தயாரிப்பு – சுந்தர் பிக்சர்ஸ் – சுந்தர் . கே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – த. பிரபு ராஜ சோழன் இசை – கண்ணன் ஒளிப்பதிவு – சந்தோஷ் ஸ்ரீராம் – சஞ்சீவி படத்தொகுப்பு – பி. லெனின் நடனம் – அசோக்ராஜ், கல்யாண், ராபர்ட் சண்டைப் பயிற்சி – ராக் பிரபு மக்கள் தொடர்பு – நிகில் வெளியான தேதி – 22 மார்ச் 2013
‘ஆயிரம், இரண்டாயிரம் வருஷம் நாம வாழப் போறதில்லை, ஐம்பது, அறுபது வருஷம்தான் வாழப் போறோம், இதுல எல்லாருமே ஒற்றுமையா இருந்துட்டுப் போலாமே’ ங்கற அருமையான கருத்தை சொல்ல முயற்சி பண்ணியிருக்கிற படம்.
எழுதும் போது எவ்வளவு சுவாரசியமாகவும் , அழகாவும் எழுதிடலாம் ஆனால் படமா எடுக்கும் போது, அதே சுவாரசியமும், அழகும் திரையில வந்துட்டால் அந்த இயக்குனர் ஹிட் லிஸ்ட்ல சேர்ந்திடுவாரு.
‘இயக்குனர் ஷங்கர் பட்டறையில் இருந்து வரும் இயக்குனரின் படைப்பு’ என்ற ஒரே காரணத்திற்காக படம் பார்க்க வரும் ரசிகர்களை இயக்குனர் பிரபு ராஜ சோழன் இப்படி ஏமாற்றியிருக்கக் கூடாது.
படத்தை சீரியஸாக எடுப்பதா இல்லை காமெடியாக எடுப்பதா என்ற குழப்பத்திலேயே படத்தை எடுத்திருப்பார் போலிருக்கிறது.
கிராமத்தில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் அஜ்மல் கிராமத்தையும், கிராமத்து பெற்றோரையும் வெறுத்து, ஊர் மக்களின் சொத்தையெல்லாம் அடமானம் வைத்து, பிரான்ஸ் சென்று குடியேறுகிறார். அங்கு திருமணம் செய்து கொட் மனைவியும் ஏமாற்றி விட மகன் அஜ்மலுடன் (டபுள் ஆக்ஷன்) தனியாக வாழ்கிறார்.
இறக்கும் தருவாயில் அப்பா அஜ்மல் அவரைப் பற்றிய உண்மைகளை மகன் அஜ்மலிடம் சொல்லி விட்டு இறக்கிறார். மகன் அஜ்மல், அவரது சொந்த பந்தங்களைத் தேடி இந்தியாவிற்கு வருகிறார். அப்பாவால் ஊரை விட்டு வெளியேறிய சொந்தங்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.
அப்பா, மகன் என இரு வேடங்களில் அஜ்மல். 80களில் நடக்கும் கல்லூரி கதையில் மாணவராக இருக்கும் அப்பா அஜ்மலின் நடிப்பு ஓவரோ ஓவர். கிராமத்து மக்கள் மீதும், பெற்றவர்கள் மீதும் இப்படி யாராவது அளவு கடந்த வெறுப்பை காட்டுவார்களா என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.
இந்தக் கால இளைஞர் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அஜ்மல் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். ஆனாலும், சொந்த பந்தங்களை இணைப்பதற்காக அவர் போடும் நாடகம் அனைத்திலும் ‘நாடகத்தனம்’.
அஜ்மல் ஜோடியாக அபர்ணா பாஜ்பாய். இவரைப் பத்தி ஏதாவது எழுதணும்னு நினைச்சாலும் எழுத முடியலை.
எம்.எஸ். பாஸ்கர் மாதிரி ஒரு காலேஜ் புரொஃபசரைக் காட்டுறது தமிழ் சினிமாவில் இருக்கும் தொன்று தொட்ட வழக்கம். முடியலை…
காமெடிங்கற பேர்ல ஜெகன், ஸ்ரீநாத் நம்மள சிரிக்க வக்க எவ்வளவோ டிரை பண்றாங்க. ஆனால் சிரிக்கத்தான் முடியலை.
கண்ணன் இசையில பப்பி லகரி பாடியிருக்கிற ‘ராஜா ராஜா…’ பாட்டு மட்டும் 80கள்ல வந்த பாட்டு மாதிரியே படமாக்கி ரசிக்க வச்சிருக்காங்க.
‘கருப்பம் பட்டி’ – ‘கருப்பட்டி’ மாதிரி இனிக்க வைக்க நினைச்சி ‘கசப்பு’ மருந்தை கொடுத்துட்டாங்க….