தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களில் கொஞ்சம் வித்தியாசமான படங்களைக் கொடுப்பதில் பார்த்திபனும் ஒருவர். ‘புதிய பாதை’ படத்திலிருந்தே அவருடைய ‘டச்’-ஐ ஒவ்வொரு படத்திலும் பார்க்கலாம். கடைசியாக அவர் இயக்கிய படமான ‘வித்தகன்’ மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அதற்கு முன்னும் அவர் இயக்கி, நடித்து வெளிவந்த “பச்சக் குதிர, குடைக்குள் மழை” ஆகிய படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை இயக்க மட்டும் செய்திருக்கிறார். அவர் பாணியில் சொல்வதென்றால் இந்தப் படத்தில் நிறைய இடங்களில் ‘டைரக்டர் டச்’ அழுத்தமாகவே இருக்கிறது. படம் ஆரம்பிக்கும் போதே படத்தில் கதையே இல்லை என்று அவரே சொல்லி விட்டாலும் ‘திரைக்கதை வசனம் இயக்கம்’ ஆகியவற்றில் முன்னணிக்குச் சென்றிருக்கிறார். அவர் கதை இல்லை என்று சொன்னாலும் படத்தைப் பார்த்துவிட்டு இருக்கும் கதை என்ன என்பதை சொல்வதுதானே நமது வேலை. சந்தோஷ் – அகிலா கிஷோர் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர். சந்தோஷ் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்து தனியாக படம் இயக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். தனது உதவியாளர்கள், அனுபவம் வாய்ந்த தம்பி ராமையா ஆகியோருடன் வீட்டிலேயே கதை விவாதம் செய்து கொண்டிருக்கிறார். அதற்கு முதலில் சந்தோஷின் மனைவி அகிலாவும் சம்மதிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படும் பிரச்சனையால் வீட்டில் கதை விவாதம் நடத்தக் கூடாதென மனைவி அகிலா சண்டை போட ஒரு பூங்காவிற்கு கதை விவாதம் இடம் பெயர்கிறது. அதன் பின் தம்பி ராமையா தயவால் ஒரு தயாரிப்பாளர் கிடைக்க அவரது அலுவலகத்திலேயே அமர்ந்து கதை விவாதம் நடத்துகிறார்கள். அந்த தயாரிப்பாளர் ஏமாற்றிய குற்றத்திற்காக கைதானாலும், அவருடைய அவலுவலகத்தையே தொடர்ந்து பயன்படுத்தி வேறு ஒரு தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்கிறார் சந்தோஷ். அதன் பின் அந்த தயாரிப்பாளர் இவருக்கு படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். படத்தின் உண்மையான நாயகன் என்று சொன்னால் அது தம்பி ராமையாதான். அடடா..அவர் வாயைத் திறந்தாலே நக்கலும், நையாண்டியும் என்னமாய் வந்து விழுகிறது. தான் சொல்ல நினைக்கும் அத்தனை விஷயங்களையும், அவர் கதாபாத்திரம் வாயிலாக ‘நச் நச்’ என்று சொல்கிறார் பார்த்திபன். அதிலும் அந்த ‘குறும்படம் பண்ற குரங்குகளா’ சில குரூப்புகளை தாக்குவது போலவே உள்ளது. ‘மைனா, கும்கி’ படங்களை விட மிகமிகப் பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் தம்பி ராமையா. விருது வழங்கும் குழுவினர்களே தயவு செய்து தம்பி ராமையாவை உங்கள் தேர்வுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். பெயருக்கு நாயகன் சந்தோஷ், அதாவது ஜோடியாக இருப்பவரைத்தானே காலம் காலமாக நாயகன் என சொல்வது வழக்கம். ஒரு உதவி இயக்குனருக்குரிய தோற்றம் இருந்தாலும் அவருடைய முகத்தில் ‘மலையாள’ வாடை அதிகமாகவே இருக்கிறது. அது மட்டுமல்ல தோற்றத்தில் ஒரு ‘ரிச்’ லுக்கும் இருக்கிறது. இவர் படம் எடுக்க இவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று சொன்னால், அவருடைய தோற்றத்தை வைத்து நம்ப முடியாமல் போகிறது. எப்போதும் இறுக்கத்துடனேயே இருப்பது ஏனோ ?. அழகான மனைவியின் பக்கத்தில் வரும் போது மட்டும் கொஞ்சம் சிரிக்கிறார், நிறைய வழிகிறார். சந்தோஷ் மனைவியாக அகிலா கிஷோர். கணவன் மீது உள்ள தீராத காதலால் அவர் வேலைக்குப் போய் கணவனின் கதை விவாதத்திற்கு உதவி செய்கிறார். இப்படி ஒரு மனைவி அமைந்தால் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் சீக்கிரமே முன்னேறி விடலாம். ஒரு கட்டத்தில் ஒரு சராசரி மனைவியின் வாழ்க்கை வாழவும் ஆசைப்படுகிறார். அவருடைய பக்கத்து நியாயம் அதிகமாக இருந்தாலும், கணவன் மீதான காதலில் குறை வைக்கவில்லை. தமிழ் சினிமாவிற்கு அழகான, உயரமான, நடிக்கவும் தெரிந்த ஒரு புது கதாநாயகி கிடைத்திருக்கிறார். உதவி இயக்குனர்களாக நடித்திருக்கும் சாஹித்யா ஜெகன்னாதன், விஜய் ராம், தினேஷ், லல்லு அனைவருமே புதுமுகங்கள், அவரவர் நடிப்பில் குறை வைக்கவில்லை. அதிலும் அந்த திருடனாக வந்து தம்பி ராமையாவை நக்கலடிப்பர் முயற்சித்தால் ‘மாடர்ன்’ சந்தானமாக வலம் வரலாம். விஷால், விஜய் சேதுபதி, டாப்ஸி, பிரகாஷ்ராஜ் மற்றும் சேரன் ஆகியோர் ஒரே காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் வந்து போகிறார்கள். ஆர்யா – அமலா பால் மட்டும் நான்கைந்து காட்சிகளில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் இருவருக்குமிடையேயான ஜோடிப் பொருத்தம் அழகாக அமைந்திருக்கிறது, நல்ல செலக்ஷன், ஒரு முழு நீளப்படமே எடுக்கலாம். தமன், விஜய் ஆண்டனி, ஷரத் மற்றும் அல்ஃபோன்ஸ் ஜோப் இசையமைத்துள்ள பாடல்களில் அல்ஃபோன்ஸ் இசையமைத்துள்ள ‘காத்தில் கதையிருக்கு..’ மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையை சத்யா அமைத்திருக்கிறார். ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே படம் சுற்றிச் சுற்றி வருகிறது. வழக்கமான சினிமாவைப் பார்ப்பது போன்ற உணர்வு இல்லை. ஒரு வரியில் சொல்லிவிடக் கூடிய கதைதான், ஆனால் வசனங்கள் மூலம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார் பார்த்திபன். முதல் பாதி வேகமாக ஓடி விட, இடைவேளைக்குப் பின் திரைக்கதை வேகமாக நகர மறுக்கிறது. இருந்தாலும் அறிமுக நடிகர்களை வைத்து ஒரு வித்தியாசமான முயற்சி, குறைந்த பட்ஜெட்டில் படம் தயாராகி இருப்பின், நல்ல வசூலைக் குவித்து லாபத்தையும் விடலாம். கதை திரைக்கதை வசனம் இயக்கம் – “வசனம் இயக்கம்” டபுள் ஓ.கே.