காளீஸ் இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், ஜீவா, நிக்கி கல்ரானி, அனைகா சோதி, கோவிந்த் பத்மசூர்யா, ஆர் ஜோ பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கீ’.
சைபர் கிரைம் பற்றிய ஒரு படம். நமது மொபைல் போன்களை ஹேக்கர்கள் யார் வேண்டுமானாலும் ஹேக் செய்து நம் ரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாம் என அதிர்ச்சியான கதையைக் கொண்ட படம்.
பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாம் பதிவிடும் அனைத்துமே எந்த ரகசியமும், ஒளிவு மறைவும் இல்லாமல் யார், யாருக்கோ பரப்பி வைக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி நம்மைப் பற்றி பரவும் விஷயங்கள் சமயங்களில் நமக்கு எதிராகவே திரும்பும் என்பதையும் அதிர்ச்சிகரமான உண்மையுடன் சொல்லியிருக்கும் படம்தான் கீ.
இந்தப் படத்தை டெக்னாலஜி படமாக மட்டும் சொல்லாமல் காமெடி, காதல், சென்டிமென்ட் என சேர்த்து சொல்ல இயக்குனர் ஆசைப்பட்டதால் மெயின் கதையிலிருந்து படம் கொஞ்சம் நகர்ந்து சுவாரசியத்தைக் கொஞ்சம் குறைக்க வைக்கிறது.
ஜீவா ஒரு ஜாலியான கல்லூரி மாணவர். எந்தவிதமான கம்ப்யூட்டரையும், மொபைல் போனையும் அவருடைய ‘பாட்ஷா’ வைரசால் ஹேக் செய்துவிடுவார். அவருடைய தோழியாகப் பழக ஆரம்பிக்கும் அனைகாவின் கொலைக்குப் பிறகு அவருக்கும் ஹேக் செய்து பணம் சம்பாதிப்பதையே தொழிலாக வைத்திருக்கம் கோவிந்த் பத்மசூர்யாவுக்கும் இடையே மோதல் வருகிறது. பத்மசூர்யா சம்பந்தப்பட்ட ரகசியத்தை ஜீவா வைத்திருக்கிறார். அதைக் கைப்பற்ற பத்மசூர்யா துடிக்கிறார். இதன் பின்ன என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
ஒரு வழக்கமான இளம் நாயகன் கதாபாத்திரத்தில் ஜீவா. ஜாலியாக நடித்துவிட்டுப் போகிறார். காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் அவர் கதாபாத்திரத்தில் வைத்துவிட்டார் இயக்குனர். இந்தக் கதைக்கு முற்றிலும் ஆக்ஷன் சம்பந்தமாகவே வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
நிக்கிக்கு அவ்வளவாக வாய்ப்பில்லை. ஜீவாவின் பெற்றோர்களாக ராஜேந்திர பிரசாத், சுகாசினி சென்டிமென்ட்டில் நனைய வைக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.
விஷால் சந்திரசேகரின் இசையில் பின்னணி இசை ஓகே. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
இந்தக் காலத்திற்கேற்ற வித்தியாசமான கதை. அதை இன்னும் சுவாரசியமாக ஆக்ஷனுடன் சொல்லியிருந்தால் பெரிய த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.
கீ – இன்னும் கொடுத்திருக்கலாம்.