தமிழ்த் திரையுலகில் பெரிய படங்களும், பெரிய நட்சத்திரங்களின் படங்களும்தான் அதிகமான கவனத்தை ஈர்க்கின்றன என்பது பல ஆண்டு காலமாக இருக்கும் ஒன்று. ஆனால், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வந்து நம்மை அசர வைக்கும் படங்களும் அவ்வப்போது வந்து கொண்டுதானிருக்கின்றன. இப்படிப்பட்ட படங்களுக்கும் சினிமாவை நேசிக்கும் ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தர வேண்டும். அந்த விதத்தில் பல படங்களுக்கு மத்தியில் இன்று வெளியாகும் படம்தான் ‘கோடை மழை’. ஒரு அண்ணன் – தங்கை இடையிலான பாசத்தையும், காதலன் – காதலி இடையிலான காதலையும், எந்த ஒப்பனையும் இல்லாமல் நம் மனதுக்கு மிக நெருக்கமாக யதார்த்தமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கதிரவன். ஊரிலுள்ள பலருக்கும் ஆண்டாண்டு காலமாக திருட்டுதான் தொழில். ஆனால், அப்படியெல்லாம் ஊர் செய்த தொழிலைச் செய்யாமல் நாட்டுக்காக உழைக்கும் ராணுவ வீரனாக இருக்கிறார் கண்ணன். விடுமுறைக்காக ஊருக்கு வந்தவருக்கு அந்த ஊரின் இன்ஸ்பெக்டரான களஞ்சியத்தின் தங்கை ஸ்ரீபிரியங்காவைப் பார்த்ததுமே காதல். அதே சமயம் சிறு வயதிலிருந்தே தன்னுடன் நண்பனாகப் பழகிய ஒருவன் திருட்டுத் தொழில் செய்கிறான் என்பது தெரிந்ததும் அவனது நட்பையே முறித்துக் கொள்கிறான் கண்ணன். நட்புக்கு மதிப்பு கொடுத்து திருட்டுத் தொழிலை விட்டுத் திருந்தி வாழ்ந்த நண்பனால் கண்ணன் காதலுக்கு ஒரு பெரும் பிரச்சனை உருவாகிறது. அது என்ன, என்பதுதான் படத்தின் நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ். அறிமுக நாயகன் கண்ணன். யதார்த்தமான பக்கத்து வீட்டுப் பையன் முகம். எந்தக் காட்சியிலும் அவரை நடிக்கிறார் என்று சொல்ல முடியாத அளவிற்கு அவ்வளவு யதார்த்தமாக தனது கதாபாத்திரத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறார். ஒரு காட்சியில் கூட ‘அடடா என்ன நடிப்பு’ என மிகைப்படுத்தல் இல்லாத நடிப்பே அவரைப் பற்றி இன்னும் சொல்ல வைக்கிறது. இவரைப் போன்ற யதார்த்தமான நடிகர்கள் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனர்களால் கவனிக்கப்பட வேண்டும். ஸ்ரீபிரியங்கா, என்னமோ தெரியவில்லை, இவரது நடிப்பைப் பார்த்தாலே அந்தக் கால ஷோபா தானாக ஞாபகத்திற்கு வருகிறார். கிராமத்துப் பெண்கள் என்றாலே தனி அழகு. அதிலும் அந்தக் கதாபாத்திரங்களில் நடிக்கும் போது இவர் இன்னும் அழகாகத் தெரிகிறார். ஒரு பக்கம் காதலன், மறுபக்கம் அண்ணன் என பாசத்திலும், காதலிலும் தடுமாற்றம் இல்லாத தவிப்பான நடிப்பு ஸ்ரீபிரியங்காவை பிரகாசிக்க வைக்கிறது. இயக்குனர்கள் பலரும் நடிகர்களான வரிசையில் களஞ்சியம் ஏற்கெனவே நடிகராக மாறியவர்தான். இருந்தாலும் இந்தப் படம் அவரது நடிப்பாலும், தோற்றத்தாலும் இன்னும் பேசப்படும். இமான் அண்ணாச்சியின் நகைச்சுவை படத்தில் தனி டிராக்காக வந்தாலும் இடைச் செருகலாகத் தெரியவில்லை. கண்ணனின் நண்பனாக நடித்துள்ளவரும் படத்தில் தன் மீதான முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு அழுத்தமாக நடித்திருக்கிறார். ஸ்ரீபிரியங்காவின் அண்ணியாக நடித்திருப்பவர் சில காட்சிகளில் வந்தாலும் கவனிக்கப்படுகிறார். சாம்பசிவம் இசையமைப்பில் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். மதுரை மண்ணின் வாசம் பேசிய வைரமுத்துவின் பாடல்கள் நெல்லைச் சீமையின் வாசம் பேசுகின்றன. வறண்ட பூமியைக் கூட தனது ‘ஃபிரேம்’களால் கவனிக்க வைக்கிறார் படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கதிரவன். கோடை ஆரம்பமாவதற்கு முன்பே இந்த ‘கோடை மழை’ உங்களைக் குளிர வைக்கும். நல்ல படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்தப் பட்டியலில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.