தமிழ் சினிமாவிற்கு இளைய தலைமுறையால் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் ஆரம்பமான இது இந்த ஆண்டும் தொடர்ந்து வருவது ஆரோக்கியமே. சீரியசான, காதலை மாறுபட்ட கோணத்தில் சொன்ன படங்கள் நிறையவே வந்தாலும் இந்த படம் ஒரு குடும்பத்துப் பின்னணியில் நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்திற்கும் இடையிலான சுவாரசியமான ஒரு காதலைக் கொடுத்திருக்கிறது. அறிமுக இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னாவின் அறிமுக சமையலே ருசியாக அமைந்துள்ளது. கொஞ்சம் தப்பினாலும் வேறு பாதைக்கு செல்லக் கூடிய ஆபத்தான கதை. ஆனால், அதை நெளிவு, சுளிவுடன் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார். லேகா வாஷிங்டனைப் பெண் பார்க்க வரும் பிரசன்னாவிற்கு அவரை பார்த்த உடனே பிடித்து விடுகிறது. இருவருக்கும் திருமணம் நிச்சயமாகிறது. எட்டு மாதங்களுக்குப் பிறகு திருமணம் என முடிவாகிறது. இடையில் லேகாவின் பிறந்த நாளன்று இருவரும் தனிமையில் இருக்க வேண்டி வர தப்பு செய்ய சந்தர்ப்பமும் அமைகிறது. ஆனால், பிரசன்னாவில் ஒன்றுமே செய்ய முடியாமல் போய் விடுகிறது. தனக்கு ஏதோ குறை உள்ளதென நினைத்து அதை சரி செய்ய ஜோசியம், சித்த மருத்துவர், ஆங்கில மருத்துவர் ஏன பல இடங்களுக்குச் செல்கிறார். அதற்கெல்லாம் காரணம் மன அழுத்தம்தான் என டாக்டரான கிரேசி மோகன் சொல்கிறார். இதற்கிடையில் லேகாவை எந்த குறையுமில்லாத ஒருவனை திருமணம் செய்து கொள்ள என பிரசன்ன சொல்ல ‘குறை’ உள்ள அவரை ‘குட் புக்’கில் இடம் பெற வைத்துவிடுகிறது. இருந்தாலும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. கடைசியாக திருமணமும் நடக்க, அதன் பிறகு நடக்க வேண்டியது சுபமாக நடந்ததா என்பதுதான் படத்தின் கதை…அடடா…கிளைமாக்ஸ் வரைக்கும் கதைய சொல்லிட்டோமே…. எந்த ஒரு ஹீரோவும் ஏற்று நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரம். ‘குறை’ உள்ள இன்றைய இளைஞன் கதாபாத்திரத்தில் பிரசன்னாவின் நடிப்பு நிறைகுடம். அளவாக, யதார்த்தமாக நடித்து நல்ல மாப்பிள்ளையாக மனதில் இடம் பிடிக்கிறார். அவருக்காகவே உருவாக்கப்பட்ட ‘டெய்லர் மேட்’ கதாபாத்திரம் போல் உள்ளது. அடிக்கடி படங்கள்ல நடிங்க பிரசன்னா, ரொம்ப இடைவெளி விடாதீங்க… ‘ஜெயம்கொண்டான்’ படத்தில் வினய்யின் தங்கையாக நடித்த லேகா வாஷிங்டன்தான் இந்த படத்தின் நாயகி. இன்றைய மாடர்ன் மங்கை. அவருக்கு ‘டப்பிங்’ கொடுத்தவருக்கு 50 சதவீதம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவ்வளவு பொருத்தமான குரல். லேகா லேசாக நடித்தாலும் பின்னணி குரல் பிரமாதப்படுத்தி விடுகிறது. சின்னச் சின்ன நுணுக்கமான எக்ஸ்பிரஷன்களை அழகாகச் செய்திருக்கிறார் லேகா. லேகாவின் அப்பாவாக டெல்லி கணேஷ், நாளிதழுக்கு நடுவே ‘பலான’ புத்தகம் வைத்து படிக்கும் பாசமான அப்பா. அம்மாவாக உமா பத்மனாபன். பிரசன்னாவின் அம்மாவாக கீதா ரவிசங்கர். கல்யாண வீட்டில் ‘புரளி’ பேசும் அந்த மாமி, டாக்டர் சர்மிளா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி கொஞ்சமாக வந்தாலும் கலகலப்பாக்குகிறார்கள். ‘மெல்ல சிரித்தாய்..’ பாடல் இந்த ஆண்டின் சிறந்த மெலடிகளில் ஒன்று. பின்னணி இசையிலும் அட்டகாசம் செய்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் அரோரா. இடைவேளை வரை மிகவும் கலகலப்பாக நகர்கிறது படம். கல்யாண மண்டபத்திற்கு சென்ற பிறகும் அந்த கலகலப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம். அந்த இடத்தில் சில சீரியஸ் காட்சிகள் படத்திற்கு ‘ஸ்பீட் பிரேக்கர். கல்யாண சமையல் சாதம் – சுவையான சாப்பாடு…‘மொய்’ எழுத மறந்துடாதீங்க…