிக்சர்ஸ் இயக்கம் – டி. சாமிதுரை இசை – அருள்ராஜ் ஒளிப்பதிவு – கே. பாண்டியன் பாடல்கள் – சினேகன், செ. கவின்பா படத்தொகுப்பு – மகாவிஷ்ணு கலை – ஏ.சி. சேகர், லேனா நடனம் – பாலகுமாரன், ராதிகா சண்டைப் பயிற்சி – ஆக்ஷன் பிரகாஷ்

நடிப்பு – சஞ்சீவ், மோனிகா, பாண்டியராஜன், மனோபாலா, கே. ரவிராஜன் மற்றும் பலர்.

வெளியான தேதி – ஜனவரி 4, 2013.

ஒரு ஊரில் வெட்டித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் நான்கு இளைஞர்கள், அவர்களுக்குள் இருக்கும் நட்பு, அவர்களின் ஒருவனின் காதல், இதுதான் படத்தின் கதை.

சஞ்சீவ் படித்து முடித்து (?) விட்டு ஊரில் இன்னும் 3 நண்பர்களுடன் எப்போதும் வெட்டியாக சுற்றிக் கொண்டிருப்பவர். இவருக்கும் நண்பர்களுக்கும் டீக்கடை, ஆலமரம், பஸ் ஸ்டார், இப்படி ஏதாவது ஒரு இடத்தில் தினசரி பொழுது கழிகிறது.

சஞ்சீவுக்கும் அதே ஊரில் இருக்கும் மோனிகாவுக்கும் காதல். எந்த எதிர்ப்பும் இல்லாமல் வளர்ந்து வருகிறது. அதே சமயம், அந்த ஊர் பெரிய மனிதர் ரவிராஜனின் தங்கையை, சஞ்சீவும் நண்பர்களும் சேர்ந்து அவரது காதலனுடன் ஊரை விட்டு ஓடுவதற்கு உதவி செய்கிறார்கள். இதனால் கோபமடையும்  ரவிராஜன் சஞ்சீவ் மற்றும் அவரது நண்பர்களை பழி வாங்கத் துடிக்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் கிளைமாக்ஸ்.

ஒரே நாளில் சஞ்சீவ் நடித்த இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. இரண்டு படத்திலும் கிராமத்து கதாபாத்திரம்தான். வித்தியாசப்படுத்த அவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இந்த படத்தில் ‘மீசை’ மட்டுமே வித்தியாசம். கூடவே நடிப்பில் கொஞ்சம் குறும்பு. ஒரு வேளை இந்த படத்தில் அவரது வயதுக்கேற்ற  ‘அழகி’ மோனிகா இருப்பதாலோ என்னமோ. காதல் காட்சிகளில் காதலைக் கொட்டுகிறார்.

நாயகியாக ‘அழகி’ மோனிகா. உண்மையிலேயே இவ்வளவு அழகான மோனிகாவிற்கு தமிழில் சரியான படங்களே அமையவில்லை என்பதுதான் உண்மை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக ஆன பலர் முன்னணி ஹீரோயினாக உயர்ந்திருக்கிறார்கள். பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் இவருக்கு இன்னும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை, சீக்கிரமே கிடைக்க வாழ்த்துக்கள்.

சஞ்சீவ் நண்பர்களின் அந்த குண்டான நடிகர் மட்டும் ரொம்பவே குறும்புக்காரராக இருக்கிறார். அதிலும் ஊரிலுள்ள பெண்ணைப் பற்றி அவரிடம் விசாரிக்கும் காட்சி அவ்வளவு குறும்பாக உள்ளது.

வில்லனாக படத்தின் தயாரிப்பாளர் ரவிராஜன். அவருக்கு டப்பிங் குரல் போல. பொருத்தமாக இல்லை.

பாண்டியராஜன், மனோபாலா இவர்களும் லிஸ்டில் இருக்கிறார்கள்.

பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒன்று கூட நினைவில் நிற்கவில்லை. பின்னணி இசையில் சத்தம் அதிகம்.

கிராமத்து பசங்களிடம் குறும்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் இந்த படத்தில் அந்த குறும்பை கொஞ்சமாகவே காட்டியிருக்கிறார்கள். இன்னும் கலகலப்பாக படத்தை நகர்த்தியிருக்கலாம்.

குறும்புக்கார பசங்க – பெயரில் இருக்கும் குறும்பு படத்தில் இல்லை.

 

Read Previous

நண்பர்கள் கவனத்திற்கு – விமர்சனம்

Read Next

‘சேட்டை’யை ரசித்த ஆர்யா