தமிழ் சினிமா எத்தனையோ அண்ணன், தங்கை பாசக் கதைகளைப் பார்த்திருக்கிறது. இந்த ‘கொடி வீரன்’ நல்ல எண்ணம் கொண்ட அண்ணன், தங்கை பாசத்தையும், கெட்ட எண்ணம் கொண்ட அண்ணன் தங்கை பாசத்தையும் சொல்லும் படம். தங்களது தங்கைகளுக்காக நாயகனும், வில்லனும் மோதிக் கொள்வதுதான் படத்தின் கதை.
கதை
ஊரில் சாமியாடி ஆக இருக்கும் சசிகுமாரின் பாசத் தங்கை சனுஷா. பக்கத்து ஊரில் தங்கை பூர்ணாவுக்காகவும், அவரது கணவன் இந்திரகுமாருக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்பவர் பசுபதி. பட்டாசு தீ விபத்தில் பல பேர் மரணத்திற்குக் காரணமான இந்திரகுமாரைக் கைது செய்யத் துடிக்கிறார் கோட்டாட்சியர் ஆன விதார்த். சசிகுமாரின் தங்கை சனுஷாவுக்கும் விதார்த்துக்கும் திருமணம் நடக்கிறது. விதார்த்தைக் கொலை செய்தே தீருவேன் என்ற வெறியில் இருக்கிறார் பசுபதி. தங்களது தங்கைகளின் கணவர்களைக் காப்பாற்ற சசிகுமாரும், பசுபதியும் நேருக்கு நேர் மோதிக் கொள்கிறார்கள். அவர்களில் யார் பாசம் வென்றது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இயக்கம்
இயக்குனர் முத்தையா இன்னும் எத்தனைப் படங்களில்தான் சாதியை மையப்படுத்திய படத்தை எடுப்பாரோ தெரியவில்லை. ஊரில் இருக்கும் ஒரு நல்லவனுக்கும், ஒரு கெட்டவனுக்கும் ஆன கதை, இடையில் சாதிப் பெருமை என்பதெல்லாம் பார்த்துப் பார்த்து சலித்துப் போனவை. கிராமத்துத் திருவிழாக்கள், முறைகள், ஆகியவற்றை அழுத்தமாகப் பதிய வைப்பவர் இந்த கத்தி, ரத்தம், பகை ஆகியவற்றை விடவே மாட்டார் போலிருக்கிறது. ஊருக்குப் போற பாதையை மாத்துங்க பாஸு…..
நடிப்பு
சசிகுமார் அதே டிரேட் மார்க் கிராமத்து நாயகன். வேட்டி, சட்டை, கொஞ்சம் பெரிய மீசை, தாடி என வழக்கமான தோற்றம். வழக்கம் போலவே வராத காதலையும், காமெடியையும் கஷ்டப்பட்டு வரவைக்கிறார். தங்கை மீதான பாசத்தில் மட்டும் பாசக்காரராக மனதில் பதிகிறார்.
நம் பக்கத்துவீட்டுப் பெண் போல அப்படியே பாசக்காரப் பெண்ணாக சனுஷா. மற்றவர்கள் எல்லாம் நடிக்க வேண்டுமே என கொஞ்சம் ஓவராகவே நடிக்க சனுஷா மட்டுமே இயல்பாக நடித்திருக்கிறார். மகிமாவிற்கு அதிக வேலையில்லை, குடும்பப் பாங்கான கதாநாயகிகளுக்கு தமிழில் கொஞ்சம் பஞ்சம், முயன்றால் இன்னும் சில வருடங்கள் நிலைத்திருக்கலாம். பூர்ணா படத்திற்காக நிஜமாகவே மொட்டை எல்லாம் அடித்துக் கொண்டு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார். பசுபதி, அதே..அதே..ஆவேச ஆயிரத்தொன்றாவது வில்லத்தன நடிப்பு. கோட்டாட்சியர் ஆக விதார்த் நிறைவான நடிப்பு.
இசை
என்.ஆர். ரகுநந்தன் இசையில் ‘களவாணி…’ பாடல் ஈர்ப்பான ஒரு பாடல். சசிகுமார் வரும் காட்சிகளில் எல்லாம் ஒரு ‘இன்ட்ரோ’ மியூசிக் கொடுத்து அதிர வைக்கிறார்.
படத்திற்கு +
அண்ணன், தங்கை பாசக் காட்சிகள், கிராமத்துத் திருவிழாக்களின் பதிவு.
படத்திற்கு –
பார்த்து சலித்துப் போன பழி வாங்கல், க்ளிஷேவான பல காட்சிகள், படத்தின் நீளம்.